Last Updated : 04 May, 2018 10:01 AM

Published : 04 May 2018 10:01 AM
Last Updated : 04 May 2018 10:01 AM

தரணி ஆளும் கணினி இசை 30: கலைகளின் நுட்பங்கள் பகிர்வதற்கே!

ஒரு பக்கம் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஆளுமைகளின் சாதனைப் பட்டியல். இன்னொரு பக்கம் இன்றைய தேவைக்கான இசை என்ற நோக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் அனிருத், ‘ஹிப் ஹாப்’ ஆதி வரையிலான இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள். இவர்களுக்கு நடுவில் படைப்புத்திறனும் தொழில்நுட்பமும் இணையும் திரையிசைத் தளத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

இந்த இடத்திலிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் வழியாக எதையும் ஒளிக்காமல் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்துக்குப் பின் திரையிசையில் கணினியும் மென்பொருட்களும் செலுத்திவரும் ஆதிக்கம் பற்றி பிரதானமாகப் பேசியிருக்கிறேன்.

கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரையிசையில் பாடலை ஒரு தொகுப்பாக எப்படி ஒழுங்கமைப்பது என்பதைப் பற்றி விரிவாகப் பேசியபோது, “என்ன நீங்கள்! தொழில் ரகசியங்களை இத்தனை வெளிப்படையாகக் கொட்டித் தீர்க்கிறீர்கள்! இதைப் படிப்பவர்கள் இசையமைத்தல் இத்தனை எளிதானதா என்பதுபோல் புரிந்துகொண்டு இங்கே படையெடுத்து விட மாட்டார்களா?” எனச் சில திரையுலக அன்பர்களே என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இப்படிக் கேட்க என்ன காரணம் என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது. நவீனத் திரையிசை குறித்த தொழில்நுட்பத் தகவல்களை நம்மவர்கள் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தார்கள் என்ற உண்மைதான் அது. அது அவர்களது தவறல்ல; எனக்கு ‘தி இந்து’ தமிழ், களம் அமைத்துத் தந்தது. அதை நான் 30 வாரங்கள் பயன்படுத்திக்கொண்டேன். கலை என்பதும் காலந்தோறும் மாறிவரும் கலையின் தொழில்நுட்ப ரகசியம் என்பதும் ஒளித்து வைக்கப்படாமல் தலைமுறைகளோடு பகிரப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். நமது முன்னோர்கள் அப்படி அள்ளிக்கொடுத்திருக்காவிட்டால் இன்று நம் பாரம்பரிய மருத்துவமும் கலைகளும் இத்தனைத் தலைமுறைகளைக் கடந்து நம்மிடம் வந்திருக்க முடியாது.

ரசிகனுக்கும் தொழில்நுட்பம் தேவை

இந்தத் தொடர் வெளிவரத் தொடங்கிய சில வாரங்களில் திரை இசை உலகில் இருந்தே தொழில்நுட்பச் சந்தேகங்களைத் தீர்க்கக் கேட்டு, எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகம். நான் உணர்ந்த அளவில் சிறந்த கம்போஸிங் திறமை கொண்டவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி அந்த இசையை எப்படி பிரசெண்ட் செய்வது எனத் தெரியவில்லை. இப்படிக் கேட்கப்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்கும் முடிந்தவரை இந்தத் தொடரின் வழியாக எளிய முறையில் என்னால் விளக்கம் அளிக்க முடிந்திருக்கிறது.

அதேபோல இசை ரசிகனுக்கும் இசையின் நுட்பங்களும் அது இயங்கும் நவீன தொழில்நுட்ப குறித்த அறிவும் அவசியம். அதை அவன் முழுமையாகத் தெரிந்துகொண்டு ரசிக்கும்போது இசையை, அதில் வெளிப்படும் படைப்பு நேர்த்தியை ஆழமாக ரசிக்க அது பாதைஅமைத்துக் கொடுக்கிறது. அந்த வகையில் ஒரு திரையிசைப் பாடல் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தையும் ரசிகர்களாகிய வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டது நிறைவை அளிக்கிறது.

தேச எல்லைகள் தடுக்க முடியாது

விதவிதமான கதைகள், வேறுவேறு ஆளுமைத் திறன் கொண்ட இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் எனத் திரையிசையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக அமைந்துவிடுகிறது. ஆனால், முதன் முதலாக இசை அமைத்த திரைப்படத்தை எந்த இசையமைப்பாளரும் மறக்க முடியாது. அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி – சுனைனா நடித்த ‘வம்சம்’ படத்துக்கு இசையமைத்தை மறக்கமுடியாது.

அந்தப் படத்துக்கு பணியாற்றியபோது நடந்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர விரும்புகிறேன். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு கிராமியத் திருவிழா பாடலில், குறிப்பிட்ட சமுதாய மக்களின் கிராமியப் பாரம்பரியங்களையும் அவர்களது வழிபாட்டுப் பெருமைகளையும் கூறும் விதமாக அமைய வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார்.

