

பாலிவுட்டின் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவியின் இடத்தை அவரது மகள் ஜான்வி கபூரால் பிடிக்க முடியாது. என்றாலும் பாலிவுட்டின் குறிப்பிடத்தகுந்த வசீகரக் கதாநாயகிகளில் ஒருவராக இளமை ததும்பும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். அவர் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடித்துக் கடந்த வெள்ளியன்று வெளியான ‘மிஸ்டர் & மிஸஸ் மகி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்துக்காக வடமாநில ஊடகம் ஒன்றுக்கு ஜான்வி அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரல். ‘நிகழ்காலத்திலிருந்து வேறொரு காலகட்டத்துக்குப் போகும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் நீங்கள் எந்தக் காலகட்டத்துக்குப் போக ஆசைப்படுகிறீர்கள்?’ என்கிற கேள்வி ஜான்வியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்: “மகாத்மா காந்தியும் பாபாசாகேப் அம்பேத்கரும் நெருக்கமாக உரையாடிய அந்தத் தருணத்துக்குப் போக ஆசை. சாதி குறித்த ஒரு தீர்க்கமான பார்வையும் வரையறையும் பாபாசாகேப் அம்பேத்கருக்கு இருந்தது. ஆனால், காந்திஜியிடம் சாதி குறித்த கருத்தில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே வந்தன” என்று ஆழமான அரசியலைப் பேசி உள்ளத்தால் தான் பேரழகி என்பதைக் காட்டியிருக்கிறார்.
நகைச்சுவை நாயகன்! - கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது ‘அரண்மனை 4’. அதில், சிறார் பார்வையாளர்களைப் படம் முழுவதும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்தார் யோகிபாபு. இதுபோல் நீளமான நகைச்சுவை வேடங்களை ஏற்கும் அதேநேரம், அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களும் லாபம் ஈட்டித் தருகின்றன.
அந்த வரிசையில் அவர் நாயகனாக நடித்து முடித்திருக்கும் புதிய படம் ‘ஜோரா கைய தட்டுங்க'. இதைத் ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ என்கிற படத்தை இயக்கி கவனம் ஈர்த்த வினிஷ் மில்லினியம் எழுதி இயக்கியிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டபிள்யூ.எ.எம்.ஏ. எண்டெர்டெய்ன்மெண்ட் - சரவணா பிலிம் ஆர்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், ஒரு மாயாஜாலக் கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
யோகிபாபுவுடன் இணைந்து ஹரிஸ் பேரடி, ‘விக்ரம்’ புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, ‘அருவி’ பாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தவறு திரும்பத் தாக்கும்! - இரண்டு திறமையான நடிகர்கள் ஜோடி சேர்ந்தால், அது கதைக்கு முக்கியத்துவம் தரும் கூட்டணியாகிவிடுகிறது. கூத்துப்பட்டறையிலிருந்து வந்து இயல்பான நடிப்புக்காகப் பெயர் பெற்ற விதார்த்தும் ஏற்கும் கதாபாத்திரமாக மட்டும் உணர வைக்கும் ஜனனி ஐயரும் ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்தை எழுதி, இயக்குகிறார் கிருஷ்ணா குமார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “தவறு என நாம் தெரிந்தே செய்யும் தவறு ஒரு பூமராங். அதன் விளைவு நம்மிடமே திரும்ப வந்துசேரும். அதை எதிர்கொள்ளும்போது அந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருக்கலாமே என வருந்தக் கூட சூழ்நிலை அனுமதிக்காமல் போகலாம்.
இக்கருத்தை மையமாக வைத்து நகரும் சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகள் ஒரே புள்ளியில் இணையும் ‘ஹைபர் லிங்க்’ திரைக்கதையைப் படமாக்க இருக்கிறோம்.
ஜூலை மாதம் தொடங்கி ஒரே கட்டமாக 35 நாள்கள் படப்பிடிப்பு நடத்திப் படத்தை முடிக்க இருக்கிறோம்” என்கிறார். குவியம் பிலிம்ஸ் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் இப்படத்தில் விதார்த், ஜனனி ஆகியோருடன் எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.