

‘நம்மைக் கடந்து செல்கிற ஒவ்வொரு நிமிடமும் மீண்டும் கிடைக்கப் பெறாதவை; வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கணத்தில் நிலைத்திருங்கள்’ என்கிறது ‘இச்சி - கோ இச்சி-ய’ (Ichi-go ichi-e) என்கிற புகழ்பெற்ற ஜப்பானியப் பழமொழி.
இலக்குகளைக் கொண்ட மனித மனங்களுக்கு இக்கணத்தில் நிலைத் திருப்பது சவாலானது. ஆனால், அச் சவாலே சிலரது வாழ்வில் இயல்பானால் வாழும் நாள்கள் அர்த்தமாகிவிடும் அல்லவா? இதைத் திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்குமோ, அந்த அனுபவத்தை முழுமையாக அளித்திருக்கிறது இயக்குநர் விம் விண்டர்ஸின் ‘பெர்ஃபெக்ட் டேஸ்’ (perfect days) திரைப்படம்.
ஹிராயாமா, படத்தின் மையக் கதாபாத்திரம். ஜப்பானின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு புத்த துறவியைப் போல் வாழ்ந்து வருகிறார். டோக்கியோவில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்கிறார். தான் செய்யும் வேலையில் கூடுதல் பற்றுள்ள ஹிராயாமா கழிப்பறையில் சிறு கறையைப் பார்த்துவிட்டால் கூட பூதக் கண்ணாடியைக் கொண்டு சுத்தம் செய்துவிடுவார்.
ஒவ்வொரு வேலையையும் ரசித்துச் செய்யும் நபராக நம் முன் ஓடிக்கொண்டிருக்கிறார். சக மனிதர்களிடம் உரையாடாத ஹிராயாமாவுக்கு மரமும் இசையும் புத்தகமும் கேமராவுமே நண்பர்கள். சாலையோர மரத்தின் அடியில் முளைத்திருக்கும் சிறு செடியை, பத்திரமாகப் பிடுங்கி வீட்டில் சிறு குவளையில் வளர்க்கும் காட்சி முதல், பூங்காவில் அமர்ந்து மரங்களை ரசிக்கும் காட்சிவரை ஹிராயாமாவின் அன்றாடம், படம் முழுவதும் கவிதையாக நிறைந்திருக்கிறது.
தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய சகோதரி மகள் நோகாவுடன் ஹிராயாமா நடத் தும் உரையாடல் வாழ்வின் ரகசியம் பற்றியது. படத்தில் வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு வசனத்தை நிறைத்திருக்கிறார் இயக்குநர்.
2023 கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதையும் சிறந்த நடிகருக்கான விருதையும் ‘பர்ஃபெக்ட் டேஸ்’ பெற்றிருக்கிறது.
ஹிராயாமா கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் கோஜி யாகுஷோ. இப்படத்தில் கோஜியின் உடல்மொழியும் பாவனைகளும் வாழ்வை நிதானமாக வாழும்போது கைகூடுபவை. அவற்றை மிக நேர்த்தி யாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹிராயாமா ஏன் வசதிமிக்க குடும்பத்தை விடுத்து தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இரவுகளில் அவரது கனவுகளில் வட்டமிடும் காட்சிக்குப் பின்னால் இருக்கும் கதை என்னவாக இருக்கும் என எதையும் இயக்குநர் விவரிக்காமலிருந்தது இப்படத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்ந்திருக்கிறது.
பெரும் மனச்சுமையில் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தெரபியாகவோ, வாழ்க்கைக்கான புதிய கண்ணோட்டத்தைத் தேடுபவர் களுக்குத் தத்துவமாகவோ இப்படம் இருக்கக்கூடும். மழை நின்ற பிறகு வீசும் காற்றுக்குக் கூடுதல் இதமிருக்கும். ‘பெர்ஃபெக்ட் டேஸ்’ திரைப்படத்துக்கு இது பொருந்தும்.
- indumathy.g@hindutamil.co.in