திரைசொல்லி - 6: வரலாற்றைத் தோண்டியெடுத்த பெண்!

திரைசொல்லி - 6: வரலாற்றைத் தோண்டியெடுத்த பெண்!
Updated on
3 min read

பாலஸ்தீனத்தின் நினைவில் ஆறாத காயங்களை விட்டுச்சென்ற கரிய வருடம் 1948. அந்த வருடத்தில்தான் ‘நக்பா’ (Nakba) எனப்படும் இனப் பேரிழப்புச் சம்பவம் அங்கு நடைபெற்றது. நக்பா குறித்துத் தெரிந்துகொள்வதற்கு காலத்தின் முன் அத்தியாயங்களுக்கு நாம் நகர வேண்டும். 1917இல், முதல் உலகப் போரின்போது, யூத சியோனிசப் படையின் ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒட்டோமான் பேரரசை பிரிட்டிஷ் அரசு வீழ்த்தியது.

அதற்குப் பிரதியுபகாரமாக, பாலஸ் தீனத்தில் யூத மக்களுக்கான ஒரு தாயகத்தை நிறுவுவதற்கு உதவுவதாக பல்ஃபோ பிரகடனத் தின்கீழ் (Balfour Declaration) அளித்திருந்த உறுதிமொழியைப் பிரிட்டிஷ் அரசு நடை முறைப்படுத்தியது. இதன் வாயிலாக, முதலாம் உலகப் போரில் தன்னுடன் பங்கேற்கும் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் வாழும் யூதர்களின் பரந்த ஆதரவைப் பெற முடியும் என்பது செயல்திட்டம்.

1918 முதல் 1947 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பாலஸ்தீனத்தில் யூத மக்கள்தொகை 6 சதவீதத்திலிருந்து 33 சதவீத மாக அதிகரித்துவிட, 1936இல், சியோனிசக் குடியேற்றக் காலனித்துவத்துக்குப் பிரிட்டிஷ் அரசு ஆதரவளிப்பதை எதிர்த்து பாலஸ்தீனி யர்கள் கிளர்ச்சி செய்தனர். ‘அரபுக் கிளர்ச்சி’ என அழைக்கப்பட்ட அந்தக் கிளர்ச்சியை ஒடுக்கியதில், பாலஸ்தீனியர்களின் 2000க்கும் அதிகமான வீடுகள் சேதாரத்திற் குள்ளாயின. சுமார் 9,000 பாலஸ்தீனியர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு தமது இருப்பையும் இருப்பிடத்தையும் இழந்தனர்.

வெளியேற்றமும் இனவழிப்பும்

யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமான பகை முற்றிக்கொண்டிருந்த நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் குடியேற்றத்துக்குச் சில வரையறைகளைப் பிறப்பித்தது. இந்தச் சூழலில், வெகுண்ட சியோனிச ராணுவப்படை பிரிட்டிஷ் அதிகாரிகளின் மீது பல தாக்குதல்களை நடத்தியது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1947இல், பாலஸ்தீனத்திலிருந்து தன்னுடைய காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. 1948, மே 15 நள்ளிரவில், பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீன ஆதிக்கத்திலிருந்து விலகிக்கொள்ள, அதே நாளில் யூதர்கள் தாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்புக்கு இஸ்ரேல் எனப் பெயர் சூட்டினார்கள்.

இந்நிலையில், டிசம்பர் 1947 முதல் மே 1948 வரை, சியோனிச ஆயுதக் குழுக்கள் தங்கள் நிலம் எனக் கருதிய 220 கிராமங்களிலிருந்து ஏறத்தாழ 4,40,000 பாலஸ்தீனியர்களை வெளியேற்றின. அப்போது நிகழ்ந்த மோதல் வன்முறைகளில் பெரியவர், சிறியவர் எனப் பாகுபாடில்லாமல் இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. இந்த இனவழிப்பு நடவடிக்கையே ‘நக்பா’ என அழைக்கப்பட்டது.

