Last Updated : 27 Apr, 2018 10:16 AM

 

Published : 27 Apr 2018 10:16 AM
Last Updated : 27 Apr 2018 10:16 AM

தரணி ஆளும் கணினி இசை 29: காதுகளுக்கும் கருவிகளுக்கும் காதல்!

ஒரு ஆடியோவை அல்லது இசையைப் பதிவு செய்யவும் அதை ஒலிக்கவிட்டு கேட்டு இன்புறவும் (Record and play) இன்றைய டிஜிட்டல் சந்தையில் பல ஆடியோ ஃபார்மெட்டுகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த ஆடியோ ஃபார்மெட் எது என்று உங்களால் கூறமுடிமா தெரியவில்லை. காரணம் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை எப்படி நாம் கொண்டாடுகிறோமோ அப்படித்தான் எம்பி3 ஃபார்மெட்டையும் கடந்த 25 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம். எம்பி3 இத்தனை பிரபலமாக இருப்பதற்கான காரணத்தைக் கடந்த பல அத்தியாயங்களில் நான் விளக்கினேன். ஆனால் எம்பி3 மட்டும்தான் சிறந்ததா, வேறு சாய்ஸே கிடையாதா என்று கேட்டு என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்துவிட்டீர்கள்.

ஒலிச்சேதாரமும் ஒலிமுழுமையும்

ஃப்ளாக் (FLAC), வேவ் (WAV), டபிள்யூ.எம்.ஏ (WMA), ஏஏசி (AAC), ஓஜிஜி (OGG) உட்பட பத்துக்கும் அதிகமான ஆடியோ ஃபாரமெட்டுகள் இருக்கின்றன. பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல் ஒலித் தரத்தின் அடிப்படையில் இந்த ஃபார்மெட்டுக்களை ஒலிச்சேதாராம் (Lossy) கொண்டவை, ஒலிமுழுமை (Lossless) கொண்டவை என்ற இரண்டு வகையாகப் பிரித்துவிடலாம். உங்களது மியூசிக் சிடியில் உள்ள பாடல் ட்ராக்குகள், கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் தரவிறக்கி வைத்திருக்கும் ட்ராக்குகள், பென் ட்ரைவில் நீங்கள் சேமித்து வைத்திருப்பது என எந்தவொரு இசையை நீங்கள் பிளே செய்தாலும் ஆடியோவின் டேட்டாவும் ஒலித்தரமும் சேதாரம் இல்லாமல் ஒலித்தால் அதை லாஸ்லெஸ் ஃபார்மெட் என்று கூறிவிடலாம்.

லாஸி ஃபார்மெட்டைப் பொறுத்தவரை ஆடியோ பைலை நாம் எந்த அளவில் கம்ப்ரெஸ் செய்து பதிவு செய்து வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து சில ஒலிகளின் சேதாரத்தைத் தவிர்த்துவிடலாம்.

எம்பி3 மற்றும் டபிள்யூ.எம்.ஏ. இரண்டையும் லாஸி ஃபார்மெட் வகையில் வைத்திருக்கிறார்கள். அதேபோல ஃப்ளாக் மற்றும் வேவ் இரண்டும் லாஸ்லெஸ் ஃபார்மெட்டுகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்று பாப்புலராக இருக்கும் எம்பி3 ஒரு லாஸி ஃபார்மெட்தான் என்றாலும், அதில் பதிவுசெய்யப்படும் இசை ‘மாஸ்டரிங்’ செய்யப்பட்ட ஒரிஜினல் ஃபைலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால் ஒலிச்சேதாரம் என்பது மிக மிகக் குறைவாக இருக்கும். அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

27chrcj_sound bars spekers சவுண்ட் பார் ஸ்பீக்கர் ஆடியோவின் அளவு

அதேபோல லாஸ்லெஸ் ஃபார்மெட்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஃப்ளாக் மற்றும் வேவில் ஒலித்தரத்துக்கு ஏற்ப ஃபைல் சைஸும் பெரிதாக இருக்கும். பெரிய ஃபைல்கள் ரீடாகும்வரை காத்திருந்துதான் நமது இசைப் பசியை ஆற்றிக்கொள்ள முடியும். அதேபோல பெரிய ஃபைல்களை மின்னஞ்சல் வழியே பகிர்ந்துகொள்வதில் குறைந்தபட்ச அளவு என்ற சிக்கல் இருக்கிறது.

மின்னஞ்சல் வழியே நீங்கள் 25 எம்.பிக்குமேல் அனுப்ப முடியாது. அதிகமாகப் பகிர்ந்தாலும் ட்ரைவ் வழியே பகிரும்போது உங்கள் மின்னஞ்சலின் இலவச பயன்பாட்டு அளவை அது விரைவிலேயே தீர்த்துவிடலாம். இன்று இணையவேகம் அதிகமாகக் கிடைக்கிறது என்றாலும் மேலும் வேகமாகச் சென்றடைவதிலும் பெரிய ஃபைல்கள் பந்தயத்தில் தூங்கிவிடும் முயல்களை போன்றவை.

ஸ்மார்ட் போன்களில் பெரிய ஃபைல்களைத் தரவிறவிக்கும்போது எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணலாம். தவிர பெரிய ஃபைல்களை, நமது கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் சேமித்து வைக்க, இடம் ஒரு சவாலாக இருக்கும். இந்தப் பிரச்சினையை எம்பி3 மிக எளிதாகக் கடந்து வந்துவிட்டதால்தான் அது தன்னிகரற்ற ஆடியோ ஃபார்மெட்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அப்படியானல் ஃபைலின் அளவைச் சிறிதாக்குவதைத் தவிர ஒலியின் தரத்துக்கு எம்பி3 முக்கியத்துவம் தருவதில்லையா என்று கேட்கலாம். அப்படிச் சொல்ல முடியாது.

