

கவித்துவமான அழகியல் சினிமாவுக்குப் பெயர் போனது ஈரானிய சினிமா. அப்பாஸ் கியாரோஸ்தமியின் காலமே அதன் செறிவான ஊற்று. அதன் கவித்துவ அழகியலுக்கு இணையான கட்டமைப்பை 1990களில் ஆசியத் திரையில் தனது நிலப் பண்பிற்குரிய பாங் குடன் கையாளத் தொடங்கியது பூட்டானிய சினிமா என்பது பலரும் அறியாதது.
பூட்டான் பௌத்த மதத்தைத் தழுவிய நாடு. பசுமையும் அமைதியும் செழித் திருப்பது. 1999-இல் பௌத்த துறவியான கியன்ட்சே நோர்பு இயக்கிய ‘கோப்பை’ (The Cup) படமே யதார்த்த வார்ப்பாலும் கவித்துவஅழகியலாலும் உலகப் பார்வை யாளர்களுக்கு பூட்டானிய சினி மாவை அறிமுகம் செய்துவைத்தது.
‘கோப்பை’ ஏற்படுத்திய கவன ஈர்ப்பை மீண்டும் அளித்திருக்கும் படம் ‘துறவியும் துப்பாக்கியும்’ (The Monk and the Gun). 2006ஆம் வருடம். உலகம் முழுக்க தேர்தலின் வழியேயான ஜனநாயகக் குடியரசுகள் உருவாகிய பின்னரும், பூட்டான் மன்னராட்சியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழல்.
ஜனநாயகப்படுத்துதல் மற்றும் நவீனமயமாதல் என்பதன் அடிப்படை யில், பூட்டானிலும் குடியரசை உரு வாக்கவென மன்னர் ஒரு போலி யான முன்னோட்டத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டார். மக்கள் அனைவரும் வாக்கு செலுத்தக் கற்றுக் கொள்ளவும் ஜனநாயகத் தேவை யைப் புரிந்துகொள்ளவுமான ஒரு முன்னெடுப்பு.
துறவிக்குத் தேவைப்படும் துப்பாக்கி: உரா என்கிற வனப்புமிக்க கிராமத்திலிருக்கும் புத்தத் துறவி இந்தச் செய்தியை அறிகிறார். தனது சீடனான தஷியிடம், “காரியங்களைச் சரிப்படுத்தத் தனக்கு இரண்டு துப்பாக்கிகள் வேண்டும்’ என்று கேட்கிறார். தஷியோ அதுவரை துப்பாக்கியைப் பார்த்ததில்லை. விசாரிக்க, பக்கத்துக் கிராமத்தி லுள்ள பெஞ்சார் என்பவரிடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து அவரது இருப்பிடம் நோக்கிச் செல்கிறான்.
இணைக்கதையாக, ஆயுத வியாபாரியான ரோன் அமெரிக்காவிலிருந்து பூட்டானுக்கு வருகிறான். அவனோடு இணைந்து கொள்ளும் பெஞ்சி எனும் உள்ளூர் இளைஞன், ரோனை பெஞ்சாரிடம் அழைத்துப்போகிறான். மற்றோர் இணைக்கதையாக, தேர்தல் நடத்தும் பெண் அதிகாரி சோமாவின் கிராம வருகையும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும்.
நடக்கப்போகும் தேர்தல் குறித்து ஒரு கிழவரிடம் வினவுகிறாள் சோமா. அவர், ‘தேர்தலினால் என்ன பயன்? நாட்டில் மன்னர் இருக்கும்போது அதற்கென்ன தேவை?’ என்கிறார். மற்றொரு முதியவர், ‘இந்தத் தேர்தல் நடைமுறை இந்தியாவில் இருக்கிறது.
அங்குள்ள அரசியல் வாதிகள் ஒருவரை இன்னொருவர் அடித்துக்கொள்வது போலவும் நாற்காலிகளை வீசிக்கொள்வது போலவும் இங்கும் நடக்கவேண்டுமா என்ன?’ என்று எள்ளலாகக் கூறுகிறார். நல்ல மன்னரின் கீழமைந்த ஆட்சியில் அமைதியுடன் திகழும் தமது வாழ்க்கையின் போக்கை ஜனநாயகம் என்கிற பெயரில் நடத்தப்படும் தேர்தல் சீர்குலைத்துவிடும் என்பதுவே அவரது பகடியிலிருக்கும் உள்மறை.
மக்கள்தொகையும் துப்பாக்கிகளும்: முதியவர் பெஞ்சாரை பெஞ்சியும் ரோனும் சந்திக்கிறார்கள். அவர் தன்னிடமுள்ள ஒரு பழைய துப்பாக்கி யைத் தருகிறார். அது, ‘அமெரிக்க சிவில் போரில் பங்கு பெற்ற அரிய துப்பாக்கி’ என ரோன் வியந்து 75,000 டாலர்களை விலையாகத் தருவதாகக் கூறுகிறான். “அந்தத் தொகை மிகவும் அதிகம்” என்று மறுக்கிறார் பெஞ்சார்.
