

எங்கெல்லாம் எதேச்சதிகார ஒடுக்குமுறையின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் மானுட நேயத்தின் மனசாட்சியோடு இயங்குவது கலையின் முதன்மைச் செயல்பாடு. இதில் திரைப்பட வரலாற்றுக்கும் பாரிய பங்குண்டு.
உலகையே அச்சமுறச்செய்த ஹிட்லர் உயிரோடிருந்தபோதே அவரைத் திரையில் கோமாளியாக்கி நையாண்டி செய்தவர் சார்லி சாப்ளின். அவர் நடித்து, இயக்கிய ‘The Great Dictator’ படத்திலிருந்து இந்தத் துணிச்சல் மிகுந்த எதிர்ப்பின் அத்தியாயம் தொடங்குகிறது.
எனினும் ஆயுதமேந்தி நிற்கும் அதிகாரத்துக்கு முன்னே, கலைஞர்களின் கையிலிருப்பது ரத்தம் சிந்தச் செய்யாத படைப்பு மட்டுமே. அதன் கருத்தமைவை விமர்சனமாகப் பாவித்து உரையாடலுக்கு வரத்துணியாத அதிகாரம், இழிவான வழியில் அப்படைப்பாளரைச் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.
ரஷ்யத் திரை மேதையான ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி தனது படைப்புகளினது அரசியல்வீர்யம் காரணமாகச் சொந்த நாடான ரஷ்யாவுக்குள் தனது இறப்புவரை திரும்பிச்செல்ல இயலவில்லை. குர்திஷ் சினிமாவின் இன்றியமை யாத இயக்குநரான இல்மஸ் குணே சிறையில் வாழ்ந்து கழிந்த காலம் அதிகம். ஈரானிலும் இந்த ஒடுக்கு முறைக்கு அகண்ட நிழல் உண்டு.
கலைத் தொடர்ச்சி: ஈரானிய சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர்களில் முதன்மையானவர் அப்பாஸ் கியாரோஸ்டமி. அவரது கலைத் தொடர்ச்சியாக வருபவர் ஜஃபார் பனாகி. கடந்த 2000இல் வெளிவந்த பனாகியின் மூன்றாவது படமான ‘The Circle’ வெளிவரும் முன்னரே தடைசெய்ததில் தொடங்கி அவர் மீதான படைப்புத் தாக்குதலை ஈரானிய அரசு தொடர்ந்து தொடுத்து வந்தது.
அடுத்துவந்த ‘Crimson Gold’ மற்றும் ‘Offside’ ஆகிய படங் களுக்கும் தடைகள் தொடர்ந்தன. அடுத்தக்கட்டமாக, 2010இல் அவர்மீது ஈரானிய அரசு தொடுத்தத் தாக்குதல் யாரும் நினைத்துப் பாராதது. 20 ஆண்டுகளுக்குத் திரைப்படங்களை இயக்கத் தடை.
தடை குறித்துப் பின்னடைவு கொள்ளாமல் அதை எதிர்க்கும் வண்ணம் அடுத்த வருடமே ‘This is not a Film’ என்கிற படத்தை ஐபோன் மூலமாக இயக்கினார். வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருந்த பனாகியின் அன்றாட வாழ்வைச் சித்திரித்த அப்படம், பிறந்தநாளுக்குப் பரிசளிக்கப்படும் இனிப்புக்குள் மறைக்கப்பட்ட ஒரு ஃப்ளாஷ் டிரைவ் மூலமாகக் கடத்தப்பட்டு கான் பட விழாவில் திரையிடப்பட்டது.
பெர்லின் பட விழாவின் ‘தங்கக் கரடி’ விருதைப் பெற்ற அவரது ‘Taxi’ படத்தில் ஓட்டுநரைப் போல் நடித்து வாகனத்தில் ஏறும் பயணிகளுடன் மேற்கொள்ளும் உரையாடலின் வழியாக அப்போதைய ஈரானிய களநிலவரத்தைத் திரைக்குள் கொணர்ந்தார் பனாகி.
2022இல் வெளிவந்த ‘No Bears’ ஈரானுக்குள் அனுமதியின்றி ரகசியமாக எடுக்கப்பட்ட படம். அவ்வருட வெனிஸ் பட விழாவில் அப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக ஜூலை 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். சக இயக்குநரான மொஹமத் ரசூலஃப் கைது செய்யப்பட்டதற்குத் தனது எதிர்ப்புணர்வைக் காட்டியதே கைதின் பின்னணி.
