

எம்.எஸ்.வி. தனித்து இயங்கத் தொடங்கிய போது அவரது இசையமைப்பில் வெளிவந்த முதல் படம் ‘கலங்கரை விளக்கம்’. அந்தப் படத்துக்குப் பாட்டெழுத வந்தார் கவிஞர் வாலி.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பதிவு என்றால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, பல சமயங்களில் படத்தின் நாயகன்கூட வந்து அமர்ந்துவிடுவார். அவர்கள் அனைவருக்கும் பிடித்த மெட்டும் பாடலும்தான் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வாலி பாட்டெழுத வந்து அமர்ந்ததும், எம்.எஸ்.வி., தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கைக் கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றித் தனது ஹார்மோனியத்தின் மீது வைத்து விட்டுச் சொன்னார்: “கவிஞரே! இந்த டியூனுக்குப் பொருத்தமான பல்லவியை நீங்கள் எழுதிட்டா இதையெல்லாம் நீங்க எடுத்துக்கலாம், சவால்!”. இதைக் கேட்டு, ‘காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ எனப் பளிச்சென்று பல்லவி கொடுத்தார் வாலி. “சபாஷ்.. கவிஞரே” என்ற எம்.எஸ்.வி.சொன்னபடி ஹார்மோனியத்தின் மீது வைத்த அனைத்தையும் கவிஞர் வாலியின் பக்கம் நகர்த்தினார்.
ஆனால் வாலி அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.“ இது தந்தை போன்ற உங்களின் தயாளத்தைக் காட்டறது; தமிழோ எனக்குத் தாயைப் போல் வார்த்தைகளை அடையாளம் காட்டு கிறாள். உங்க ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் போதும். இன்னும் ஆயிரம் பாடல்கள் எழுதுவேன்” என்று கூறித் தங்கச் சங்கிலி, மோதிரத்தை வாலியே அன்பாக அணிவித்துவிட்டார். அந்த அளவுக்கு, வரிகள் இல்லாமல் இசை எழுந்து நடமாட இயலாது என்று நம்பியவர் எம்.எஸ்.வி.
தனது இசையில் பாடவரும் கவிஞர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரேதான்.
பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர் களுக்கு இணையாக என்றைக்கும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் எம்.எஸ்.வி. உறுதியாக இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம்.
ஒரு பாடலாசிரியர் எழுதிய திரைப் பாடல், திரைப்படத்தைத் தாண்டி வானொலி, தொலைக்காட்சி, இன்னபிற எதிர்கால ஊடகங்கள், மேடைக் கச்சேரி களில் பாடப்படும்போது விளம்பரங்கள் வாயிலாகக் கிடைக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கினை அவர்களுக்கு ராயல்டியாக வழங்கும் பணியைச் செய் வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ஐ.பி.ஆர்.எஸ்’ (IPRS - INDIAN PERFORMING RIGHT SOCIETY LTD).
இந்த அமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள ஒரு தொடக்கப் பதிவுத் தொகை உண்டு. அதை, கவிஞர் காமகோடியன் செலுத்த முடியாத நிலையில் இருப்பதை அறிந்து அவருக்காக அந்தப் பதிவுத் தொகையையும் கட்டித் தானே பரிந்துரையாளராக விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் போட்டு அவரை உறுப்பினராக ஆக்கினார் எம்.எஸ்.வி. இதன் விளைவாக அவருக்கு உரிமத்தொகை கிடைக்கத் தொடங்கியது.
இசையமைப்பாளருக்கும் பாடலாசிரி யருக்கும் இடைப்பட்ட உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் இலக் கணமே வகுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி. “அவங்க ரெண்டு பேரும் கணவனும் – மனைவியும் போல ஒத்த மனசோடு இருக்கணும். அப்பப்போ சண்டை போட்டுக்கலாம்.
ஆனால் அந்தச் சண்டை எல்லாம் பாட்டு என்கிற குழந்தை நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் இருக்கவேண்டுமே தவிர, இருவரில் யார் பெரியவன் என்று கட்சி கட்டுவதில் இருக்கக் கூடாது” என்று கவிஞர் வாலியிடம் கூறியிருக்கிறார் எம்.எஸ்.வி.
காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்கள் நமது செவிகளை நனைத்து, மனங்களை இன்றைக்கும் நிறைத்துக் கொண்டிருப்பதற்கு இசையும் வரிகளும் இணைந்த இந்த அற்புதமான உறவுதானே ஆதாரம். அதைச் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.
(நிறைந்தது)
- பி.ஜி.எஸ்.மணியன்; pgs.melody@gmail.com