

ஆ
ளை அசத்தும் உயரம், ஆக்ஷன் காட்சிகளில் யாரிடமும் இல்லாத வேகம், நினைப்பதை ஒளித்து வைக்காமல் கொட்டித் தீர்த்துவிடும் தடாலடி குணம் என்று கதாநாயகனாகவும் தொழிற்சங்கவாதியாகவும் துடிப்பு காட்டும் விஷாலை கோலிவுட்டின் நிஜமான சண்டைக்கோழி எனலாம்.
இதுவரை 34 படங்களில் நடித்து முடித்து கைவசம் 3 படங்களை வைத்திருக்கும் விஷால் ‘செல்லமே’ படத்தில் அறிமுகமானாலும் அடுத்த படமான ‘சண்டக்கோழி’யின் மெகா வெற்றி அவரை வசூல் வளையத்துக்குள் கொண்டுவந்தது. ‘ஆக்ரோஷமான, இளமையான, துடிப்பான நம்மவீட்டு பையன்’ என்று அணைத்துக்கொண்டார்கள். இரண்டாவது படமே அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அடுத்தடுத்து அவரது படங்கள் வசூல் மறைவுப் பிரதேசத்தில் சிக்கிக்கொண்டன. தயாரிப்பு, விநியோகம், திரையிடல் மூன்று இடங்களிலும் சிக்கல் இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே தெரிந்துகொண்ட விஷால், ‘சிக்கலைத் தீர்த்துவைக்க வேண்டிய சினிமா சங்கங்கள் சரிவர இயங்காதுதான் காரணம்’ என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
அப்புறமென்ன? நண்பர்கள் கூட்டணி அமைத்து விஷால் முதலில் கைப்பற்றியது நடிகர் சங்கத்தை. அங்கே செய்த அதிரடி மாற்றங்களுக்குப் பலனாகத் தயாரிப்பாளர் சங்கக் கோட்டையும் அவர் வசமானது. இடையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அவரது அதீத தன்னம்பிக்கைக்கு வேட்டு வைத்தாலும் விஷாலின் அடுத்த இலக்கு பிலிம் சேம்பராக இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
சினிமா தொழிற்சங்களில் அடுத்தடுத்து அங்கீகரிக்கப்பட்டிருக்கும் விஷாலுக்கு அவரின் செயல்பாடுகளே அடுத்தடுத்த திருப்புமுனைகளைத் தந்திருக்கின்றன. ஆனால், தானொரு கதாநாயகன் என்பதையே விஷால் மறந்துவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களின் எண்ணத்தை ‘துப்பறிவாளன்’ துடைத்தெறிந்துவிட்டது. ஒரு திரை நாயகனாக விஷால் தனது அடுத்த திருப்புமுனைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ‘இரும்புத் திரை’ வழியே அது கிடைக்கிறதோ இல்லையோ, லிங்குசாமி கைவண்ணத்தில் விஷாலின் அதிரடியில் வரவிருக்கும் ‘சண்டக்கோழி 2’-ல் அது கிடைக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!