

பாடல் பதிவின்போது 14 டேக்குகள் எடுத்துக்கொண்டது அந்தப் பாடல். குரலுக்காக அல்ல. வாத்தியங்களின் ஒருங் கிணைப்புக்காக. பின்மதியத்தில் தொடங்கிய பாடல் பதிவு நள்ளிரவில் முடிந்தது. யாரையும் அதிகம் வாய்விட்டுப் பாராட்டாத இளையராஜா, கார் வரை வந்து அந்தப் பாடலை நன்றாகப் பாடியதாகச் சொல்கிறார். அந்தப் பாடல் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம்’. பாடியவர் உமா ரமணன்.
நவம்பர் 26, 1952இல் மத்தியப் பிரதேசத்தில் பிறந்த உமா வெங்கட்ராமன் தந்தையின் பணி மாற்றம் காரணமாக மதுரைக்குக் குடும்பத்துடன் குடிபெயர, அங்கே சங்கீதம் கற்கிறார். பின்னர் சென்னை வந்தடைகிறார். இளவயதில் தந்தை இறந்ததால், குடும்பத்துக்கு விருப்பமில்லை என்கிறபோதிலும் வருவாய்க்காக மெல்லிசைக் கச்சேரிகளில் பாட வேண்டிய சூழல்.
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஏவி ரமணனின் ‘மியூசியானோ’ குழுவில் சேர்ந்து நான்கு வருடங்கள் மேடைகளில் பாடுகிறார். முதலில் தோழமையும் பின்னர் காதலுமாக மாறி ஏவி ரமணனைக் கரம் பற்றி உமா வெங்கட்ராமன், உமா ரமணன் ஆகிறார்.
இந்தி மற்றும் தமிழில் கணவ ருடன் திரைப்பாடல்கள் பாடி அறிமுக மானாலும் 1980இல் வெளிவந்த ‘மூடுபனி’யில் ஒரு நிமிடத் தாலாட்டு பாடலாக இடம்பெற்ற ‘ஆசை ராஜா’ முதல் அடையாளம் தருகிறது. இரண்டாவதாக அதே ஆண்டில் வெளிவந்த ‘நிழல்கள்’ வணிகரீதியாகத் தோல்வியடைந்த போதிலும், தீபன் சக்ரவர்த்தியுடன் இணைந்து பாடிய ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் திரையிசையுலகில் இவருக்கு உண்மையாகவே தாழ் திறந்து விட்டது மட்டுமல்ல; வெளிச்ச மும் தந்தது. அதன் பின்னர் சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், டி.ராஜேந்தர் எனப் பல இசையமைப் பாளர்களின் இசையில் பாடல்கள் பாடி நிதானமான ஒரு பாதையில் திரையிசைப் பயணம் தொடர்கிறது.
முகத்தில் அதிகம் உணர்ச்சிகள் காட்டாமல், பாவங்கள் காட்டாமல் இளையராஜாவைப் போலவே வெறு மனே வாயசைத்து ஆனால் முழு ஜீவனுடன் பாடுவது உமா ரமணனின் தனித்த பாடும் முறை. 1980களில் மிக மெதுவாகவே தொடங்கி 1995இல் ‘பாட்டுப் பாடவா’ திரைப்படம் வரை தொடர்ந்து ஒலித்தது ஜீவனை உருக்கி வார்த்த இவரின் குரல்.
காலம், ரசனை மாற்றத்தின் தொடக்கமாகப் புத்தாயிரம் பிறந்தது. 2000க்குப் பிறகு சில பாடல்கள் பாடினாலும் 2005இல் மணி ஷர்மாவின் இசையில் ஒரு பாடல் வெளியாகிறது. திருப்பாச்சியில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் தான்’ என்கிற பாடல்தான் அது. மூன்று தசாப்தங்களாகப் பாடும் பெரும் பின்னணி இருக்கிறது.
ஆனால், மற்ற சமகாலப் பாடகர்களைப் போல இவர் இன்னும் பெரிய அளவில் பேசப்படாததும் பாடல்கள் கிடைக்கப் பெறாததும் ஒரு குறையே. இந்திய ஆட்சியில் மக்கள் பணி செய்தவர் இவரது அப்பா. கணவரும் மகனும் இசை யமைப்பாளர்கள். குடும்பமே ஓர் இசைக்குழுவாக இருக்கையில், அமைதியான ஓர் ஒடையைப்போல மேடைக் கச்சேரிகளில் தன் குரலெனும் கோடைத் தென்றலைத் தவழவிட்டதில் நிறைவு கண்டார். குறைவான பாடல்களே என்றாலும் ஜென்ஸியைப் போலவே இவருக் கும் பிரத்யேக ரசிகர்கள் இன்றும் உண்டு.
பட்டியலாக இல்லாமல் புத்தாயிரத் தலைமுறைக்கு இவரை அறிமுகப் படுத்த இந்த 10 திரைப் பாடல்களைக் குறிப்பிடலாம். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ (நிழல்கள்), ‘ஆனந்த ராகம்’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘ஓ உன்னாலே நான்’ (என்னருகே நீயிருந்தால்), ‘பூபாளம் இசைக்கும்’ (தூறல் நின்னு போச்சு), ‘வெள்ளி நிலவே’ (நந்தவனத் தேரு), ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ (மகாநதி), ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ (நண்டு), ‘நீ பாதி நான் பாதி’ (கேளடி கண்மணி), ‘கண்ணும் கண்ணும் தான்’ (திருப்பாச்சி), ‘ஆகாய வெண் ணிலாவே’ (அரங்கேற்ற வேளை).
‘ஜான் விக்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், "காரணமென்றோ மோனையென்றோ நிஜ வாழ்வில் எதுவுமில்லை". இன்னும் அதிகம் கவனம் பெற்றிருக்க வேண்டிய எல்லாத் தகுதிகளும் இருந்தும் அந்த உயரத்தை அடையாமல் செய்வது வாழ்வின் எதிர்பாராமைகளில் ஒன்று.
தன்னை முன்னிறுத்தாமல் காலத்தின் கைகளில் வாழ்வை ஒப்படைத்து அதன் போக்கில் வாழ்ந்து முடித்த உன்னதமான கலைஞர்களில் பிரத்யேகக் குரல் வளம் கொண்ட உமா ரமணனும் ஒருவர். காலத்தை உறைய வைக்கும் இரவு நேரப் பண்பலை வானொலி மட்டும் இன்னமும் இவரது பாடல் களைக் காற்றில் பரப்பி, அர்த்தமற்ற வாழ்வை உன்னதமாக்குகிறது. காற்று வீசும் வரை உமா ரமணனின் குரலும் நம்மைத் தாலாட்டும்.
- tottokv@gmail.com