Published : 13 Apr 2018 10:35 AM
Last Updated : 13 Apr 2018 10:35 AM

அயல் சினிமா: கவனம் ஈர்க்கும் கன்னட சினிமா

1934

-ல் வெளியான ’சதி சுலோச்சனா’தான் முதல் கன்னடப் படம். ஒரு பக்கம் வணிக மசாலாப் படங்களை வண்டி வண்டியாகத் தயாரித்துக்கொண்டிருக்கும் கன்னட சினிமாவில் 1970-களிலிருந்தே மாற்று சினிமாக் களமும் காத்திரமாக இயங்கிவருகிறது. பி.வி.கரந்த், பட்டாபிராம ரெட்டி, புட்டண்ணா கனகல், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி உள்ளிட்டோர் கன்னட மாற்று சினிமாவின் முன்னோடிகள். இவர்களில் கிரிஷ் காசரவள்ளி தொடர்ந்து படங்களை இயக்கிவருகிறார். 2012-ல் அவர் இயக்கிய ’கூர்மாவதாரா’, சிறந்த கன்னடப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. இந்த முன்னோடி இயக்குநர்களின் முயற்சியால் கன்னடத்தின் சிறந்த நவீன இலக்கியப் படைப்பாளிகளான சிவராம காரந்த், கே.வி. புட்டப்பா, யு.ஆர். அனந்தமூர்த்தி உள்ளிட்டோரின் படைப்புகள் சிறந்த திரைப்படங்களாகி விருதுகளையும் வென்றுள்ளன. இதுவரை ஆறு கன்னடப் படங்கள் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளன.

தரத்தைக் குறைத்த காரணிகள்

1980-90-களில் இந்தி, தெலுங்கு, தமிழைப் போல் கன்னட வெகுஜன சினிமாவும் மசாலாமயமானது. இதே காலகட்டத்தில் தமிழ், மலையாளப் படங்களில் வணிக சட்டகத்துக்குள் சிறந்த திரை எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உருவாகிவந்ததைப் போல் கன்னட சினிமாவில் நடைபெறவில்லை. இது கன்னட வெகுஜனப் படங்களின் தரத்தைப் பெருமளவில் பாதித்தது. அவ்வப்போது சில தரமான படங்கள் வந்தாலும், அவை மாநிலம் தாண்டிய கவனத்தை ஈர்ப்பது அரிதினும் அரிதாகவே இருந்துவந்தது. பெருமளவில் மாற்றுமொழிகளிலிருந்து மறு ஆக்கம் அல்லது மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் ஆட்சி செலுத்தத் தொடங்கின.

இளைஞர்களால் மாறிய முகம்

கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி கன்னட வெகுஜன சினிமா புத்தெழுச்சி பெற்றுவருகிறது. பவன்குமார், ரக்‌ஷித் ஷெட்டி, ராம ரெட்டி உள்ளிட்ட இளம் இயக்குநர்கள், கன்னட சினிமாவின் முகத்தை மாற்றிவரும் படைப்பாளிகளாகவும் ‘புதிய அலை’யை முன்னெடுத்தவர்களாகவும் அடையாளம் காணப்படுகிறார்கள். கன்னடப் படங்கள் மலையாளம், தமிழ் ஆகிய தென்னக மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படும் போக்கும் தொடங்கிவிட்டது. புத்தாயிரத்துக்குப் பிறகு வெளியான சிறந்த கன்னடப் படங்கள் கன்னட சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளங்கிக்கொள்ள உதவும்.

த்வீபா (2002)

நம்பிக்கைக்கும் நடைமுறைப் பார்வைக்கும் இடையிலான போராட்டத்தைத் தனக்கேயுரிய பாணியில் சித்தரித்து மிகச் சிறந்த திரை அனுபவத்தைத் தந்திருக்கிறார் காசரவள்ளி. சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் வென்றது. கடைசியாகச் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வாங்கிய கன்னடப் படம் இதுதான்.

லைஃபு இஷ்டேனே (2011)

கன்னட சினிமாவின் ‘புதிய அலை’ இயக்குநர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இளைஞர் பவன் குமார் இயக்கிய முதல் படம் ‘லைஃபு இஷ்டேனே’. ’விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக டி.டி.ஹெச்-ல் வெளியிடும் முயற்சி தமிழில் இயலாமல் போனது. ஆனால், இந்தப் படத்தை அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே திரையரங்க வெளியீட்டின்போதே வெளிநாடுகளில் இணையத்தில் பார்ப்பதற்கு வெற்றிகரமாக வெளியிட்டார்கள்.

