

ஒ
ரு நாட்டின் ராணுவ உளவாளி, இன்னொரு நாட்டில் வாழ நேர்ந்தால்? அவர் ஒரு பெண்ணாகவும் அந்த நாட்டின் ராணுவக் குடும்பத்தில் நம்பிக்கையான மருமகளாகவும் இருந்து, அங்கிருந்து அவர் தாய்நாட்டுக்குத் தகவல் கடத்தும் பணியைச் செய்ய நேர்ந்தால்? அவரின் மணவாழ்வு, உறவுகள், உளவியல் சிக்கல்கள் அவரின் கடமைக்கு எதிரில் சவாலாக வந்தால்? அவர் மாட்டிக்கொண்டால்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் கடற்படை அதிகாரியான ஹரிந்தர் சிக்காவின் ‘காலிங் ஷேமத்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, பவானி ஐயர் மற்றும் கவிஞரும் இயக்குநருமான மேக்னா குல்சார் (பாடலாசிரியர் குல்சாரின் மகள்) எழுதிய திரை வடிவம்தான் ‘ராஸி’. உருது மொழியில் ராஸி என்ற சொல்லுக்கு ‘ஏற்றுக்கொள்ளுதல்’ என்று பொருள்.
கதை: 1970-களில் இந்தியா - பாகிஸ்தான் போருக்கு முந்தைய காலத்தில் இந்திய கல்லூரி ஒன்றில் படித்த இளகிய மனம் கொண்ட பெண் ஷேமத் கான், காஷ்மீரிய உளவாளியான அவளுடைய தந்தை ஹிதாயத் கான் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாக, அவருக்கு மாற்றாக இருக்கட்டும் என்று உளவுப் பணிக்கான பயிற்சியை ஷேமத்துக்கு அளிக்கிறார்கள். பயிற்சி முடிந்ததும் தந்தையின் உளவுப் பணியைத் தொடர, பாகிஸ்தானிய ராணுவ வீரருக்கு மணமுடித்து அனுப்புகிறார்கள். விசுவாசம் மிக்க முன்னாள் உளவாளியின் மகளாக, வாழ்வின் பாதியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரரின் மனைவியாக அவளின் வாழ்வு என்ன ஆகிறது என்பதே கதை.
பார்வை: 1950-களில் துப்பறியும் படங்கள் வரத் தொடங்கிவிட்டாலும் பெண் உளவாளிகள் மற்றும் போராளிகளை மையக் கதாபாத்திரம் ஆக்கிய படங்கள் நம்மிடம் மிகக் குறைவு. குல்சாரின் ‘மாச்சிஸ்’, சந்தோஷ் சிவனின் ‘டெர்ரரிஸ்ட்’, மணிரத்னத்தின் ‘தில்சே’(தமிழில் ‘உயிரே’), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகியன அவற்றில் சில.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சற்றே நாடகத்தனமாக ஓர் அணிலைக் காப்பாற்றும்போது காலில் அடிபட்டு ஊசிக்குப் பயப்படும் கல்லூரி மாணவியாக அறிமுகமாகிறார் ஆலியா பட். அதன்பின் உளவுப் பயிற்சி அளிக்கப்படும்போது உளவு அதிகாரியைக் கேள்விகளால் சுடும் ஆலியா, பாகிஸ்தான் ராணுவ வீரரின் மனைவியாக, இந்தியாவின் உளவாளியாக எனக் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும் ராஸி கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் காட்டிய விதத்தில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
தந்தை ஹிமாயத் கனாக ரஜித் கபூர். இறுக்கமான இந்திய ராணுவ அதிகாரி காலித் மிர்ராக ஜெய்தீப் அஹ்லாவத். தவிக்கும் கணவன் இக்பால் சையத்தாக விக்கி கவுஷல். பிரிகேடியர் சையத்தாக சிஷிர் சர்மா (ஆலியாவுக்கு அடுத்த இடத்தில் இவரின் நடிப்பு அபாரம்), என அனைவருமே அழகான, இயல்பாகத் தத்தமது கதாபாத்திரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஷேமத் கானுக்குக் கொடுக்கப்படும் இயல்பான, சினிமாத்தனம் இல்லாத ராணுவப் பயிற்சிகள் தொடங்கி, தகவல் பரிமாற்றம், அதன் சிக்கல்கள், உறவுகளின் நம்பிக்கை, சந்தேகம் எனத் தேர்ந்த காட்சியமைப்புகள் படத்தின் தரத்தை உயர்த்திவிடுகின்றன. நல்லவன் - கெட்டவன் சார்பு இல்லாமல் ஷேமத் மாட்டிக்கொள்ளக் கூடாது எனப் பார்வையாளன் விரும்பினாலும், அந்த பாகிஸ்தானிய குடும்பம் அவள் மேல் வைத்துள்ள நம்பிக்கை, அவர்களின் தேசபக்தியை, சமமாகப் பார்க்கச் செய்வது இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதைசொல்லலின் வெற்றியாகப் பார்க்க முடிகிறது.
ஷேமத் - இக்பாலின் திருமணம், தொடக்கத்தில் அவர்களின் நட்பு, பின்னர் காதல் என மெது மெதுவாக மலரும் அவர்களின் மென்மையான உறவு, படத்தில் நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள், சில சஸ்பென்ஸ் கணங்கள், அதிர்ச்சிகள், திருப்பங்கள் ஆகியவை வலிந்து திணிக்கப்பட்டவையாக இல்லாததால் அசலான விறுவிறுப்புடன் கதை நகர்கிறது.
மிக முக்கியமாகக் கதையோடு பயணிக்கும் ஷங்கர் – இஷான் - லாயின் பிரமாதமான பின்னணி இசை. கதையை நகர்த்தும் பாடல்கள் (குறிப்பாக ‘ஹே வதன்’ பாடல்), இயல்பு மீறாத ஒளிப்பதிவு, நம்பும்படியான கலை இயக்கம், ஒலி வடிவமைப்பு என எல்லாமும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இந்த நாவலில் ஒளிந்திருந்த திரைப்படத்தைக் கண்டு கொண்டு, அதை எழுதி, இயக்கிய மேக்னா குல்சார், தந்தையின் சாதனைத் தடங்களை மீறிப் பயணிக்க முற்படும் திறமையை ‘ராஸி’ உணர்த்துகிறது.
தொடர்புக்கு: tottokv@gmail.com