அதைப் புரிந்துகொள்ள முடியாமல், “85,000 டாலர்கள் தருகிறேன்” எனச் சொல்ல, பெஞ்சி, “நாம் முன்பு கூறிய தொகையே அதிகம் என்று அவர் எண்ணுகிறார்” என்று விளக்குகிறான். ரோன், பெஞ்சோரை நம்பவியலாமல் பார்க்கிறான். பேராசையை முதலீடாக வைத்துச் சூதாட்டம் நடத்தும் குற்றவுணர்வற்ற சமகாலச் சமூகத்தில் வாழும் அவனுக்கு அவரது கள்ளங் கபடமற்ற குணம் நம்பவியலாததாகத் தோன்றுவதில் வியப்பில்லைதான்.
கைமாறும் துப்பாக்கி: மறுநாள் பணத்தைத் தந்துவிட்டு துப்பாக்கியைப் பெற்றுக்கொள்வ தாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அவர்கள் அகல, தஷி அவரைச் சந்திக்க வருகிறான். விவரத்தைக் கூற அவனது கைக்குத் துப்பாக்கி மாறுகிறது.
பெஞ்சியும் ரோனும் தஷியைப் பின் தொடர்ந்து வந்து துப்பாக்கியைக் கோரும் காட்சியில் “பழைய துப்பாக்கிக்குப் பதில் 10 புதிய துப்பாக்கிகளும் பணமும் தருகிறேன்” என்று ரோன் பேரம் பேச, தஷி தனது குரு கேட்டிருந்த, ‘2 துப்பாக்கிகள் மட்டும் போதும்’ என்கிறான்.
தஷியைச் சமரசப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் பெஞ்சி, “அவர்களது நாட்டில் மக்கள்தொகையை விடத் துப்பாக்கி களின் எண்ணிக்கையே அதிகம்” என்று பெருமையாகச் சொல்கிறான். அமெரிக்காவின் ஆயுத அரசியல் மீதான பகடியாடலாக இந்தக் காட்சி பரிணமிக்கிறது.
புதைக்கப்படும் ஆயுதங்கள்: முழுநிலவு நாள். மதச்சடங்கு நடைபெறுகிறது. துறவியின் முன்னே துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சியில்தான் துறவி துப்பாக்கி கேட்ட காரணம் நமக்குப் புரிய வருகிறது. ‘புதிய வழிபாட்டுத் தலம் (Stupa) கட்டுவதற்குத் தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் துப்பாக்கியைப் பலியாக இட்டால் நாட்டில் அமைதி நிலவும்’ என்று கிராமத்தாரிடம் கூறுகிறார்.
குழிக்குள் ‘பலியாகிறது’ அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்குபெற்ற துப்பாக்கி. பேரம் படியும் என்றெண்ணி துப்பாக்கிகளோடு அங்கு வந்திருக்கும் ரோனும் பெஞ்சியும் அதைப் பார்த்து அதிர்ந்துவிடுகிறார்கள்.
அவர்களைச் சந்தேகிக்கும் காவல்துறை அதிகாரி யின் கைது நடவடிக்கைக்குப் பயந்து, புதிய வழிபாட்டுத் தலத்தில் பலியிடுவதற்காகத் தாமும் இரண்டு துப்பாக்கிகளுடன் வந்திருப்பதாகக் கூறி தப்பிக்கப் பார்க்கிறான் பெஞ்சி.
அந்தத் துப்பாக்கிகளை வாங்கும் தஷி, “கடல் கடந்து நமது கோயில் கட்டுமானத்திற்குப் பலியிடவென துப்பாக்கிகளோடு ரோன் வந்திருக் கிறார். அவருக்கு நமது நன்றியை உரித்தாக்குவோம். உங்கள் கைகளா லேயே இவற்றை அஸ்திவாரக் குழிக் குள் போடுங்கள்” என்று உணர்ச்சி மேலிடத் துப்பாக்கிகளை ரோனிடம் தருகிறான்.
வேறுவழியின்றி ரோன் எறிய, தொடர்ந்து அதிகாரியும் தனது கைத்துப்பாக்கியை எறிகிறார். குழிக்குள் கற்களோடு கத்திகளும் விழுகின்றன. சக உயிரைத் தாக்கும் எந்த ஆயுதமும் பூமியில் இருக்கக் கூடாது, அவை புதைகுழிக்குள் போகட்டும். அதன் மேல் புத்தரின் ஞானம் எழுந்து உலகெங்கும் அமைதி நிலவட்டும் என்பது இக்காட்சியின் மனிதம் நிறைந்த செய்தி.
நவீன மயமாதல் என்பது ஆயுத மாக்கலையும் அழித்தொழிப்பையும் கலாச்சார சீரழிவையும் பண்பாட்டுத் தகர்ப்பையும் கொண்டு வருவதெனில் அது இந்த உலகுக்கு அவசியமற்ற ஒன்று. கள்ளங்கபடமற்ற குணமும் சமத்துவமும் நிகழுவதாயின், புதியன கழிதலும் பழையன புகுதலும்கூட வளர்ச்சிக்கான படிநிலைதான் எனப் படம் காலத்தின் பின் நகர்ந்து ஒரு மேன்மைப் பாதையை அடையாளங்காட்டுகிறது. அந்த நிலைப்பாடு சரியானதுதான், மனிதனை மனிதன் கல்லெறிந்து கொலைசெய்த காலத்திற்கு முன்னதாக நாம் திரும்பிச் செல்வதே, மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் அணுகுண்டுகளை வீசக் காத்திருக்கும் இந்தப் பூவுலகிற்கு இனி நல்லது.
- viswamithran@gmail.com