ஃப்ளாக் ஃபார்மெட் ஒரு பாடலின் ஒரிஜினல் அளவைப் பாதியாகக் குறைக்கிறது. ஆனால் எம்பி3யில் ஒரிஜினல் அளவை ஒன்றில் ஐந்தாகவும் (one by fifth), ஒன்றில் பதினைந்தாகவும் (one by fifteen) கூடக் குறைக்க முடியும். இப்படி ஃபைலின் அளவைக் குறைத்துப் பதிவுசெய்தாலும் எம்பி3-ன் மேக்ஸிமம் பிட் ரேட்டாக (Number of bits per second in Data transfer) இருக்கும் 320 கேபிபிஎஸ்ஸுக்குக் குறையாமல் செய்துவிட்டால் ஒலித்தரத்தில் இருக்கும் சில சேதாரங்களை நாம் தவிர்த்துவிட முடியும்.

எம்பி3-க்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவுக்கு அது எல்லாச் சாதனங்களிலும் எளிதில் பிளே ஆவதும் முக்கியக் காரணம். ஃப்ளாக் ஃபார்மெட்டைப் பொறுத்தவரை அது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓபன் சோர்ஸ் பிளேயர்தான் என்றாலும், அது ஆப்பிள் போன்களிலும் ஒருசில ஆண்ட்ராய்டு பதிப்பு போன்களிலுமே கிடைக்கிறது. அதே நேரம் ஃப்ளாக் ஃபார்மேட்டின் தரம் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை.

27chrcj_blue tooth speakers ப்ளூடூத் ஸ்பீக்கர் rightஇசைக்கு 2.1

திரையரங்குகளில் சரவுண்ட் சவுண்ட், அட்மாஸ் சவுண்ட் ஆகியவை ரசிகர்களுக்குத் திரை அனுபவத்தை முழுமையாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. 5.1, 7.1 ஆகிய தடங்களில் ஒரு திரைப்படத்தின் ஒலிகள் பிரிந்து ஒலிக்கின்றன. இந்த இரண்டுமே இசையைக் கேட்பதற்கான ஒலித் தடங்கள் அல்ல. இசையை 2.1 ஸ்பீக்கரில் கேட்பதே சரியானது; தரமானது. ஏனென்றால் பாடல் இசையானது மாஸ்டரிங் செய்யப்படும்போதே வாத்திய ஒலிகள் இடது, வலது ஸ்பீக்கர்களுக்குத்தான் பிரித்து அனுப்பப்படுகின்றன. புல்லாங்குழல் போன்ற சோலோ வாத்தியங்களை மோனோ ட்ராக்காகப் பதிவு செய்து ஸ்டீரியோவில் நடுவில் ஒலிக்கும்விதமாக ட்ராக் பிரிப்போம்.

இப்படிச் செய்யும்போது இடது, வலதுக்குச் சரிசமமாகப் பிரிந்து சென்றுவிடும். அதேபோல் குரலும் பெரும்பாலும் மோனோ ட்ராக்கில்தான் பதியப்படுகிறது. குறிப்பிட்ட சில பாடல்களுக்கு மட்டுமே குரலை டபுள் ட்ராக் எடுப்போம். ஆனால், ஹோம் தியேட்டர் ஒலி அமைப்புக்காக 5.1 மற்றும் 7.1 ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைப்பதால் அவற்றையே பெரும்பாலான ரசிகர்கள் வாங்கிவந்து வீட்டில் பயன்படுத்துகிறார்கள். அப்படி ஏற்கெனவே வாங்கிவிட்டீர்கள் என்றால் இசையை மட்டும் கேட்க அதிலிருக்கும் ஸ்டீரியோ மோடை ஆன் செய்துகொள்ளுங்கள். அப்போது வேறுபாட்டை நீங்களே உணர்வீர்கள்.

ஸ்பீக்கரில் எல்லாம் அடக்கம்!

ஆம்ப்ளிபயர்களைத் தனியே உபயோகித்த காலம் தற்போது இல்லை. ஆம்ப்ளிபயர்களுடன் கூடிய ‘ஆக்டிவ்’ ஸ்பீக்கர்கள்தாம் சவுண்ட் ஸ்டூடியோக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீங்களும் வாங்கிப் பயன்படுத்துங்கள். இன்று இடது, வலது மற்றும் சப் வூஃப்பருடன் கூடிய தரமான சவுண்ட் பார் ஸ்பீக்கர்களும் புக் ஷெல்ப் ஸ்பீக்கர்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.

அதேபோல மேஜைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் ஸ்பீக்கர்களும் இசையை ரசிக்க உகந்தவை. இன்று ஸ்பீக்கர் சந்தையில் கிடைக்கும் ப்ளூ டூத் ஸ்பீக்கர்கள் கேபிளை மேலும் கீழும் இழுத்துக்கொண்டு அல்லல்பட வேண்டிய அவசியம் இல்லால் செய்துவிட்டன. இவற்றின் வழியாகவும் சேதாரம் இல்லாத ஸ்டீரியோ இசையைச் சிறப்பாகக் கேட்க முடியும்.

இப்படி இசையைப் பதிய, பரவலாக்க, கேட்க இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தின் வழியே உங்களை வந்தடையும் இசையைப் படைக்கும் இசைக் கலைஞர்களை நாம் வேறுபாடுகளுக்குள் அடக்கலாமா? அடுத்த வாரம் பகிர்கிறேன்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x