

கா
தல் பட சவாரிகளில் சலித்த கதாநாயகர்களின் அடுத்த ஆசை காக்கிச் சட்டை அணிவது. அதன் பளபளப்பு அலுத்தபின் அரசியல் களத்தின் ஆசை மீது திரும்பும். தனது திரைப் பயணத்தில் பத்தொன்பதாவது ஆண்டில் இருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது அரசியல் கதை அதிர்ஷ்டத்தை இந்தப் படத்தில் சோதனை செய்து பார்த்திருக்கிறார். ‘ஸ்பைடர்’ படத்தின் மெகா சறுக்கலை மறக்க வைக்க வேண்டிய கட்டாயம் வேறு. கொரட்டாலா சிவா எழுதி இயக்கிஇருக்கும் அரசியல் த்ரில்லர் வகையில் தலை கொடுத்திருக்கும் அவரின் நம்பிக்கை என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
வாழ்வில் நிறைய கற்றுக்கொள்ளத் துடிக்கும் பட்டதாரி இளைஞன் பரத் ராம். லண்டனில் ஆக்ஸ்போர்டில் ஐந்து பட்டயங்களை அடுத்தடுத்து படித்துக்கொண்டிருப்பவர். உணவு அறிவியல் ஒன்று. தந்தையின் இழப்பால் இந்தியா திரும்பி, ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்க நேரிடுகிறது (கதை நடப்பது 2014-ல்). தந்தையின் இழப்பு, புதுப் பதவி, சிதறிய குடும்பம், அரசியல் நெருக்கடிகள், சற்றே அந்நியமான தாய் மொழி, இடையில் ஒரு மென்மையான காதல் - இவற்றின் நடுவே பரத்தின் அரசியல் சீர்திருத்தப் பயணம் என்ன ஆனது என்பதே கதை.
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஒருமுறை தனது பேட்டியில் “என் கதையை முன்கூட்டியே சொல்லிவிடத் தயார் - ஆனால் நான் எடுப்பதைப் போல எடுக்க என்னால் மட்டுமே முடியும்” என்ற அர்த்தத்தில் கூறியிருந்தார். இன்னொரு சமீபத்திய உதாரணம் ‘அர்ஜுன் ரெட்டி’. மவுனப் பட காலம் தொடங்கி சாறு பிழியப்பட்ட தேவதாஸ் கதையின் அத்தனை அம்சங்களும் படத்தில் இருந்தாலும் சந்தீப் வங்காவின் தேர்ந்த கதை சொல்லும் முறை முற்றிலும் நம்மைக் கட்டிப்போட்டது.
அதேபோல், படத்தின் ஒன்லைனர் ஏற்கெனவே நமக்குத் தெரிந்த வகையாக இருந்தாலும் (தமிழில் ‘முதல்வன்’, தெலுங்கில் ‘லீடர்’) இயக்குநர் கொரட்டால சிவாவின் கதை சொல்லும் முறையும் திரை ஆதிக்கம் செய்யும் மகேஷ்பாபுவின் நட்சத்திரப் பிம்பமும் இப்படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன.
தொடக்கத்திலேயே தனக்கு எதுவும் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டு கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட, சத்தியத்தின் வலிமையை உணர்ந்த ஒன்றாக மகேஷ்பாபு கதாபாத்திரம் வடிவைக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியில் வார்த்தைகள் கேட்டு அதை உபயோகிப்பதில் தொடங்கி, அமர்க்களமான கதாநாயகக் கணங்களை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். தேர்ந்த நடிப்புடன், ஆரவாரமான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய மசாலா அம்சங்களையும் சரியான கலவையில் கொடுத்து கைதட்டல் வாங்க வைப்பது கிட்டத்திட்ட தெலுங்குப் பட உலகுக்கே உரித்தான தேர்ந்த வித்தை. அது இயக்குநருக்கு இந்தப் படத்தில் கைவந்த கலையாகியிருக்கிறது. தியேட்டர் சண்டைக்காட்சி, பத்திரிகையாளர் சந்திப்பு, நிர்வாக ரீதியான மாற்றங்களைச் சித்தரிக்கும் காட்சிகள் ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவாலும் ஸ்ரீகர் பிராசத்தின் படத்தொகுப்பாலும் உயிரோட்டத்துடன் திரையில் விரிகின்றன. அதேநேரம் சுவாரசியமில்லாத சம்பவங்கள், நாடகத்தனமான வசனங்கள் ஆகியவை மூன்று மணி நேரத்துக்கு ஏழு நிமிடங்களே குறைவான இந்தப் படத்தின் பிரம்மாண்ட நீளத்தை உணர வைக்கின்றன.
இவற்றுக்கு அப்பால் படத்தில் நம்மை ஒன்றச் செய்யாமல் தடுப்பவை வேகத்தடையான பாடல்கள். ‘வச்சாடையோ சாமி’ பாடல் மட்டும் விதிவிலக்கு. ‘பாகுபலி 2’-ல் இடம்பெற்ற ‘வந்தாரய்யா’ பாடலின் பாதிப்பில் வெகு நேர்த்தியாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வில்லனின் வலிமையைப் பொறுத்தே கதாநாயகனின் பாத்திரப்படைப்பு சிறக்கும். (அருமை நாயகம் அண்ணாச்சி நினைவிருக்கிறதா?) இந்த அம்சம் சரியாக நிறுவப்படாதது, துணைக் கதாபாத்திரங்களின் வீணடிப்பு, தீபிகா சாயலில் அழகான தோற்றத்துடன் வலம் வந்தாலும் மனதில் பதியாத கதாநாயகியாக கியாரா அத்வானி என கதாநாயகன் நீங்கலான பாத்திரப் படைப்புகள் வலுவின்றி துவளும் நிலையில் படத்தின் மொத்த பாரமும் மகேஷின் தோளில் விழுந்து விடுகிறது. அவரும் அதை உணர்ந்து தன் பங்களிப்பால் படத்தைக் கரை சேர்த்திருக்கிறார். சிறந்த திரை அனுபவமாகவும் இல்லாமல் சராசரிக்கும் சற்று மேலான ஒரு படமாக, ஷங்கரின் ‘முதல்வ’னுக்கு தெலுங்கு கரம் மசாலா சேர்த்த இன்னொரு அத்தியாயம்போல் ஆகிவிட்டது.
தொடர்புக்கு: tottokv@gmail.com
இதை மிஸ் பண்ணிடாதீங்க...