‘தங்கப் பதக்கம்’ பொன்விழா: எஸ்.பி.சௌத்ரிக்கு வயது

‘தங்கப் பதக்கம்’ படப்பிடிப்பில் இயக்குநர் பி.மாதவனுடன் நடிகர் திலகம். 
| படங்கள் உதவி: ஞானம் |
‘தங்கப் பதக்கம்’ படப்பிடிப்பில் இயக்குநர் பி.மாதவனுடன் நடிகர் திலகம். | படங்கள் உதவி: ஞானம் |
Updated on
3 min read

கடமை - பாசம் இரண்டுக்கும் இடையிலான போராட்டம் என்கிற ஒருவரிக் கதையைத் திரையில் விரித்த படங்களின் பட்டியல் பெரியது. அந்தப் பழைய வார்ப்பில் ஓர் உளவியல் பரிமாணத்தைச் சேர்த்து ‘தங்கப் பதக்கம்’ திரைக்கதையை எழுதியவர் அன்றைக்கு நாடகாசிரியராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிக்கொண்டிருந்த மகேந்திரன். அவர் எழுதிய நாடகம், ஒரு வெள்ளி விழா திரைப்படமாக உருவாகக் காரணமாக இருந்தவர் நடிகர் செந்தாமரை!

காவல்துறை அதிகாரியான தனது தந்தையின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொள்ளும் மகன். அப்பாவின் கண்டிப்புகளுக்கு எதிர்வினைப் புரிவதையே தனது வழக்கமாக்கிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவரை வீழ்த்த வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொள்ளும் அந்த மகனின் உளவியல் சிக்கல்தான் ‘தங்கப் பதக்கம்’ படத்தின் மையச் சிக்கலும்.

அப்படிப்பட்ட மகனைத் திருத்தப் போராடும் அந்தத் தந்தையின் தளராத முயற்சிகளும் அவற்றின் பக்க விளைவுகளும் கதையின் நகர்வைத் தீர்மானித்தன. மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து வெள்ளி விழாக் கண்ட ‘தங்கப் பதக்கம்’ வெளியாகி நாளையுடன் (01.06. 1974) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

நாடகம் திரையேறியது: மகேந்திரன் எழுதிய நாடகத்தை, கதையறிவு மிக்க நடிகரான செந்தாமரைப் படித்துப் பார்த்தார். அதன் உள்ளடக்கத்தால் கவரப்பட்ட அவர், ‘இரண்டில் ஒன்று’ எனத் தலைப்புச் சூட்டி, அப்பா கதாபாத்திரத்தைத் தாமே ஏற்று நடித்து அரங்கேற்றினார்.

300 காட்சிகளைத் தாண்டி நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையறிந்து நாடகத்தை வந்து பார்த்து வியந்துபோன நடிகர் திலகம், செந்தாமரையிடம், “தம்பி… போலீஸ் ஆபீசர் கேரக்டர் உயரத்துல இருக்குடா… அந்த கேரக்டர் உடம்புக்குள்ள ஏறிக்கிச்சு..” என்றார். அவ்வளவுதான், ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தில் அடுத்த வாரமே முதன்மைக் கதாபாத்திரத்தில் சிவாஜி நடிக்க, செந்தாமரை வேறொரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இம்முறை செந்தாமரை வியந்துபோய் சிவாஜியைப் பார்த்தார். நாடகத்தை நடந்தும் உரிமையை சிவாஜி நாடக மன்றத்துக்கு மனமுவந்து கொடுக்கவும் செய்தார். ஏனென்றால், செந்தாமரையுடைய நாடகக் கலை வாழ்வின் முதல் பாதியில் அவரை எம்.ஜி.ஆர்., ஆதரித்தது போல், இரண்டாவது பாதியில் தனது குழுவில் சேர்த்துக்கொண்டு கரம் கொடுத்தவர் நடிகர் திலகம். அதை மறக்கவில்லை செந்தாமரை.

‘இரண்டில் ஒன்’றைத் ‘தங்கப் பதக்க’மாக்கி, தன்னுடைய சிவாஜி நாடக மன்றம் சார்பில் நாடகமாக நடத்திய சிவாஜி, மகேந்திரனை வைத்தே அதற்குத் திரைக்கதை எழுதிப் படமாக்கினார். அதன் வெற்றி, மற்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு தேசத்தின் மனசாட்சி போல் ஆனது.

‘இரண்டில் ஒன்று’ நாடகத்தில் சிவாஜியும்<br />செந்தாமரையும் நடிக்கும் காட்சி.
‘இரண்டில் ஒன்று’ நாடகத்தில் சிவாஜியும்
செந்தாமரையும் நடிக்கும் காட்சி.

மறக்க முடியாத எஸ்.பி.சௌத்ரி: கதாபாத்திர வார்ப்புக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அணுகுமுறை யால் நடிப்பில் சிகரம் தொடுவதில் நடிகர் திலகத்துக்கு நிகர் அவர் மட்டும்தான். ஒரு புதிய படம் வெளிவரும்போது, அதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை, அதன் குணாம்சங்களுக்குரிய நுணுக்கங் களைச் சில காட்சிகளுக்குள்ளாகவே நடிப்பில் வெளிப்படுத்திவிடுவார்.

