திரைசொல்லி 05: ஓராயிரம் கிராமங்களின் உண்மைக் கதை!

திரைசொல்லி 05: ஓராயிரம் கிராமங்களின் உண்மைக் கதை!
Updated on
3 min read

இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் 4K டிஜிட்டல் தரநிலையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுப் பல அரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவாவின் படைப்பான ‘செவன் சாமுராய்’ (Seven Samurai), ஃபிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் பிரஸ்ஸானுடைய ‘ஃபோர் நைட்ஸ் ஆஃப் எ டிரீமர்’ (Four Nights of a Dreamer), ஜெர்மானிய இயக்குநர் விம் வெண்டர்ஸ் இயக்கிய ‘பாரீஸ்’ (Paris), ‘டெக்ஸாஸ்’ (Texas), செனகல் நாட்டின் இயக்குநர் உஸ்மேன் செம்பேனுடைய ‘த கேம்ப் அட் சியாகுவா’ (The Camp at Thiaroye) ஆகிய படங்கள் முக்கியத்துவம் பெற்றன.

இந்தப் பெருமைப்படத்தக்க வரிசையில் இடம்பெற்ற இந்தியத் திரைப்படம் ஷியாம் பெனகல் இயக்கிய ‘மந்தன்’ (1976). குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பும் திரைப்படப் பாரம்பரிய அறக்கட்டளையும் இணைந்து இந்தப் புதிய மெருகேற்றப் பிரிதியைத் தயாரித்திருக்கிறார்கள்.

‘மந்தன்’ படத்தின் கதை, 1970களில் உருவெடுத்த வெண்மைப் புரட்சி (White Revolution) எனப்படும் பால் உற்பத்தியைப் பின்புலமாகக் கொண்டது. வெண்மைப் புரட்சி என்பது, தனிமனித ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான செயல்பாட்டின் குறியீட்டுச் சொல். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டமான 1950இல் ஒரு தனிநபருக்கான பாலின் நுகர்வு நாளொன்றுக்கு 124 கிராமாக இருந்தது.

அடுத்து வந்த இரண்டு தசாப்தங்களில் பால் உற்பத்தியில் நேர்ந்த தட்டுப்பாட்டால் 1970இல் பாலின் நுகர்வு 107 கிராமாகக் குறைந்தது. இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு, உள்நாட்டுப் பால் உற்பத்தியில் நேர்ந்த தேக்கத்தாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலின் மிகை விலையாலும் விளைந்தது.

ஒரு புரட்சிக்கான விதை: 1964 முதல் 1966 வரை இந்தியாவின் பிரதமராயிருந்த லால் பகதூர் சாஸ்திரி குஜராத்துக்குச் சென்று, ஆனந்த் நகரில் இருந்த கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைப் (அமுல்) பார்வையிட்டார். அப்போது, அதன் வெற்றி முகம் கண்டு ஒரு திட்டம் உதித்தது.

அதன்படி, 1965ஆம் வருடம் வர்கீஸ் குரியனின் தலைமையின்கீழ் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் நிறுவப்பட்டது. அதன் பணி, இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைத் தோற்றுவிப்பதும் பால் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோ ருக்கும் பாலின் விலையை நியாயமாக நிர்ணயம் செய்வதாகும்.

இதன்வழி, தனிநபருக்கான ஊட்டச்சத்தின் குறைபாடு நீக்கப்பட வேண்டும், மட்டுமன்றி விற்பனை சார்ந்து உள்ளூர் முதலாளிகளாலும் தரகர்களாலும் சுரண்டப்பட்டுவந்த பால் உற்பத்தியாளர்களை வறிய நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இவ்வித நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து கிராமப் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வது ஆகிய செயல்திட்டங்களை உள்ளடக்கியிருந்தது.

‘மந்தன்’ படத்தில், இந்தக் கொள்கை யின் பிரதிநிதியாகக் கால்நடை மருத்துவர் ராவ் (கிரிஷ் கர்னாட்) சிறிய குழுவுடன் குஜராத்தி லுள்ள சங்கன்வா கிராமத்துக்கு வருகிறார். அவரது இலக்கு அங்குக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைக் கட்டமைப்பது. ஆனால் கிராமமோ சாதியாலும் வர்க்க வேறுபாட்டாலும் பிளவுபட்டிருக்கிறது.

அங்கு வாழும் தலித் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள், தாம் வளர்க்கும் எருமைகளிலிருந்து கறக்கும் பாலை உள்ளூர் பணக்காரரான மிஸ்ராவிடம் (அம்ரிஷ் பூரி) எடை மதிப்பில் குறைவான விலைக்குத் தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையைக் காணும் மருத்துவர் ராவ், பால் பொருளை அதன் கொழுப்பு அடர்த்திக்கு (Fat content ratio) ஏற்ப விலை நிர்ணயம் செய்து கூடுதல் விலைக்கு வாங்கிக்கொள்ள முன்வருகிறார்.

அது மிஸ்ரா தரும் விலையைவிட இருமடங்காக இருக்க, நீர் கலக்காத பால் வியாபாரிகள் தாம் இதுவரை ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் மிஸ்ராவிடம் கடன் வாங்கியிருப்பதால் ராவ் நிறுவும் கூட்டுறவுச் சங்கத் துக்குப் பால் தர யோசிக்கிறார்கள். அதேநேரம், அவர் அளிக்கும் ஈடுபாட்டுடனான நம்பிக்கை மெதுவாக அவர்களைக் கூட்டுறவுச் சங்கத்தின் பக்கம் இழுக்கிறது.

