நம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு: சனல்குமார் சசிதரன் நேர்காணல்

நம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு: சனல்குமார் சசிதரன் நேர்காணல்
Updated on
2 min read

னல்குமார் சசிதரன், ‘ஒழிவுதிவசத்தே களி’ மலையாள சினிமாவின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர். ரோட்டர்டாம் உள்ளிட்ட பல சர்வதேச விழாக்களில் விருதுபெற்ற அவரது மூன்றாவது படமான ‘செக்ஸி துர்கா’ இந்தியத் திரைப்படவிழாவில் புறக்கணிக்கப்பட்டது. கேரள திரைப்பட விழாவிலிருந்து அதுவே வெளியேறியது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ‘எஸ் துர்கா’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதை ஒட்டி அதன் இயக்குநர் சனல் குமார் சசிதரனுடன் நிகழ்த்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது.

‘ஒழிவுதிவசத்தே களி’ சினிமாவில் திடமான கதை இருந்தது. திரைக்கதை இல்லை. ஆனால் ‘எஸ் துர்கா’வில் இரண்டுமே இல்லை. அப்படியானால் இதன் கருப்பொருள் எப்படித் தோன்றியது?

‘எஸ் துர்கா’ படத்தில் எப்படி துர்க்கையையும் துர்காவையும் சேர்த்து வைத்திருப்பதுபோல, புனைவையும் ஆவணத்தையும் சேர்த்துவைத்திருக்கிறேன். இதில் புனைவுக் காட்சி ஒருவிதமாகவும் ஆவணக் காட்சி வேறுவிதமாகவும் இருக்கும். இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்தால் கிடைக்கும் சுவாரசியத்தையும் முரண்பாட்டையும் முக்கியமாக எடுத்துக்கொண்டேன். பெண்களைத் தெய்வமாக வழிபடும் சமூகம்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் செய்கிறது என்பதையும் படத்துக்கான கருப்பொருளாகக் கொண்டேன்.

டெல்லியில் நிர்பயா, கேரளத்தில் ஜிஷா ஆகியோருக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள்தாம் இதற்குப் பின்னாலுள்ள காரணமா?

அவை எல்லாம் மனத்தில் இருந்தன. பெண்ணை ஒரு போதைப் பொருளாக மட்டும் காணும் ஆண் பார்வை சமூகத்தில் உண்டு. இந்தப் பார்வை ஒரு குற்றவாளிக்கு மட்டும், ஒருதரப்பு ஆண்களுக்கு மட்டுமானது அல்ல. பொதுவாக எல்லா ஆண்களுக்கும் இந்த எண்ணம் சகஜமானது. ஒரு ஆண், பெண்ணைப் பார்க்கும் முதல் பார்வையில் காமம் உண்டு. அதற்குப் பிறகுதான் அவரது மனநிலை, அறிவு எல்லாம் செயல்படும்.

வட இந்தியாவில்தானே துர்க்கை வழிபாடு பிரபலம். சர்ச்சைக்காக இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்களா?

கேரளத்தில் துர்க்கை வழிபாடு வித்தியாசமானது. தமிழ்நாட்டிலுள்ள முத்தாரம்மன் வழிபாடுதான் கேரளத்தில் சில பகுதிகளில் பிரபலமானது. அப்படியான ஒரு வழிபாடுதான் படத்தில் வருகிறது.

கேரளத்தில் நடக்கும் கதையில் முதன்மைக் கதாபாத்திரமாக ஒரு வட இந்தியப் பெண்ணைத் தேர்ந்தெடுத்ததன் அவசியம் என்ன?

மனிதர்கள் உடல் ரீதியில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நாம் ஒரே மாதிரிக் காண்பதில்லை. ஒருவர் பேசுகிற மொழியைக் கொண்டு, அணிந்திருக்கும் ஆடையைக் கொண்டு பிரித்து விநோதமாகப் பார்க்கிறோம் தமிழ் பேசும் ஒருவரைத் ‘தமிழர்’ என்று ஒரு மலையாளி காண்பதுபோல். இந்த விநோதம், அந்நியத்தன்மை எல்லாம் தேவையானதாக இருந்தன. துர்கா ஒரு வட இந்தியப் பெண்ணாக இருப்பதால் அவளுக்கு ஓர் அவநம்பிக்கையும் பதற்றமும் கூடுதலாக இருக்கின்றன. அதைப் பார்வையாளர்களால் எளிதில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

த்ரில்லர் படங்கள், பக்திப் படங்களில் நீங்கள் சொல்வதுபோன்ற விநோதங்கள் நிறைந்திருக்கும். அந்த மாதிரியான விநோதத்தை, சுவாரசியத்தை நீங்கள் பயன்படுத்திக்கொண்டீர்களா?