அதில் முழுக்க முழுக்க அந்த மக்களுக்கு நெருக்கமான கிராமியக் கருவிகளின் ஒலிகளே இடம்பெற வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டார். அதற்காக அவரது ஊரில் நடந்த பிரம்மாண்டமும் பாரம்பரியமும் நிறைந்த கோவில் திருவிழாவைக் காண என்னை அழைத்துச் சென்றார். அந்தத் திருவிழாவில் கண்ட பாரம்பரிய வழிபாடு, சடங்குகளை ஒட்டி ‘மன்னாதி மன்னரு’ பாடலை கம்போஸ் செய்தேன்.

அந்தப் பாடலில் அசலான கிராமிய வாத்தியங்களின் லைவ் இசை இடம்பெற வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமிய இசைக்குழுவை அழைத்தேன். சென்னை வந்து வாசித்துத் தர அவர்கள் மிகப்பெரிய தொகையைக் கேட்டனர். வேறு வழியின்றி அவர்களை ஸ்டுடியோவுக்கு அழைத்துப் பாடல் பதிவைத் தொடங்கினேன்.

வந்திருந்த கிராமியக் கலைஞர்கள் அனைவருக்கும் பாடலை முதலில் ஒலிக்க விட்டுக் காட்டியபோது ஆச்சரிப்பட்டுபோனார்கள். “இது எங்க சனத்தோட பாட்டு, எங்க வழிபாடு, எங்க வாழ்க்கை. இதுக்கு வாசிக்க பணம் வாங்கமாட்டோம்” என்று மறுத்து, போக்குவரத்துச் செலவுக்குக்கூட பணம் பெற்றுக்கொள்ளாமல் சென்றார்கள். புறப்படும் முன் இசைக்குழுவின் தலைவர் என் அருகில் வந்து “ நீங்க நம்ம ஆளுங்கதானே?” என்று கேட்டார்.

எனக்கு மனதுக்குள் சிரிப்பு வந்தாலும் நான் உங்கள் தாயின் வயிற்றில் பிறக்காத சகோதரன்தான், மெட்டும் இசையும்தான் என்னுடையதே தவிர இந்த வரிகளை எழுதிய வாலி, நமது மூத்த சகோதரன்” என்றேன். நான் கூறிய தொனியைப் புரிந்துகொண்ட அவர், தனது பெருமிதம் அர்த்தமற்றது என்று புரிந்துகொண்டு அன்றுமுதல் அனைவருக்குமான கலைஞராக மாறிவிட்டார்.

இன்றுவரை எனக்கு சகோதரனாகவே இருக்கிறார். படம் வெளியாகி வெற்றிபெற்றபின் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட ஊருக்குச் சென்றபோது எனக்கு மாலை மரியாதை செய்து அவரே கவுரவம் செய்தார். அவரது கலை சார்ந்த அன்பும் பற்றுதலும் தூய்மையானது. தன்னை ஈர்த்துவிடும் கலைஞனைத் தனது சமுதாய, இன, மத அடையாளங்களுடன் பொருத்திப் பார்த்து சொந்தம் கொண்டாடுவது தேவையற்றது. கலைஞன் எல்லைகள் அற்றவன். யாருக்கும் சொந்தமானவன் கிடையாது. நாட்டின் எல்லைகள்கூட அவனையோ அவனது படைப்புகளையோ தடுத்து வைக்க முடியாது.

04chrcj_tajnoorஉணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்

திரையிசையில் பக்திப் பாடலுக்கும் கோயில் திருவிழா பாடலுக்கும் சூழ்நிலை அமைந்தால் நான் அதற்கு இசையமைக்க முடியாது என்று மறுக்க மாட்டேன். பத்துக்கும் அதிகமான கிறிஸ்தவ பக்திப் பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சூபி லைவ் இசைக் கச்சேரியை நடத்தியிருக்கிறேன். தற்போது திருவண்ணாமலையாரின் அருட்கொடைகளை விவரிக்கும் ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்து முடித்திருக்கிறேன்.

இவற்றை இங்கு நான் குறிப்பிடக் காரணம், ஆயிரம் மதங்கள் இருந்தாலும் ஏக இறைவன் ஒருவனே என்ற உணர்வு நம் மத்தியில் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே. எல்லா மதங்களும் அவனையும் அவனது அன்பையும் வெவ்வேறு வடிவங்களில் வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றன.

எண்ணற்ற சாதிகள் இருந்தாலும் மனிதம் என்ற உணர்வால் நாம் விலங்குகளைக் காட்டிலும் உயர்ந்த மனித சாதியாக இருக்கிறோம். இந்தச் சிறப்புத் தகுதியால்தான் நாம் கலைகளை உருவாக்கி, ரசித்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம். அப்படிப்பட்ட நாம், நமது கலைஞர்களைக் கலைக்கண் கொண்டு காண வேண்டும். கலைஞர்கள் மீது, இன, மத அடையாளங்களைப் பொருத்துவதும் தமது சமூகப் பின்னணியுடன் சொந்தம் கொண்டாடுவதும் அவர்கள் உருவாக்கிய படைப்புகளைப் புறக்கணிப்பதற்குச் சமமானது. எனது இந்தப் பார்வையுடன் இந்தத் தொடரை நிறைவுசெய்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

(நிறைவடைந்தது)
தொடர்புக்கு:tajnoormd@gmail.com

எழுத்தாக்கம்: ஆர்.சி.ஜெயந்தன்

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் புகைப்படங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x