

‘போதை ஏறி புத்தி மாறி’ , ‘டபிள் டக்கர்’ படங்களின் மூலம் நல்ல நடிகர் எனப் பெயர் பெற்றிருக்கும் தீரஜ் நாயகனாகவும் மாற்றுத் திறனாளி என்பதையே தனது நடிப்பால் மறக்கச் செய்துவிடும் அபிநயா நாயகியாகவும் ரேவதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படம் ‘பிள்ளையார் சுழி’. படத்தை எழுதி இயக்கி இயக்குநராக அறிமுக மாகிறார் மனோகரன் பெரியதம்பி. அவரிடம் உரை யாடியதிலிருந்து ஒரு பகுதி.
‘உண்மையான ஆட்டிசம் குழந்தைகளைச் சிறார் நடிகர்களாக வைத்து எடுத்துள்ள முதல் தமிழ்த் திரைப்படம்’ என்று ‘கிளெய்ம்’ செய்திருக்கிறீர்கள்... ஆமாம்! அவர்களது உலகம் சினிமாவில் விரிவாக அதேநேரம் தொடர்ந்து பேசப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அவ்வாறு பேசப்படவில்லை. அவர்களது உலகை ஆழமாக அறிந்துகொள்ளாமல் மேலோட்டமாக ஒரு கற்பனைக் கதையைப் படமாக்க முடியாது.
இந்தப் படம் முழுவதும் உண்மை நிகழ்வுகளிலிருந்து எழுந்து வந்திருக்கும் ஒரு நம்பிக்கைச் சுடர். இதை நான் சொல்வதைவிட ‘ஆடியன்ஸ்’ பார்க்கும் போதே உணர்வார்கள். இவ்வளவு காலமும் நாம் இந்தக் குழந்தைகளை எவ்வளவு மேலோட்டமாக கடந்து சென்றிருக்கிறோம்’ என்கிற புரிதலோடு இந்தப் படம் நெகிழ்ச்சியான தருணங்களுடன் கூடிய மனத் திறப்பை ரசிகர்களிடம் சாத்தியப்படுத்தும்.
யார் அந்த ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்? - இதில் சென்னையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன், ஃபர்ஹானா ஆகிய இரண்டு ஆட்டிசம் சிறார்களை அவர்களுடைய பெற்றோரின் அனுமதியுடன் நடிக்க வைத்திருக்கிறேன். இறுக்கம், அழுகை, மகிழ்ச்சி, வேகம், தீவிரம், அமைதி என அவர்கள் தங்கள் மனவெளியில் காணும் உலகையும் உணர்வுகளின் வண்ணங்களையும் வெளிப்படுத்தும் வரை கேமராவை இடை நிறுத்தாமல் ஓடவிட்டு, பொறுமையாக மணிக் கணக்கில் காத்திருந்து படமாக்கியதால் 70 நாள்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது.
உன்னிகிருஷ்ணனின் ஒரு குளோஸ் அப்புக்காக, அவன் அழுவதற்காக 6 முதல் 8 மணிநேரமெல்லாம் காத்திருந்தோம். கதைக்கு என்ன தேவையோ, அதை அவர்கள் வெளிப்படுத்தும் வரைப் பொறு மையுடன் காத்திருந்து படமாக்கினோம்.
ஆட்டிசம் பாதித்த சிறார்கள் நடிக்க, அவர்களுடைய பெற்றோர் ஒப்புக்கொண்டார்களா? - உன்னிகிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு நிறைய ஆட்டிசம் பாதித்த சிறார்களைத் தேடினேன். ‘எங்கள் பிள்ளையை ஒரு ஆட்டிசம் குழந்தையாக வெளிப்படுத்த விரும்பவில்லை’ என்று பல பெற்றோர் மறுத்துவிட்டார்கள். இந்த மனத்தடைதான் அந்தக் குழந்தைகளுக்கான முன்னேற் றத்தில் முதல் தடை.
தீரஜ் இந்தக் கதைக்குள் எப்படி வந்தார்? - முழுநீளத் திரைக்கதையை எழுதி முடித்ததும், அதன் கிளைமாக்ஸை மட்டும் ஒரு குறும்படமாக எடுத்து நெய்வேலி புத்தகக் காட்சியில் நடத்தப்பட்டப் போட்டிக்கு அனுப்பினேன். படம் முதல் பரிசு பெற்றது. இதைப் பார்த்த மைம் கோபி அண்ணா, இதை தீரஜ்ஜுக்கு அனுப்ப, இதில் நான்தான் நடிப்பேன் என்று தேடி வந்துவிட்டார். அதேபோல் அபிநயாவிடம் கதையைச் சொன்னபோது அழுதுவிட்டார்.
அடுத்து ரேவதி மேடம், ‘எனக்குப் பல கமிட்மெண்டுகள் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் மற்ற வேலைகள்’ என்று வந்தார். ‘இந்தப் படத்தின் கதை 100 சதவீதம் என்றால் இசை 200 சதவீதம்’ என்று நியூயார்க் சர்வதேசப் படவிழாவின் போட்டிப் பிரிவு ஜூரிகள் பாராட்டுப் பத்திரம் அனுப்பியிருக்கிறார்கள்.
இசையமைத்திருக்கும் ஹரி.எஸ்.ஆர். மிகப்பெரிய உயரங்களைத் தொடுவார். ஒளிப்பதிவாளர் பிரசாத்துக்குப் பொறுமை மட்டுமல்ல; இந்தக் குழந்தைகளை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார்.