

அது 1963ஆம் வருடம். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதற்குத் தீர்வாக ஒரு மேம்பாலம் வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அதை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. அதேபோல், இந்தி எதிர்ப்புப் போரில் இன்னுயிரை இழந்த அரங்கநாதன் நினைவாகச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும் பின்னர்தான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது காரில் வடபழனி, சாலிகிராமம் ஸ்டுடியோக்களுக்குப் போகும்போது கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் காத்திருக்க நேரிடும். ரயில்வே கேட் கீப்பர், சிவாஜியின் காரைப் பார்த்தவுடன் தனது கேட் கீப்பிங் அறையில் மாட்டப்பட்டிருக்கும் சுவர்க் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்து புன்முறுவல் பூப்பாராம். இதை சிவாஜியுடன் பயணித்த அவரது ஒப்பனை உதவியாளர் கவனித்து, அதைத் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமனிடம் சொல்லியிருக்கிறார். கடிகாரம் கூடத் தனது நேரம் காட்டும் கடமையில் பின் தங்கிவிடலாம்; ஆனால், நேரம் தவறாமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் அந்த நிகழ்வின் பொருள். இந்தச் சம்பவத்தைக் கேட்டு, ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற குணங்களைப் பொருத்தி வார்த்தார் அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.
பேராசிரியர் கிருஷ்ணன்: கண்டிப்பும் ஒழுக்கமும் நிறைந்த இளம் கல்லூரிப் பேராசிரி யர் கிருஷ்ணன், ஒரு மனிதநேயர். அமைதி விரும்பி. தனது வீட்டுக்குக் கதவின் நாதாங்கி தேய்ந்து சத்தம் எழுப்பினால் உடனே அதற்கு எண்ணெய் போட்டு அதைச் சரி செய்த பிறகுதான் அந்த இடத்தை விட்டு நகர்வார். தன்னைக் காப்பாற்றிய நாய் இறந்துவிட, அதற்குத் தன் கையா லேயே இறுதிச் சடங்கு செய்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு இரக்க குணம் கொண்டவர். அவரது முக்கிய லட்சியங்களில் ஒன்று பிரம்மச்சரியம். மிகவும் சிரத்தையுடன் அதைக் கடைப்பிடித் தாலும் ஒரு கட்டத்தில் அது அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. தன்னிடம் பயிலும் மாணவியின் மீது காதலாகிறார். ஆனால், மாணவியைக் கொன்றுவிட்டதாகப் பேராசிரியர் மீது கொலைப்பழி விழுகிறது.
அதன்பின்னர் அவரது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், சோதனைகள் ஆகியவற்றை அழகாகத் தொகுத்துத் தந்தவர்கள் ஜாவர் சீதாராமனும் இயக்குநர் கே.சங்கரும். இப்படியொரு சிக்கலான கதையை ‘தி ப்ளு ஏஞ்சல்’ (1959) என்கிற ஜெர்மானியப் படத்தைத் தழுவி திரைக்கதை அமைத்தார்கள். அந்தப் படம்தான் பேராசிரியர் கிருஷ்ணனாக நடிகர் திலகமும் கல்லூரி மாணவி ராதாவாக தேவிகாவும் நடித்த காலம் மறக்காத காதல் காவியமாக வெளி யாகி வெற்றிபெற்ற ‘ஆண்டவன் கட்டளை’ (1964). அன்றைக்கு இளைஞர்களுக்கான படமாக மட்டும் அது இருக்கவில்லை; குடும்பத்துக்கான படமாக, நல்ல கருத்துகளை இளைஞர்கள் மனதில் விதைக்கும் படமாக இருந்தது.
எழுத்து-இயக்கம்-தொழில்நுட்பம்: கதாசிரியர் மனதில் கற்பனை செய்து எழுத்தில் வடித்த கதா பாத்திரத்தை அப்படியே திரையில் கொண்டுவந்து காட்டும் வல்லவர் நடிகர் திலகம். ஓர் இளம் பேராசிரியருக்கான உடல் மொழி, சின்ன சின்ன ஆங்கிலத் தொடர்களைக் கலந்து பேசும் வசன உச்சரிப்பு எனப் படம் முழுவதும் இளமை துள்ளும் ஸ்டைலை காட்டியிருப்பார். தனது பிரம்மச்சரிய விரதத்துக்கும் காதல் உருவாக்கும் வண்ணமயமான உணர்வுகளுக்கும் இடையில் சிக்கி அல்லாடும் கதாபாத்திரம். அவரைவிட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக அதில் நடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைக்கு வெளியானபோது நாங்கள் முதல் முறை திரையரங்கில் பார்த்ததில் தொடங்கி, இப்போது 60 ஆண்டுகள் கழித்து யூடியூபில் மீண்டும் பார்த்து முடித்தபோதும் நடிகர் திலகத்தின் ஆற்றல் எப்படியானது என நினைத்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் படத்தில் அந்தளவுக்கு கதாபாத்திர நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
என்னைப்போல் 50களின் மத்தியில் பிறந்த பல ரசிகர்களுக் கும் அன்று ஆதர்ச ஜோடியாக விளங்கியது சிவாஜி - தேவிகா இணை. அதன் ஜோடிப் பொருத் தத்துக்கு இந்தப் படம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் தன் கண்களாலேயே காதல் வசந்தம் பூக்கச் செய்தார் தேவிகா.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கவியரசர் கண்ணதாச னின் தத்துவம் ததும்பும் வரிகளில் அத்தனை பாடல்களும் அமர கானங்களாக விளங்குகின்றன. என்னதான் சிறந்த காட்சிகளைத் திரைக்கதை எழுத்தாளர் எழுதிவிட்டாலும் அவற்றுக்கு ஒளிப்பதி வாளர் தம்பு உதவியுடன் காட்சி வடிவம் கொடுத்த சங்கரின் இயக்கம் திரையில் ஒரு நாவலைவாசிப்பதுபோலவே இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாகிவிட்ட ‘சூப்பர் இம்போஸ்’உத்திகளைப் பல காட்சியமைப்புகளுக்கு அற்புதமாகப் பயன் படுத்தியிருந்தார் நல்ல படத் தொகுப்பாளராகவும் விளங்கிய இயக்குநர் சங்கர். எழுத்து, நடிப்பு, தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, இயக்கம், இசை என எல்லாம் சிறந்த ஒரு படம் 60ஐத் தொட்டு விட்ட ‘ஆண்டவன் கட்டளை’.
கட்டுரை: வீயார்
படங்கள் உதவி: ஞானம்