

தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மெலட்டூர் கிராமம். பாகவதக் கதையை ‘பாகவத மேளா’ என்கிற பெயரில், இசை, நடன நாடகமாக, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்து இன்றைக்கும் அங்கே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு புகழ் பெற்ற ஊரிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றவர்கள் பலருண்டு. அவர்களில், அடையாளம் என்பதைத் தாண்டி நட்சத்திரமாகப் புகழ் பெற்றவர் குமாரி ருக்மணி.
மெலட்டூர் என்றால் ‘பாகவத மேளா’ என்று குறிப்பிடும் பலரும் ‘மெலட்டூர் பாணி பரத நாட்டியம்’ பற்றிப் பேசுவ தில்லை. அதை உருவாக்கியவர் மாங்குடி துரைராஜன். மெலட்டூர் பாணி பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று, தமிழ் சினிமா பேசத் தொடங்கியிருந்த கால கட்டத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் பெற்றவர், பின்னாளில் ‘நுங்கம்பாக்கம் ஜானகி’ என்று அழைக்கப்பட்ட குமாரி ருக்மணியுடைய தாயார்.
தமிழ், தெலுங்கு நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றிருந்த ஜானகி, 1932இல் ஐந்து வயது மகள், கணவருடன் கல்கத்தாவுக்குச் சென்று தங்கி, ‘சீதா வனவாசம்’ என்கிற தமிழ்ப் பேசும் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
முதல் சிறார் படத்தில்… 3 வருட கல்கத்தா வாசத்தில் ‘லலிதாங்கி’, ‘ஹரிசந்திரா’, ‘மாயா பஜார்’, ’ஜலஜா’, ‘வாலிபர் சங்கம்’, ‘தமிழ்த் தாய்’, ‘பாக்கிய லீலா’, ‘பூலோக ரம்பை’ எனப் பல தமிழ்ப் படங்களில் ஜானகி நடித்தி ருக்கிறார். இவற்றில் ‘ஹரிச்சந்திரா’ (1935) படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவின் பயோனிர் ஸ்டுடியோவில் நடந்தபோது, அப்படத்தில் கதாநாயகியாக, சந்திரமதி வேடத்தில் நடித்தவர் அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரமான டி.பி.ராஜலட்சுமி.
அவர், ஸ்டுடியோவில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ருக்மணியால் ஈர்க்கப்பட்டார். ருக்மணியை லோகிதாஸனாக நடிக்க வைக்கும்படி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.வின்செண்டிடம் பரிந்துரைக்க, 8 வயதில் லோகிதாஸனாக நடித்து சிறார் நடிகராக அறிமுகமானார் ருக்மணி.
‘ஹரிச்சந்திரா’வில் ருக்மணி நடித்தபோது, அப்படத்தின் இயக்குநர் பிரபுல்லா கோஷ், “இவளுக்கு இந்தி டுயூஷன் ஏற்பாடு செய்யுங்கள்; இந்தி சினிமாவில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்றார்.
கல்கத்தாவில் 3 ஆண்டுகள் இந்தி கற்றுக்கொண்டார் சிறுமி ருக்மணி. அதன்பின், கே.சுப்ரமணியம் எழுதி, இயக்கித் தயாரித்த, தமிழின் முதல் சிறார் திரைப்படமான ‘பாலயோகினி’யில், வீட்டு வேலைக்காரர் முனியசாமியின் மகளாக நடித்து, பார்வையாளர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.
படவுலகும் பரதவுலகும்: ‘பாலயோகினி’க்குப் பிறகு ஜானகியின் குடும்பம் பம்பாய்க்குச் சென்று குடி யேறியது. அங்கே ருக்மணி தனது 12 வயது வரை நடித்த தமிழ், இந்திப் படங்களின் எண்ணிக்கை 20. அவற்றில் ‘ஹமாராதேஷ்’, ‘ஸ்வஸ்திகா’, ‘தமிழ்த் தாய்’ ஆகிய படங்களில் பாராட்டுக் கிடைத்து. அம்மா ஜானகியுடன் இணைந்து ‘பாக்யலீலா’ என்கிற இந்திப் படத்திலும் சிறுமி ருக்மணி நடித்தார். ஆனால், நடித்தவரை போது மென்று 3 வருட பம்பாய் வாசத்துக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பி நுங்கம் பாக்கத்தில் குடியேறினார் ஜானகி.
