Published : 14 Jun 2024 05:30 AM
Last Updated : 14 Jun 2024 05:30 AM

சினிப்பேச்சு: விதார்த்தின் ஆக்‌ஷன் அவதாரம்!

நல்ல கதைக்கரு, விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படங்களில் அழுத்தமான முதன்மைக் கதாபாத்திரங்களில் தோன்றுவதை வழக்கமாக வைத்திருப்பவர் விதார்த். அவர் தற்போது முதல் முறையாக ஒரு காவல் அதிகாரியாக முழு நீள ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘லாந்தர்’. எம் சினிமாஸ் பத்ரி தயாரிப்பில், சாஜி சலீம் இயக்குநராக அறிமுகமாகும் படம். இவர், ஏற்கெனவே ‘விடியும் வரை காத்திரு’ என்கிற படத்தை விதார்த்தை வைத்து இயக்கி முடித்துவிட்டார். அப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே ‘லாந்தர்’ படத்தைத் தொடங்கி அதையும் முடித்துவிட்டனர்.

சாஜி சலீம் இயக்குநர் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்தின் இணை இயக்குநர். காவல் அதிகாரியாக விதார்த் பணியாற்றும் பகுதியில் ஒரு குழு திட்டமிட்டு ஒரு பிரச்சினையை உருவாக்கி, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயல்கிறது. அதேநேரத்தில் ஒரு வினோதமான மனநலப் பிரச்சினையால் விதார்த்தின் மனைவி தீவிர உடல்நலச் சிக்கலுக்கு உள்ளாகிறார். மனைவியும் முக்கியம் தனது பகுதியின் சட்டம் ஒழுங்கும் முக்கியம் என எண்ணும் விதார்த், இரண்டையும் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் கதை. இதில் விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோரத்தி நடித்திருக்கிறார். படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

உமாபதிக்குத் திருமணப் பரிசு!: ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஆகியோரின் திருமணம் இரு தினங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் திருமணம் இது. உமாபதி ராமையாவுக்கு திருமணப் பரிசுபோல், அவர் நாயகனாக நடித்துள்ள ‘பித்தல மாத்தி’ என்கிற புதிய படம் இன்று ரிலீஸ் ஆகிறது. மாணிக்க வித்யா இயக்கியிருக்கிறார். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துள்ள முழு நீள காதல் நகைச்சுவைக் கதையான இதில் ஒரு கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் உமாபதி. இவரது நண்பனாக பால சரவணன் நடித்திருக்கிறார். படத்தில் உமாபதியின் அப்பாவாக, தம்பி ராமையாவே நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் உமாபதிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சம்ஸ்கிருதி.

கானில் கவனம் பெற்ற ‘பயமறியா பிரம்மை’: 'கான் படவிழாவில் பிரிமியராகத் திரையிடப்பட்ட தமிழ்ப் படமான ‘பயமறியா பிரம்மை' திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார் ஜேடி. அவருடன் சாய் பிரியங்கா ரூத், குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன் எனப் பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது. படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “இது எனது முதல் படம். 90 மற்றும் 2000 காலக்கட்டத்தில் நடைபெறும் கதை. பல மனிதர்களின் வாழ்க்கையில் முள்ளாக உறுத்தும் பிரச்சினைகளுக்கு அவர்கள் யாருக்குமே அறிமுகமில்லாத ஒருவன் எந்த வழியில் தீர்வு காண்கிறான் என்பதுதான் கதை.

கிரைம் திரில்லராக இருந்தாலும் இது மனிதர்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் அழுக்குகளைக் கழுவ முயலும் படமாக உருவாகியிருக்கிறது. பல கதாபாத்திரங்கள், ஆனால் அனைத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக் கிறேன். கான் உள்ளிட்ட பல சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது” என்றார். நந்தா - வி.பிரவீன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இசை கே. 69 எம் எம் பிலிம் சார்பில் ஜெகதீஷ் - ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x