

“இங்க அரசியல் செய்ய வந்தவன் வியாபாரம் பண்றான்; வியாபாரம் செய்ய வந்தவன் அரசியல் பண்றான்; என்னைப்போல் நேர்மையானவங்கதான் இந்த சமூகத்துக்கு ஆக்சிஜன் ” என்ற அனல் பறக்கும் வசனங்களுடன் கூடிய ‘ஆக்சிஜன்’ பட டீஸரை முதலில் காட்டினார் அந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். ‘ஆள்’, ‘மெட்ரோ’ என இரண்டு படங்களை இதற்குமுன் இயக்கியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
‘ஆக்சிஜன்’ தலைப்புக்கான காரணம்?
இது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படமல்ல. நேர்மையா வாழ்றவங்கதான் இந்த உலகத்தோட ஆக்சிஜன். அதுதான் இந்தப் படத்தோட கதையே. நேர்மையாக வாழுகிறவர்கள் மட்டுமே இந்த உலகத்துக்கு பிராண வாயு கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனும் அப்படிப்பட்ட ஒருவர்தான். அதனால்தான் ‘ஆக்சிஜன்’ என்ற தலைப்பை வைத்தேன்.
படத்தில் கதாநாயகி இல்லைபோல் தெரிகிறதே…
இந்தப் படத்தின் கதை மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியே இருக்கும். அசோக்செல்வன், யோகிபாபு தவிர இன்னொரு நடிகரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த மூவருக்குமே காதல் கதை உண்டு. ஆனால், கதையில் காதலுக்கு கொஞ்சமாகத்தான் இடம் கொடுத்திருக்கிறேன்.
டீஸர் முன்னோட்டத்தைப் பார்த்தால் மீண்டும் க்ரைம் த்ரில்லர் படம்தான் எடுத்திருக்கிறீர்கள் போல் தெரிகிறதே?
க்ரைம் சார்ந்த படம்தான். தவறு செய்பவன், தவறைத் தடுப்பவன், தவறால் பாதிக்கப்படுகிறவன் இந்த மூவருக்குள் நடப்பதுதான் திரைக்கதை. இந்த மூவருடைய பின்னணியே கரடுமுரடாக இருக்கும். ஓர் உண்மையை அதன் அருகில் சென்று பார்ப்பதுபோல் காட்டினால்தான் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக வலுக்கட்டாயமாக க்ரைம் சம்பவங்களை என் கதைகளில் திணிப்பதில்லை.
‘மெட்ரோ’ படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்?
நிறையப் பேர் படம் பார்த்துவிட்டு, “உண்மையை எப்படி இவ்வளவு தத்ரூபமாக படமாக்கினீங்க” என்று கேட்டார்கள். படம் பார்த்த பெண்களில் நிறைய பேர் “இனிமேல் ஜாக்கிரதையாக இருப்போம்” என்று என்னிடம் கூறினார்கள். சினிமாவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, பலரும் வந்து சூப்பர் என்று சொல்லும்போது இன்னும் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எனர்ஜி கிடைக்கிறது.
அந்தப் படத்துக்கு தணிக்கையில் பெரும் பிரச்சினை இருந்ததே; தொலைக்காட்சி பதிப்புக்கு தணிக்கை முடிந்துவிட்டதா?
பெரும் பிரச்சினைக்குப் பிறகே திரையரங்குக்கான தணிக்கைச் சான்றிதழ் பெற்றேன். தொலைக்காட்சிப் பதிப்புக்கு 22 வெட்டுக்களைக் கொடுத்து நிறைய காட்சிகளை கருப்பு வெள்ளையில் செய்துக் காட்டினோம். அதற்கும் மறுத்துவிட்டார்கள். பெண்கள் மீது திணிக்கப்படும் க்ரைம் என்பதால் அவர்கள்தான் இப்படத்தைப் பார்க்க வேண்டும். ஆனால் திரையரங்குக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் நிறைய பெண்கள் படத்தைப் பார்க்கவில்லை.
தொலைக்காட்சியில் திரையிட்டால் இன்னும் நிறையப் பேர் பார்ப்பார்களே என்று எண்ணினேன். திரையரங்குப் பதிப்புக்கான தணிக்கை மறுக்கப் படும்போது, அதை மறுதணிக்கைக்கு அனுப்ப முடியும். ஆனால் தொலைக்காட்சிக்கு அது கிடையாது. இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறோம்.
தணிக்கைப் பிரச்சினையால் திரைக்கதை மற்றும் காட்சிகளை கட்டுப்பாட்டுடன் எழுத வேண்டும் என்ற சுயதணிக்கை உணர்வுக்கு வந்துவிட்டீர்களா?
இவ்வளவு அனுபவித்துவிட்டதால் கதை எழுதும்போது கட்டுப்பாட்டுடன்தான் எழுதத் தோன்றுகிறது. ஆனால் ஒரு திரைப்பட இயக்குநரின் கற்பனையை சமூகத்தை அவன் பார்க்கும் பார்வையை இது கட்டுப்படுத்துகிறது. இது நல்ல திரைப்படங்கள், முக்கியமாக உண்மைக்கு நெருக்கமான திரைப்படங்கள் வருவதை தடுக்கும். ஒரு க்ரைம் சித்தரிப்பு என்று வருகிறபோது அதைச் செய்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பையும் காட்டினால் மட்டுமே திரைக்கதையில் க்ரைம் என்பது எடுபடும்.
இந்தக் காட்சிக்கு பிரச்சினை பண்ணுவார்களே அந்தக் காட்சிக்கு சிக்கல் வருமோ என்ற எண்ணம் வந்துக்கொண்டேதான் இருக்கிறது. எந்தக் காட்சிக்கு ஒ.கே சொல்வார்கள், எதற்கு சொல்லமாட்டார்கள் என்கிற விஷயமே புரிய மாட்டேன் என்கிறது. அதேநேரம் தயாரிப்பாளருக்கு நம்மால் கஷ்டம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் கற்பனை ஒரு ‘விக்டிமைப்’ போல நடுங்கிக் கொண்டிருக்கிறது.
பெரிய கதாநாயகர்களுடன் பயணிக்கும் எண்ணம் இல்லையா?
பெரிய படத்துக்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதாநாயகனுடைய கால்ஷீட் தேதிகளுக்கு ஒரு வருஷம் வரை காத்திருக்க வேண்டும் என்றார்கள். ஏற்கெனவே நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். பெரிய கதாநாயகர்களோடு பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. சின்ன படமாக பண்ணும்போது இயக்குநருக்கான சுதந்திரம் இருக்கிறது. சொல்ல வந்த கருத்துக்களை சுதந்திரமாக ஓரளவுக்கு சொல்ல முடிகிறது. அதனால் இப்போதைக்கு சின்ன படங்களில் பெரிய விஷயங்களைக் கையாள விரும்புகிறேன்.
புது ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்க என்ன காரணம்? - விஜய் ஆண்டனி விளக்கம்