சிதைந்த கனவு

2021இல் வெளியான ‘ஃபர்ஹா’ (Farha) திரைப்படம், 1948ஆம் வருடம் நக்பா பேரழிப்பின் போது அமைதி பூத்திருக்கும் ஒரு கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதலை மையமிடுகிறது. ‘ஃபர்ஹா’ 14 வயது நிரம்பிய சிறுமி. அவளது அன்புத்தோழி ஃபரீதா வார இறுதிநாள்களில் அந்தக் கிராமத்துக்கு வருகிறாள். அவர்களுக்குப் பிடித்தமான அத்தி மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல்களில் அமர்ந்தபடி சிறார்கள் குதூகலத்துடன் உரையாடுகிறார் கள். நகரத்தில் தான் படிக்கும் பள்ளியில் ஃபர்ஹாவின் பெயரைச் சேர்த்திருக்கிறாள் ஃபரீதா. அவள் கிராமத்திலேயே தேங்கிப் போகாமல் நகரத்துக்கு வந்து தன்னுடன் படிப்பைத் தொடரவேண்டும் என்பது ஃபரீதா வின் விருப்பம். ஃபர்ஹாவுக்குப் படிப்பின்மீது தீவிரப் பற்று உள்ளது. தான் படித்தபின் அந்தக் கிராமத்துக்குத் திரும்பி, பெண்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தவேண்டும் என்கிற அர்த்தப்பூர்வக் கனவுள்ளவளாகவும் இருக்கிறாள்.

அவளுடைய தந்தையும் கிராமத்தின் மேயருமான அபு ஃபர்ஹா அவளை நகரத்துக்கு அனுப்ப முதலில் தயங்குகிறார். சந்திக்க வரும் ஃபர்ஹாவின் மாமா அபு வாலிம் ஃபர்ஹாவினது கல்வியின் அவசியத்தை அவரிடம் வலியுறுத்த, சம்மதிக்கிறார். அடுத்த ஊஞ்சல் சந்திப்பில், ஃபர்ஹா தன்னுடைய தந்தை சம்மதம் தந்துவிட்டதை ஃபரீதாவிடம் மகிழ்ச்சியுடன் பகிர்கிறாள். அவளது உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுக்கும் அச்சமயத்தில், கிராமத்துக்குள்ளே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. இருவரும் அதிர்ந்துபோய் செல்ல, மக்கள் கையில் கிடைத்த உடைமைகளோடு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கிருந்து தப்பிவிடும் நோக்கில் ஃபரீதாவின் தந்தை தனது வாகனத்தில் ஃபரீதாவை ஏற்றிக்கொள்ள, அவள் ஃபர்ஹா வையும் உடனழைக்கிறாள். ஃபர்ஹாவுக்குத் தந்தையை விட்டுப்பிரிய மனமில்லாததால் வாகனத்தில் ஏறிய பின்னும் கலங்கிய நிலையில் இறங்கி தந்தையிடமே ஓடுகிறாள். தாக்குதலின் தீவிரம் அதிகரிக்க, ஃபர்ஹாவை உணவுப்பொருள் சேகரிக்கும் அறைக்குள் வைத்துப் பூட்டி பலகைகளிலான கதவின்மேல் மண் கலவையால் பூசிவிடுகிறார் அபு ஃபர்ஹா. அவளது கையில் கத்தி ஒன்றைக் கொடுத்து விட்டு, தான் திரும்பிவருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அங்கிருந்து அகல்கிறார்.

திரையில் பரவும் இருள்

அடுத்த காட்சியிலிருந்து படம் இருளடைந்த உணவுப் பொருளறையில் நடக்கிறது. ஃபர்ஹா கதவின் விரிசலடைந்த பலகைகளின்வழி தனது இல்லத்தின் முற்றத்தைக் கூர்ந்து பார்க்கிறாள். சில நாள்கள் கழித்து, பக்கத்துக் கிராமவாசியான அபு முகமது என்பவர் தனது குடும்பத்துடன் அந்த முற்றத்துக்கு வருகிறார். நிறைமாதக் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்குத் தன் கைகளாலேயே பிரசவம் பார்க்கிறார். ஆண் குழந்தை பிறந்த சற்று நேரத்தில், அங்கே இஸ்ரேலிய ராணுவக் குழுவொன்று வந்துவிடுகிறது. அவர்களுடன் ஆயுதவாதிகளை அடையாளம் காட்ட உடன் வரும் முகமூடி அணிந்த பாலஸ்தீனியன், அபு முகமதுவைக் குற்றத்தில் சம்பந்தப்படாதவர் என எடுத்துக்கூறியும் அபு முகமது, அவரது மனைவி மற்றும் சிறுமியாக இருக்கும் அவர்களுடைய மகளைச் சுட்டுக்கொல்கிறான் அந்த ராணுவக் குழுவின் தலைமையாள்.