அந்தச் செயல்முறையின் மூலம், தனது முந்தைய படங்களின் கதாபாத்திரங்களைத் தற்காலிகமாக மறக்கச் செய்துவிடும் நடிப்புக்கு இவரே மூலவர். அதற்கு ‘தங்கப் பதக்கம்’ எஸ்.பி.சௌத்ரி ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அக்கதாபாத்திரத்துக்கு அவர் அணிந்திருந்த காக்கிச் சீருடை எப்படிக் கச்சிதமாகப் பொருந்தியதோ, அதேபோல் அதற்குப் பொருத்தமான உடல்மொழியைக் கொண்டு நடிகர் திலகம் அதை நடிப்பில் வடிவமைத்திருக்கிறார். நடை, உடை, பாவனை அனைத்தும் ஒரு நிஜமான உயர் காவல்துறை அதிகாரியை அப்படியே நம் கண் முன் நிறுத்தியது.

கண்களைக் கொண்டு.. பார்வை, விழி அசைவுகள் வழியாக வெவ்வேறு உணர்வுகளை ரசிகனுக்கு நொடிக்குள் உணர்த்துவதில் சிவாஜி ஒரு நடிப்பு மேதை. குழந்தை கடத்தல் விவகாரத்தில் தனது உயரதிகாரியிடம் மகன் பொய் சொல்வான். அதைப் பொருள் பொதிந்த புன்னகையோடு எதிர்கொண்டு தனது கதாபாத்திரத்தின் கண்ணியத்தைப் பார்வை மூலம் அவர் வெளிப்படுத்தும் விதம் நுட்பமானது.

மகனுக்கு ஆசையாகப் பழங்களை எடுத்துக் கொடுக்க, அவன் அவரைத் தூக்கியடித்து உதாசீனப்படுத்த, அந்த வேதனையைக் கண்களில் காட்டுவார். அதே நேரம் வழி தவறிச் செல்லும் மகனைக் கண்டித்து நேர்வழி திருப்ப அவர் எடுக்கும் கடைசி முயற்சியும் தோல்வியுறும். அப்போது “ஒரு போலீஸ் அதிகாரியாக உன்னை எச்சரிக்கிறேன்” என்று கையில் இருக்கும் குடையைத் தரையில் குத்தும் இடத்தில் சிவாஜியின் கண்களைப் பார்த்து காந்த் மட்டுமல்ல பார்வையாளனும் பயந்து போவான்.

உடல்மொழியும் உச்சரிப்பும்: உடலின் அங்கங்களைக் கொண்டு உடல்மொழியின் வழியாகக் கதாபாத்தி ரத்தின் நிலையைக் கச்சிதமாக வெளிப்படுத்துவதில் சிவாஜி ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம். அதேபோல், உடல்மொழியுடன் வசன உச்சரிப்பைக் கச்சிதமாக இணைப்பதிலும் சிவாஜியே சிறந்த முன்மாதிரி. அதற்கு, மகன் வேலை செய்யும் சிட்பண்ட் நிறுவனத்தில் நடந்த கையாடல் பற்றி விசாரணை நடத்த வரும் சௌத்ரியின் உடல்மொழி ஒரு சான்று.

அந்தக் காட்சியில் கிடுக்கிப்பிடியாகக் கேள்விகள் கேட்டு இறுதியில் அவர் வைக்கும் பஞ்ச் “வேலூருக்குப் போறதா இருந்தா தனியாதான் போகணும்". மகனின் பிறந்த நாள் விழாவிலேயே அவனைக் கைது செய்ய, கோபம் தலைக்கேறி அவன் அவரைச் சவாலுக்கு அழைக்க, அப்போது உணர்வுகளைச் சிதற விடாமல் முக அங்கங்களை அடக்கி வாசிப்பார்.

குற்றவாளியான மகன் தப்பிப் போய் விட, உயரதிகாரியின் முன் தோள் சரிந்து, தளர்ந்துபோய் நிற்பார். தப்பிச் சென்றவன் பிடிபட்டு விட்டான் என்கிற செய்தியைக் கேட்டதும் சிவாஜியின் தோள்கள் விரிந்து புஜம் புடைக்கும்.

அடுத்த நொடியே மனைவியின் இறப்புச் செய்தி வர, மீண்டும் தோள்களும் கைகளும் தளர்ந்துபோகும். அதிக வசனங்கள் இல்லாமல் மனைவியின் உடல் மீது விழுந்து நடிகர் திலகம் கதறும் காட்சி உடல்மொழி நடிப்புக்கு மற்றொரு சிறந்த சாட்சி.

‘சீரிய’ஸான சௌத்ரியாக மட்டுமல்ல, பிறந்த நாள் விழாவில் மனைவியைக் கிண்டல் செய்வது, நண்பன் வி.கே.ராமசாமியைச் செல்லமாக மிரட்டுவது, ‘நல்லதொரு குடும்பம்’ பாடலில் நளினமான நடன அசைவுகள் காட்டுவது என்று ‘ஸ்டைலா’ன உடல்மொழியையும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப வெளிப் படுத்துவதில் சிவாஜி சிறந்த முன்னோடி.

எஸ்.பி.சௌத்ரி கதா பாத்திரம் தமிழ்நாட்டுக்கு அறிமுக மாகி இதோ அரை நூற்றாண்டு ஆகி விட்டது. கதாபாத்திரத்தைப் படைத்த மகேந்திரனிடமே கடன் வாங்கிச் சொன்னால் ‘எஸ்.பி.சௌத்திரி வில் நெவர் ஃபெயில்’

- t.murali.t@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in