

கலை சினிமா என்பது வாழ்வின் துயரப்பாடுகளை மட்டுமே பேசுகிறது என எண்ணிய காலம் ஒன்று நிலவியது. நாடக வயப்பட்ட புராணப் படங்களையும் சமூகப் படங்களையும் பார்த்துக்கொண்டி ருந்தவர்களுக்கு, தம்மைச் சுற்றி நிகழும் வாழ்வை அச்சுப் பிசகாமல் திரையில் பிரதிபலிக்கும் ‘அதி யதார்த்த சினிமா’ (Neo Realism) சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்வலையை உருவாக்கியதால் உதித்த எண்ணம் அது.
ஏனெனில், உண்மையான வாழ் வென்பது யாரோ தன் விருப்பத்துக்கு எழுதிய புனைவுக் கதையல்ல. தவிர்க்க வியலாத துயரங்கள் கலந்த ஒரு சுடும் யதார்த்தம். அதை சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ (Song of the Road) கலாபூர்வ அணுகலோடு திரையில் கொணர்ந்தது. அப்படத்தின் யதார்த்தச் சித்தரிப்பு எவ்வளவு நெருக்கமாகப் பார்வையாளரது வாழ்வைத் தொட்டு நிற்கிறது என்கிற வியப்பைப் புறந்தள்ளி, ‘சத்யஜித் ராய் இந்தியாவின் வறுமையை மேலைநாடுகளுக்கு விற்கிறார்’ என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள் சில விமர்சகர்கள்.
அந்தக் காலத்தில் வெளிவந்த வெகு ஜனப் படங்கள் வறுமை வாழ்வு குறித்துப் பேசவே இல்லையா? கதையம்சம் சார்ந்த தேவையின் அடிப்படையில் பேசியவைதான். ஆனால் ஆடலோடும் பாடலோடும் காதலோடும் பேசின. எனவே பொழுதுபோக்கு என்னும் களிப்புணர்வை பகிர்ந்த அப்படங்கள் அத்தகைய குற்றச் சாட்டிற்கு ஆட்படவில்லை. வாழ்வை உச்சபட்ச இயல்புத் தன்மையோடு அணுகிய காரணத்தால் சத்யஜித் ராயும் அவரைப் போன்றவர்களும் குறிவைத்து விமர்சிக்கப்பட்டார்கள். உண்மையில், இந்தியக் கலை சினிமாவின் பேரியக்கம் வாழ்வின் துயரப்பாடுகளை மட்டுமல்ல, அதன் கொண்டாட்டங்களையும் கவித் துவத்துடன் திரையில் காலம்காலமாகப் பிரதிபலித்து வந்திருக்கிறது. அது வெகுஜனத் திரைப்பட விரும்பிகளது கண்களால் உணரப்படாமல் போனது விநோத நிகழ்வுதான்.
விவாதிக்கப்படாத திரைக்கதை: இலக்கியத்தைப் புனிதமாகக் கருதி அதன் முப்பரிமாண வடிவ மான சினிமாவைத் தீண்டத்தகாத பொருள் போல் எழுத்தாளர்கள் பாவித்த சூழல் நம்மிடையே இருந்தது. சில எழுத்தாளர்களால் கலை சினிமா குறித்த அறிமுகங்கள் மேற்கொள்ளப்பட்டன. திரை ரசனை மேம்பட்டிருந்த நல்ல விமர்சகர்கள் சிற்றிதழ் வட்டத்துக்குள் பின்னப்பட்டிருந்தார்கள். அதியதார்த்த சினிமாவின் தென்னிந்தியச் சந்ததியான அடூர் கோபாலகிருஷ்ணனது படங்களை முன்வைத்து, ‘கலைப்படம் என்பது மெதுவாக நகர்ந்து சலிப்பைத் தரும்படியானது’ என சுஜாதாவால் விமர்சிக்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்தி லிருந்த அதீத சுவாரசியத் தன்மை, அவரது கருத்தை நம்பவும் வைத்தது. அந்தக் கருத்தியல், தமிழ்ச் சூழலின் விமர்சனப் பொதுப் புத்தியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான ‘குணா’ வெளியான காலகட்டத்தில், அந்தப் படத்தை ‘கலைப்படம்’ எனக் கருதி மக்கள் நிராகரித்துவிடுவார்களோ என்று அஞ்சி, படத்தைத் தயாரித்து, நடித்த கமல்ஹாசன், ‘கலை என்பது ஒரு கெட்ட வார்த்தை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லும்படியான அவலநிலையை மேற்படி விமர்சனச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தது.