தண்டுபால்யா (2012)

கர்நாடகத்தின் தண்டுபல்யா என்ற பகுதியில் 1996-01 காலத்தில் கொடூரமாகக் கொலைசெய்து கொள்ளையடிக்கும் கும்பல் இயங்கிவந்தது. அந்தக் கும்பல் இயங்கியதையும் அவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஸ்ரீநிவாஸ் ராஜு இயக்கிய ‘தண்டுபால்யா’.

கன்னட சினிமாவில் அதுவரை கதாநாயகர்களுடன் டூயட் பாடிக்கொண்டு நிலவுடனும் ரோஜாப்பூவுடனும் ஒப்பிடப்பட்டுக்கொண்டிருந்த பூஜா காந்தி இந்தப் படத்தில் கொள்ளைக் கும்பலின் முதன்மை உறுப்பினராக நடித்தார். துளிக்கூட மேக் அப் இல்லாமல் கதாபாத்திரத்துக்கேற்ற உடை, உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றுடன் அவர் நடித்ததால் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பூஜாவுக்குச் சில விருதுகளையும் பெற்றுத் தந்தது இந்தப் படம், அவரது திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

லூசியா (2013)

கன்னட வெகுஜன சினிமா மீதான வெளி மாநில மக்களின் பார்வையை மாற்றியமைத்த படங்களின் தொடக்கம் என்று ‘லூசியா’ படத்தைத் தாராளமாகக் குறிப்பிடலாம். லண்டன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘லூசியா’ அந்த விழாவில் சிறந்த படத்துக்கான (ரசிகர்கள் தேர்வு) விருதை வென்றது.

உளிதவரு கண்டந்தே (2014)

நடிகராக அறியப்பட்ட ரக்‌ஷித் ஷெட்டி இயக்குநராக அறிமுகமான படம் ‘உளிதவரு கண்டந்தே’. அகிரா குரசோவாவின் ‘ரஷோமான்’, தமிழின் ‘அந்த நாள்’ பாணியிலான திரைக்கதையைக் கொண்ட படம் இது.

ரங்கிதரங்கா (2015)

திகில், மர்மம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான முடிச்சுகள் கொண்ட கதை, ஊகிக்க முடியாத திருப்பங்கள் மிக்க சுவாரசியமான திரைக்கதை; அமெரிக்காவைச் சேர்ந்த லான்ஸ் கப்ளன் - வில்லியம் டேவிட் ஆகியோரின் தேர்ந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களால் ஒரு நிறைவான திரை அனுபவத்தைத் தந்ததற்காக கன்னட சினிமாவில் அண்மைய ஆண்டுகளில் மிகவும் கொண்டாடப்பட்ட படமாக விளங்குகிறது ‘ரங்கிதரங்கா’.

திதி (2016)

எந்தத் தம்பட்டமும் இல்லாமல் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு படைப்பாக ’திதி’ படத்தை எடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் ராம ரெட்டி. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இப்படம் விருதுகளை வென்றது. ’காட்ஃபாதர்’ படங்களின் இயக்குநர் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவும் இந்தப் படத்தை புகழ்ந்து விமர்சனம் எழுதினார். சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற ‘திதி’, கன்னட சினிமாவை உலக அளவில் பெருமையுடன் பார்க்கவைத்த படைப்பு.

கோதி பண்ணா சாதரண மைக்கட்டு(2016)

கன்னடத்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கும் மூத்த நடிகர் அனந்த் நாக் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் இது. ஹேமந்த் ராவ் இயக்கிய இந்தப் படம் தொலைந்துபோன தந்தையைத் தேடும் மகன், அதன் மூலம் தந்தையையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ளும் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது. அனந்த் நாகின் தேர்ந்த நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

ஒண்டு மொட்டேய கதே (2017)

ராஜ் பி. ஷெட்டி என்பவர் இந்தப் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இளம் வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்துவிட்டவரின் பெண் தேடும் படலம்தான் கதை. இந்தக் கருவை வைத்து வயிறு குலுங்கச் சிரிக்கும் நகைச்சுவையுடன் கண்ணில் நீர் அரும்ப வைக்கும் உணர்வுபூர்வமான படமாகவும் இருந்ததால் ரசிகர்கள், விமர்சகர்களின் அமோகமான பாராட்டுகளைப் பெற்றது.

மாறுபட்ட சிந்தனை. சினிமாவைக் கலையாக அணுகும் பார்வை, அதைத் திரையில் கொண்டுவரும் உழைப்பு போன்றவை கைவரப்பெற்ற இளம் படைப்பாளிகளால் கன்னட சினிமா குறித்த மக்களின் பார்வை மாறிவருகிறது. இவர்களின் உழைப்பின் தாக்கம் மற்ற மொழித் திரைப்படங்களிலும் எதிரொலித்தால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x