கதாபாத்திரங்களின் பின்னணியைச் சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் இப்படியான விநோதத்தை உருவாக்குவதற்காக அல்ல. அப்படியான ஒரு உத்தியைக் கையாளவும் எனக்கு விருப்பமில்லை. ஒரு அடிப்படையில்லாமல் கதை தொடங்காது. உதாரணமாக கதாபாத்திரங்கள் யார், யார்? எதற்காக அங்கு போனார்கள்? இவர்கள் ஏன் ஓடிப் போகிறார்கள்? போன்ற விவரிப்புகள் வேண்டும். ஆனால், கதை வேண்டாம் எனத் தீர்மானித்துவிட்டேன். அதனால் அந்த விவரிப்புகள் தேவையில்லாமல் போனது. ஆனால் ஒரு சம்பவத்தை சினிமா அனுபவமாக மாற்ற நினைத்தேன்.

இந்தப் படத்துக்கு வசனமும் எழுதவில்லை. நடிகர்கள் வசனங்களைக் கொண்டுதான் உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அப்படியிருக்கும்போது நடிகர்களைக் கையாள்வது சிரமமாக இருந்ததா?

வசனம் எழுதிக்கொடுக்கும்போதுதான் நடிகர்களுக்குச் சிரமம். வசனத்தை மனப்பாடம் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வசனத்தைச் சொல்ல வேண்டும். வசனம் இல்லாமல் சம்பவத்தை மட்டும் சொன்னால், அதற்குத் தகுந்த வசனங்களை நடிகர்களே அவர்களது மொழியில், உடலசைவில் உருவாக்கிக்கொள்ள முடியும். உண்மையைச் சொன்னால் வசனமில்லாமல் நடிக்கும்போது நடிகர்கள் இயல்பாகச் செயல்பட முடியும்.

06CHRCJ_SANAL_KUMARrightகதை வாசிப்பதுபோன்ற அனுபவத்தை இந்தப் படத்தின் கேமராக் கோணங்கள் தந்தன. உதாரணமாகச் சாலையில் துர்காவும் கபீரும் நடக்கையில் கேமராக் கோணம் சாலையின் பக்கவாட்டில் இருக்கிறது. இது திட்டமிடப்பட்டதா?

திட்டமிட்டதுதான். ஏனெனில் இது துர்காவின், கபீரின் கதை மட்டுமல்ல. ஒவ்வொரு பார்வையாளரின் கதை. அதற்காகத்தான் அப்படியான கேமராக் கோணங்களைத் தேர்வுசெய்தோம். இந்தப் படத்தைப் பார்த்த பெண்கள் பலர் தங்களைத் துர்காவாகத்தான் உணர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

போலீஸ்காரர்கள், கலாச்சார போலீஸ் என மொத்த அமைப்பையும் ஒரே படத்தில் விமர்சிப்பது சுமையாகத் தோன்றவில்லையா?

அரசாங்கம் செயல்படும் அமைப்பு என்ற ஒன்று அல்லாது இங்கு பல அமைப்புகள் இருக்கின்றன. இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் சாலையில் ஆணுடன் நடந்தால் கலாச்சாரக் காவலர்கள் கேள்வி கேட்பார்கள் என்பது ஒரு வகையான அமைப்பு. பிறகு இன்னொரு அமைப்பு உண்டு. உதவிசெய்கிறேன் எனத் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைவது. ஒரு பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது நமது கோழைத்தன அமைப்பின் வெளிப்பாடு. இது எல்லாம்தான் சமூகத்துக்குள் இருக்கிறது. துர்காவும் அதற்குள்தான் இருக்கிறாள்.

இந்தப் படம் ஒரு தொடர்கதையாக நீண்டுபோகிறது. இந்த இடத்தில் நிறுத்திக்கொள்ளலாம் என்பதை எங்கு முடிசெய்தீர்கள், சூட்டிங் ஸ்பாட்டிலா, எடிட்டிங் மேஜையிலா?

சினிமாவை அதன் போக்கில் விட்டுவிட்டுப் படமாக்குவது என் வழக்கம். அதற்குச் சிறிய வழியைக் காண்பிப்பேன். அவ்வளவுதான். தொடக்கத்தில் இந்தப் படத்தில் பயங்கரமான வன்முறைச் சம்பவங்களைக் காட்சிப்படுத்தும் திட்டம் இருந்தது. பிறகு இதற்குள் வன்முறையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தோன்றியது. உரையாடல்களில் இருக்கும் சீண்டல்களே போதுமானவை என முடிவானது. அப்படித்தான் ஒரு கட்டத்தில் இந்தக் காட்சியுடன் படத்தை முடித்துவிடலாம் என நினைத்தேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in