கலைப்படம் சார்ந்த இத்தகைய குறுகலான பார்வை தமிழில் மெதுவாக ஆக்கிரமித்துக்கொள்ள, அந்தக் கலைப் பரப்பின் வெற்றிடத்தை வெகுமக்கள் சினிமா தனது ஆக்டோபஸ் கைகளால் அணைத்துக்கொண்டது. இவ்வுண்மை இன்றைக்கும் கண்கூடு. வெகுமக்கள் சினிமாவில் நானறிந்தவரை கலைப்பூச்சு செய்பவர்களே நல்ல இயக்குநர்களாக இப்போது பாவிக்கப்படுகிறார்கள். அவர்களது படங்களின் கதையிலும் அதை நெய்துதரும் திரைக்கதையிலும் எத்தனை குளறுபடிகள் இருந்தாலும் அவை விவாதிக்கப்படுவதில்லை.
சிக்கல் யாரிடம்? இயக்குநரைவிடப் படத்தின் குறைபாடுகளைச் சமரசம் செய்து கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் இன்றைய சமூக ஊடக விமர்சகர்கள். பார்வை யாளர்களிடம் மட்டுமல்ல, சினிமா ரசனை என்பது நமது இலக் கியச் சூழலிலும் இன்றுவரை மேம்படவில்லை என்பது நிதர்சன உண்மை. ஏனென்றால், இலக்கி யத்துக்கும் சினிமாவுக்குமான சிந்தனை உத்திக்கும் வடிவ உருவாக் கத்துக்கும் பாரதூரம் அதிகம். இரண்டுமே வெவ்வேறு மைதானங்களிலான ஆட்டக் களங்கள். இலக்கியப் பயிற்சி மட்டுமே சினிமாவையோ அதன்மீதான ரசனை யையோ புரிந்து கொள்ள முழுமையாக உதவுவதில்லை. சினிமாவை அதன் அடியாழத்திலிருந்து உணர அது சார்ந்த பால பாடத்திலிருந்து தொடங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
சமீபத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’படத்தை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இலக்கியமாக அங்கீ கரிக்கப்பட்ட அந்த நாவல், திரை வடிவில் வந்தபோது பெரும்பான்மையான விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டதை நினைவுகூர்கிறேன். ஒரு நாவல் தரும் மனத்தாக்கத்தின் பிரதிபிம்பங்களைச் சற்றும் குலையாமல் திரையில் எதிர் பார்த்தால் இப்படியான ஏமாற்றமே மிஞ்சும். சினிமா என்பது முப்பரிமாண ஊடகம். நாவல் நமக்களித்த கற்பனைத் தோற்றங்களை அழித்து, உண்மையுருவாக வெளிச்சமிட்டுக் காட்டுவது. நாவலில் கதாபாத்திரத்தின் எண்ணங்கள் எழுத்திலேயே கைகூடி விடும். திரை என வரும்போது அதைக் காட்சி வெளிப் பாடாகவே காண்பிக்கமுடியும். வாசகக் கற்பனை யைத் திரையில் அழித்து விடுகிறது சினிமா.
அர்ப்பணிப்புமிக்க வெளிப்பாடு: ‘ஆடுஜீவிதம்’, படத்தின் உண்மைக்கதாபாத்திரங்களான நஜீப் மற்றும் அவரது நண்பர் ஹக்கீம் பொருளியல் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குப் பயணப்பட்டு அனுபவிக்க நேர்ந்த துயரங்களை, அவற்றின் வலி குன்றாமல் திரைப்பரப்பில் பதிந்திருக்கிறது. படத்தைத் தொடர்ந்து காணத் தயக்கமும் அச்சமும் நம்முள் படர் கிறதே, ஏன்? கதையைத் தாண்டி திரை மேற்கொள்ளும் உச்சபட்ச வீச்சு அத்தகையது. இந்தக் கதையில் நடிக்கத் துணிந்து தன்னை வருத்திக் கொண்ட நடிகர் பிரித்விராஜுவுக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருது நிச்சயமாக வழங்கப்படவேண்டும். உடல் இளைத்து தன்னை வருத்திக் கொள்ளும் அர்ப்பணிப்பை இந்திய சினிமாவில் இதற்குமுன் யாரேனும் செய்திருக்கிறார்களா? உலக சினிமாவில் நடந்திருக்கிறது.