மக்களைப் பிரதியெடுத்த பெனகல்: அவர்களில், துடுக்குத்தனத்துடன் பேசும் பிந்து (ஸ்மீதா பாட்டில்) ராவை மதிப்பதில்லை. முரட்டுத்தனத்துடன் தோன்றும் போலா (நசீருதீன் ஷா), ராவின் திட்டத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஆயினும் இருவரது நல்லுள்ளம் ராவின் நேர்மையான பணியை உணர்ந்து சரணடைகிறது. புத்தெழுச்சியுடன் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அந்தக் கிராமத்தில் இயங்கத் தொடங்குகிறது.

ஊர்த் தலைவர் (குல்பூஷன் கர்பந்தா) சாதியப் பேதத்தைக் கூட்டுறவு அமைப்பிலும் கடைப்பிடிக்கிறான். பால் பொருளை விற்க வரும் உற்பத்தியாளர்களின் வரிசையில் நிற்கும் தலித்துகளை வெளியேற்றி தனியாக நிற்கவைக்கிறான். மற்ற சாதியினர் சென்ற பிறகுதான் அவர்கள் தரவேண்டும் என்று நிர்பந்திக்கிறான்.

இதனால் போலோ உள்ளிட்ட தலித் மக்களிடம் கொந்தளிப்பு தலையெடுக்கிறது. அனைவருக்குமான சமத்துவ உரிமைகளைத் தனது கொள்கையாகப் பாவிப்பவர் ராவ். எனவே, கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகி நியமனத்துக்கான தேர்தலை நடத்த ஆயத்தமாகிறார். தலித் மக்களிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்துமாறு அறிவுறுத்துகிறார். வாய்ப்பு இணையாக வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

தலித் மக்களிலிருந்து மோத்தி (ராஜேந்திர ஜேஸ்பல்) வேட்பாள ராகவும் பின்பு வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட, தனது அதிகார இழப்பை அவமானமாகக் கருதும் ஊர்த் தலைவர் தனது அரசியல் செல்வாக்கின்வழி ராவை ஊர் மாற்றலுக்கு உட்படுத்துகிறார். ராவ் அங்கிருந்து அகன்றாலும் அவரிடமிருந்து பெற்ற ஊக்கத்தால் போலாவும் மோத்தியும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை வழிநடத்துகிறார்கள்.

இது சங்கன்வா கிராமத்தின் கதை மட்டுமல்ல, இந்தியாவெங்கும் இடைத்தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விளிம்புநிலை மக்களை, பால் பொருளாதாரத்தின்வழி விடுவிக்க, கூட்டுறவுச் சங்கங்கள் பாடுபட்ட எண்ணிக்கையிலடங்காத கிராமங்களின் கதையும்கூட.

திரள் நிதியின் சக்தி: ஷியாம் பெனகல் தன்னுடைய திரைப்படங்களில் அழகியல் வண்ணங்கள் பூசாதவர். கதாபாத்திரங் களின் வாழ்வு என்னவாக இருக்கிறதோ அதை அப்படியே திரையில் இடமாற்றம் செய்பவர். சொல் அலங்கார மற்ற ஓர் எளிய கதைசொல்லி. இத்தகைய கதைசொல்லல் முறை பார்வையாளர்களது அறிவார்ந்த நுண்ணுணர்வைக் கோருவ தில்லை. மாறாக, அவர்களது உணர் வெழுச்சியுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பது.

இதுபோன்ற இணையோட்ட சினிமாவின் (Parallel Cinema) இருப்பு, வெகுஜன சினிமாவில் சிக்குண்டி ருக்கும் பார்வையாளர்களைத் தம் பக்கம் வசீகரித்து இழுத்துக்கொள்ளும் ஆரோக்கியத் தேவையில் கட்டப்பட்ட ஒரு கலைத்துவப் பாலம்.

‘மந்தன்’ படத்தின் மற்றொரு சிறப்பம்சம், அது குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் 5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து தலா 2 ரூபாய்களைத் திரள் நிதிப் பங்களிப்பாகப் பெற்றுச் சாமானிய மக்களைத் தயாரிப்பாளர்களாக மாற்றி திரைக்கு வந்த உலகளாவிய முதல் திரைப்படம்.

தனது கதைப்பரப்பில் பெருமிதத் துடன் நினைவுறுத்தும் கூட்டுறவுச் சங்கங்களின் உருவாக்கம், இந்தியாவின் ஏனைய பரப்புகளிலும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் அற்ற சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணிக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது. மருத்துவர் ராவின் இருப்பில் உறைந்திருப்பவர் வெண்மைப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்படும் வர்கீஸ் குரியன்தான்.

குரியனின் தன்னெழுச்சியான ஈடுபாட்டின் காரணமாக, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பயணம், உலகெங்கும் பால் பொருள்களின் விற்பனையில் பெரும் விரிவாக்கத்தை உருவாக்கத் தாக்கம் தந்தது. இந்தியாவின் பால் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை விதைத்துள்ளது. இதுவே வெண்மைப் புரட்சியின் வணங்கத்தக்க மகிமை.

- viswamithran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in