

“கண்ணதாசன் எழுதிய ஒரு திரைப்பாடலை முணுமுணுத்தால் எம்.எஸ்.வி.யின் இசை நினைவுக்கு வரும். அவர் இசையமைத்த ஒரு பாடலை ஹம் செய்தால் நம்மையறியாமல் கண்ணதாசனின் வரிகள் வந்து மொத்தப் பாடலையும் நினைவூட்டும். இது ஏனென்றால், இசையைப் பாடல் வரிகள் அழுத்தாமல், பாடல் வரிகளை இசை சிதைத்துவிடாமல் இரண்டையும் சம அளவில் கலந்து தந்த பொற்காலம்தான் எம்.எஸ்.வி - கண்ணதாசன் காலகட்டம்” என்று கவிஞர் பூவை செங்குட்டுவன் குறிப்பிடுகிறார்.
கண்ணதாசன் முதல் முதலாகப் பாட்டெழுத ஜூபிடர் பிச்சர்ஸுக்கு வந்த போது அங்கு உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர்தான் சி.ஆர். சுப்பராமன் அமைத்த மெட்டைக் கண்ண தாசனுக்கு ‘தத்தகார’த்தில் பாடிக்காட்டி அவர் பாட்டெழுதத் துணை நின்றவர். அது ஒரு மோதலான சந்திப்பு.
“காரணமில்லாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று பின்னால் கவியரசராக உயர்ந்த கண்ணதாசன் சொன்ன பல்லவியைக் கேட்டு, “அது என்ன களி, கூத்துன்னு... வார்த்தைகளை மாத்துங்க. வேற ஜனரஞ்சகமான வார்த்தைகளைப் போடுங்க” என்று ஏற்க மறுத்தார் விஸ்வநாதன். கண்ணதாசன் உடன்படாததால் இருவருக்கும் இடையில் வாய்ச்சண்டை பெரிதாகிவிட்டது.
கடைசி யில் உடுமலை நாராயண கவி வந்து “காரணமில்லாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே” என்று மாற்றிக் கொடுத்தார். “யோவ்.. களி என்கிற நல்லதமிழ் சொல் இருக்கும்போது ‘சந்தோஷம்’கிற சான்ஸ்கிரிட் வார்த்தைய எதுக்குப் பிடிச்சுகிட்டு தொங்கறீங்க?” என்று வெடித்தார் கண்ணதாசன். “புழக்கத்துல இருக்கிற சொல்லுக்கு மதிப்பு அதிகம்; அதைத் தெரிஞ்சவந்தான் புலவன்” இது எம்.எஸ்.வி. “போய்யா.. எனக்கான நாள் வரும்” என்று எழுந்து போய்விட்டார் கண்ணதாசன்.
சில சந்தர்ப்பங்களில் பாடலாசிரியர் முறுக்கிக் கொண்டால்கூட அவரைச் சமாதானப்படுத்தி வேலை வாங்குவார் எம்.எஸ்.வி. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘பாசவலை’ படம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இலக்கிய நயம் ததும்பும் அருமையான பாடலை எழுதிக்கொடுக்க, அதற்கு அற்புதமாக மெல்லிசை மெட்டில் எம்.எஸ்.வி. இசையமைத்துப் பாடலைப் பதிவும் செய்து டி.ஆர்.சுந்தரத்தை அழைத்து ஒலிக்கவிட்டார்.
பாடலைக் கேட்ட ‘முதலாளி’, “நான் பத்மினி, சாவித்திரியை ஹீரோயினாப் போட்டு இந்தப் படத்தை எடுக்கலே. ராஜாமணி என்கிற புதுமுகத்துக்கு உங்க பாடலால் பெயரும் புகழும் வரணும். வேற பாட்டு கொடுங்க” என்று சீறிவிட்டார் சுந்தரம். இதையறிந்து ‘பட முதலாளியின் ரசனை இவ்வளவு மோசமாக இருக்குதே..
இந்தப் பொழப்பு வேணாம். கிளம்புறேன்” என்று எழுந்து நடையைக் கட்டினார் கல்யாணசுந்தரம். எம்.எஸ்.வி. அவரைப் பாய்ந்துபோய் இழுத்துக்கொண்டுவந்து கம்போஸிங் அறையில் போட்டு அடைத்துவிட்டு, “இங்க வர்ற கவிஞன் அத்தனை பயலுகளும் கோவக்காரனா இருந்தா எப்படியா நான் பாட்டு போடுறது.
பொழப்பு உனக்கு மட்டும்தானா; எனக்கில்லையா.. பாட்டெழுதி பணத் தோட வருவேன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டுத்தானே வந்தே.. அப்புறம் எதுக்குய்யா இந்தக் கோவம்? இந்த காபித் தண்ணியக் குடிய்யா மொதல்ல..” என்று பாசமாகக் கொடுத்து அவரைச் சமாதானப்படுத்திவிட்டார் எம்.எஸ்.வி.
“முதலாளி சொல்றதுலேயும் அர்த்தம் இருக்கு கல்யாணம்.. நீ கொஞ்சம் யோசனை பண்ணினா வேற பல்லவி கிடைக்கும். ரொம்ப லைட்டா “மச்சான் உன்னைப் பாத்து.. மயங்கிப் போனேன் நேத்து”ங்கற மாதிரியா ஏதாவது ஒண்ணு எழுதிக் கொடு” என்று எம்.எஸ்.வி. டம்மி வார்த்தைகளைப் போட… குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் பின்னாளில் பாட்டுக்கோட்டையாக மாறிய பட்டுக்கோட்டையார்.
“சரி. நீ சொன்னியே அதையே பல்லவியா வச்சிக்கோ” என்று இறங்கி வந்த கல்யாண சுந்தரம் ‘மனசு வெச்சா இன்பம் வரும் பழைய நடைய மாத்து’ என்று பல்லவியைச் சற்று நீட்டி மீதிப் பாடலை எழுதிக் கொடுத்தார். கதைப்படி ஹீரோயினிடம் ஒரு நாய் இருப்பதால் நடுநடுவே “லொள்” “லொள்” என்கிற வார்த்தைகளையும் சேர்த்து இசை பாடலை இசையமைத்துவிட, அந்தப் பாடல் தெறி ஹிட். ‘லொள் லொள்’ ராஜாமணி என்கிற பெயரையும் அந்த நடிகைக்குப் பெற்றுக்கொடுத்தது.
அதேபோல் பாடலாசிரியருக்குத் தகுந்த மதிப்புக் கொடுத்து நடத்துவதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரேதான். அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- பி.ஜி.எஸ்.மணியன்; pgs.melody@gmail.com