6 வருட சிறைத் தண்டனை. அநீதியான பல மாதங்களைக் கடந்து, 2023, பிப்ரவரி 1ஆம் தேதி தனது விடுதலையை நிர்ப்பந்தித்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க, இரு நாள்களில் விடு விக்கப்பட்டார். அதற்குப் பின்பு, அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததால் பனாகி ஈரானை விட்டு விட்டு வெளியேறியிருக்கிறார்.
சிறையெனும் அடக்குமுறை: மொஹமத் ரசூலஃப்பின் பக்கம் வருவோம். 2002இல் ‘The Twilight’ படத்தின் மூலமாகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியவர். பனாகிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டில் (2010), ‘திரைப்படம் எடுக்க முறையான அனுமதி பெறவில்லை’ என்கிற குற்றச்சாட்டின்பேரில் ரசூலஃப் படப்பிடிப்புத் தளத்திலேயே கைது செய்யப்பட்டு, 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்பு தண்டனை ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டது.
2017இல் வெளிவந்து கான் திரைப்பட விழாவின் ‘UnCertain Regard’ பிரிவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்ற ‘A Man of Integrity’ படத்தின் வழியாக மீண்டும் சோதனை. ‘நாட்டின் பாதுகாப்புக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பதாக’ குற்றம்சாட்டப்பட்டு, 2019, ஜூலைமாதம் ஒரு வருட சிறைத் தண்டனைக் கான தீர்ப்பளிக்கப்பட்டது. நாட்டை விட்டு இரண்டு வருடங்களுக்கு வெளியேறவும் தடை.
2020, மார்ச் 1ஆம் தேதி நிறைவு பெற்ற 70ஆவது பெர்லின் திரைப்பட விழாவில் ரசூலஃப் இயக்கிய ‘There is no Evil’ தங்கக் கரடி விருதைப் பெற்றது. விழாவுக்குச் செல்ல அவர் அனுமதிக்கப் படாததால், அவருடைய மகள் பங்கேற்று விருதைப் பெற்றார். விருதுபெற்ற இரு நாள்கள் கழித்து, மார்ச் 4ஆம் தேதி இரண்டு வருடங்களுக்குப் படம் இயக்கத் தடையுடன் மீண்டும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்போதைய காரணம் ‘அவரது படங்கள் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன’ என்பது.
விருதுக்கு அடுத்த நாள்: தொடர்ச்சியான சிறைத் தண்டனைகளுக்கு மத்தியில் ரசூலஃப்பின் திரைப்பட இயக்கம் ஓய்ந்துவிடவில்லை. முயற்சிகள் முன்பைவிட காத்திரத்துடன் தொடர்கின்றன. இந்த வருடம் அவர் இயக்கியிருக்கும் ‘The Seed of the Sacred Fig’ கான் பட விழாவின் உயரிய தங்கப் பனை விருதுக்கானப் போட்டிப் பிரிவில் கலந்து கொள்கிறது.
விழாவின் திரை யிடலிலிருந்து படத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈரானிய அதிகாரம் ஆணையிட்டது. அவர் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து, ரசூலஃப்பின் சொத்தை பறிமுதல் செய்வதுடன் அவருக்கு 8 வருட சிறைத் தண்டனையும் கசையடியும் அபராதமும் விதிக்கப் பட்டிருக்கின்றன.
இதையடுத்து, ரசூலஃப் தனது படக்குழுவினர் சிலருடன் ஈரானி லிருந்து சிரமமான பயணத்தை மேற்கொண்டு தப்பிச் சென்ற அவர், தற்போது ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இன்று (24.05.2024) கான் திரைப்பட விழா வின் பெருமைக்குரிய அங்க மாகத் திகழும் சிவப்புக் கம்பள வர வேற்புக்கு அழைக்கப்பட்டு அதில் கலந்துகொள்கிறார்.
ஏற்கவியலாத கடினமான காலத்தைக் கடந்துவந்த வேதனையுடன் அவர் குறிப்பிடுகிறார், “சிறை வாழ்வா அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவதா என நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இறுதியில் கனத்த இதயத்துடன் புலம்பெயர்தலைத் தேர்வு செய்திருக்கிறேன்”
- viswamithran@gmail.com