ரோமன் பொலான்ஸ்கியின் இயக்கத்தில், இரண்டாம் உலகப் போரினது காலகட்டத்தில் போலந்து இசைக்கலைஞரான விலாடிஸ்லாவ் அனுபவித்த துயரங்களை வலியுணர் வோடு சித்தரித்த ‘பியானோ கலைஞன்’ (The Pianist) படத்தில் தோன்றும் அட்ரியன் பிரோடி ஆரோக்கிய உடல் நிலையிலிருந்து மெலிந்த உடல்நிலைக்கு உண்மையாகவே தளர்ந்துசெல்வார். ‘டல்லஸ் பையர்ஸ் கிளப்’ (Dallas Buyers Club) என்றோர் அமெரிக்கப் படத்தில், ரோன் வுட்ரூப் என்கிற எய்ட்ஸ் நோயாளரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாத்யூ மெக்கொனாகி தனது எடையை வெகுவாகக் குறைத்து எய்ட்ஸ் நோயாளி போலவே உருமாறியிருப்பார். கதாபாத்திரத்தைத் தனது உயிரோடு கலந்துகொள்ளாமல் இத்தகைய நடிப்பின் வேதிவினை நிகழாது.
ஆடுஜீவிதம் நாடும் பார்வையாளர்: ‘ஆடுஜீவிதம்’ படத்தைப் பொறுத்த வரை, இந்திய மைய நீரோட்ட சினிமாவின் தளத்திலேயே அது முற்றுப்பெற்றுவிடுகிறது. வெகுமக்கள் ரசனையிலிருந்து மேம்பட்டு வரும் பார்வையாளரே அதற்கு பிரதானம். ஆகவே, படத்தில் புனையப்படும் பாடல்களும் காதல் காட்சிகளும் கதையோட்டத்தின் தீவிரத்தைப் பட்டை தீட்டவேண்டிய இசை, அரங்கி லிருக்கும் பார்வையாளரைக் கவரும் போராட்டத்திலேயே தன்னை நிறுத்திக்கொள்கிறது. முக்கியமாக, பாலைவனத்தில் நஜீப்பும் ஹக்கீமும் நடக்கும்போது வெளிப்படும் பயண இலக்கை நோக்கிய லயத்திலமைந்த இசைக்கோவை. ஹாலிவுட் சினிமா வில் மேற்கொள்ளப்படும் சாகச இசையின் தாக்கம். பாராட்டவும் இசைக்குக் கூறுகளுண்டு. வழிகாட்டிய படி நடக்கும் ஆப்பிரிக்கர் ஒரு கண்ணாடிக்குப்பியைக் கண்டெடுக் கும்போது, அதைப் புல்லாங்குழல் போன்று ஊதி இசையை எழுப்புவார். அந்தக் கதாபாத்திரத்துக்குள் பதுங்கி யிருக்கும் இசைக்கலைஞனை அந்தக் காட்சி நமக்குச் சுட்டும்.
சென்ற வருடம் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இறுதிச்சுற்றுவரை வந்த படம் ‘நான் படகுத் தலைவன்’ (Me Captain). செனகல் நாட்டைச் சேர்ந்த விடலைச் சிறுவர்களான செய்தூவும் மௌசாவும் மேற்கு ஆப்பிரிக்காவின் வழியாக இத்தாலிக்கு வளமான வாழ்வை எண்ணிப் பயணப்படும் துயர அனுபவங்கள் குறித்தது. சில நிமிடங்களில் நம்மை ஒன்ற வைத்துவிடும் அப்படத்தில் மேற்கொள்ளப்படும் இசையைக் கேட்டுப்பாருங்கள், மூன்றாம் உலக வாழ்வினது கலாச்சார வெளி நமது கண்களுக்குப் பிடிபடும்.