அவர்களைக் கொல்லும் காட்சியைத் திரை முழுக்க நேரடியாகக் காட்டியிருந்தால்கூட அவ்வளவு அச்சத்தை உருவாக்கி யிருக்காது. ஃபர்ஹாவின் பார்வையிலிருந்து கதவிடுக்கின்வழி காணும்போது அதன் உக்கிரம் கூடிவிடுகிறது. திரையைக் கடந்து ஃபர்ஹாவுடன் நாமும் படுகொலைக் களத்தில் சிக்கிக்கொண்டிருக்கிற மனவெழுச்சியை உண்டாக்கிவிடுகிறது. துப்பாக்கிக்குண்டைச் செலவழிக்காமல் குழந்தையைக் கொல்லும்படி தனது உதவியாளனுக்குக் கட்டளையிடுகிறான் தலைமையாள். மனசாட்சி இடங்கொடாமல் குழந்தையின்மீது ஒரு துணியைப் போர்த்திவிட்டு அங்கிருந்து செல்கிறான். உதவியாளன் இஸ்ரேலியனாக இருந்தாலும் குழந்தையைக் கொல்லத் துணியாத அவனது மென்னுள்ளத்தை அந்தக் காட்சி அக ஈரத்துடன் சித்திரிக்கிறது.

வரலாற்றிலிருந்து...

குழந்தையின் அழுகையைக் கேட்கும் ஃபர்ஹா கதவை உடைக்க மிகவும் பிரயத்தனப்படுகிறாள். இறுதியில் பூட்டை உடைத்து வெளியே வர, குழந்தை முன்னமே இறந்துவிட்டிருக்கிறது. ஃபர்ஹா அழுத்தும் துக்கத்தால் தொய்வடைந்து நடந்தபடி வீட்டைவிட்டு வெளியே வருகிறாள். அத்திமர ஊஞ்சலில் சற்று நேரம் உட்கார்ந்திருக்கிறாள். ஃபரீதா அமரும் ஊஞ்சல் உடைந்து சாய்ந்திருப்பது, இனி ஃபர்ஹாவால் அவளைச் சந்திக்க முடியாது என்கிற குறியீட்டை ரணத்துடன் நம்முள் ஏற்றுகிறது. சூரியன் ஒளிரும் திசைவழிப் பாதையில் நடக்கிறாள் ஃபர்ஹா. நமது உள்ளத்தில் தேங்கிய உணர்வைப்போல திரைமுழுவதும் இருளில் ஆழ்கிறது.

நக்பா பேரழிப்பின்போது, கொலைத் தாக்குதலின் வழியாகச் சுமார் 7.5 லட்சம் பாலஸ்தீனியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஃபர்ஹா கதாபாத்திரம் ரதியா என்கிற பெண்ணின் உண்மை அனுபவத்தை அடியொற்றியது. பெண் இயக்குநரான தரின் ஜே. சல்லாமுக்கு இதுவே முதல் படம். பல திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளைப் பெற்றபோதும், கண்டுகொள்ளாதிருந்த இஸ்ரேலிய அரசு, படம் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்திலும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் அதை ஏற்று இணையத்தில் வெளியிட்ட நேரத்திலும் கோப முகத்துடன் கண் கூர்ந்தது. படம் பொய்களைப் பரப்புகிறது எனவும் அப்படியொரு நிகழ்வு நடைபெறவே இல்லை எனவும் பலர் குரல் எழுப்பினார்கள்.

அதற்கு சல்லாம் பதிலாகச் சொல்வது, “நக்பா என்கிற பேரழிப்புச் சம்பவம் நடைபெறவே இல்லை எனப் பலர் மறுப்பது உண்மையற்றது. 1948இல் எனது பெற்றோர் அந்தக் கொடுமைக்குச் சாட்சியாக வாழ்ந்து ஜோர்டானுக்குத் தப்பிவந்து தஞ்சம் புகுந்தவர்கள். நக்பாவை மறுப்பது என்பது எனது இருப்பையும் மறுப்பதாகும்.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in