இதற்கிடையில் 1936இல் வெளிவந்த ‘ராஜா தேசிங்கு’ திரைப்படத்தில் ருக்மணி தேவி அருண்டேல் ஆடிய பரத நாட்டியத்தைப் பார்த்து மயங்கினார் குமாரி ருக்மணி. “அம்மா நான் ருக்மணி அருண்டேலைப் போல் பெரிய நடன மணியாக வரவேண்டும்” என்றார் சிறுமி ருக்மணி. உடனே அடையாற்றில் குடியிருந்த ருக்மணி அருண்டேலின் வீட்டுக்கு அழைத்துப்போய் காட்ட, சிறுமி ருக்மணியுடன், பரதப் புரட்சி செய்த ருக்மணி அருண்டேல் ஆடி அவருக்கு ஊக்கமும் தீட்சையும் தந்து அனுப்பினார்.
ருக்மணிக்குச் சிறுவயது முதலே வாய்ப்பாட்டையும் ‘மெலட்டூர் பாணி’ பரதநாட்டியத்தையும் கற்றுக் கொடுத்திருந்தார் ஜானகி. ஆனால், அது போதாது என்று உணர்ந்து, காஞ்சீவரம் எல்லப்ப நட்டுவனாரிடம் பரதம் பயிலச் செய்தார். பால சரஸ்வதிக்கு உலகப் புகழைப் பெற்றுக்கொடுத்த ‘காஞ்சீவரம் பாணி’ பரதநாட்டியத்தை எல்லப்பரிடம் கற்றுக்கொண்டார் ருக்மணி. அம்மாவிடம் கற்ற மெலட்டூர் பாணி - ஆசிரியரிடம் கற்ற காஞ்சீவரம் பாணி ஆகிய இரண்டின் அற்புதக் கலவையைத் தன்னையும் அறியாமல் உருவாக்கியிருந்தார் குமாரி ருக்மணி.
1942இல் தனது 15வது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் குமாரி ருக்மணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதன்பின்னர், தாமொரு சினிமா நட்சத்திரம் என்பதையே மறந்து போனார் குமாரி ருக்மணி. 3 வருட காலம் தென்னிந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான நடன நிகழ்ச்சிகளில் ஆடிப் புகழ்பெற்றார். இலங்கையிலிருந்து அழைப்பு வர, 2 மாத காலம் அங்கேயே தங்கியிருந்து யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு நகரங்களில் ஆடினார்.
தேடிப் பிடித்த ஏவி.எம்: 16 வயது இளம் பெண்ணாக ‘ரிஷ்ய ஸ்ருங்கார்’, ‘பாக்ய லீலா’, ‘பக்த நாரதர்’, ‘பூலோக ரம்பை’ ஆகிய படங்களில் ‘குமாரி’ ருக்மணியைக் கண்டு ரசித்த மக்களின் மனதை நாடிபிடித்து வைத்திருந்தார் ஏவி.மெய்யப்பன். இலங்கையி லிருந்து சென்னைக்குத் திரும்பும்படி செய்தியனுப்பினார். ‘பூலோக ரம்பை’யில் (1940) டி.ஆர்.மகாலிங்கமும் குமாரி ருக்மணியும் (இந்தப் படத்தில்தான் ‘குமாரி ருக்மணி’ என்று முதலில் டைட்டில் கார்டில் போடப்பட்டது) சில காட்சிகளே இணைந்து நடித்திருந்தாலும் அவை மக்களிடம் அமோகக் கைத்தட்டலைப் பெற்றிருந்த காதல் காட்சிகள்.
அந்த ஜோடியை மீண்டும் தனது ‘ஸ்ரீவள்ளி’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். முதல் முழுநீளக் கதாநாயகி வேடம். ‘ஸ்ரீவள்ளி’க்கு மட்டுமல்ல; மேலும் 3 படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துகொண்டார். நடன நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, ‘ஸ்ரீவள்ளி’யில் குட்டி யானையுடன் மிக இணக்கமாக பயமின்றி நடித்து முடித்தார்.
ஆனால், டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் குரலுக்கு நடுவே மெல்லிய குரலாக ஒலித்த குமாரி ருக்மணி பாடிய பாடல்களை நீக்கிவிட்டு, பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து, ருக்மணியின் குரலுக்குப் பதிலாக படத்தில் இடம்பெறச் செய்தார் ஏவி.எம். இதில் மன வருத்தம் அடைந்த ருக்மணி, ஏவி.எம்முடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.
ஆனால், ‘ஸ்ரீவள்ளி’ (1945) படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற குமாரி ருக்மணி முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். அதற்கு முதல் வருடம் வெளியாகிப் புகழ் பெற்றிருந்த எம்.கே.டியின் ‘ஹரிதாஸ்’ படத்துக்கு இணையான புகழைப் பெற்றது ‘ஸ்ரீவள்ளி’. ஏவி.எம்மின் அடுத்த வெற்றியாக வெளிவந்த ‘வாழ்க்கை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தாமே மறுத்துவிட்டதில் வைஜயந்தி மாலா எனும் மற்றொரு நட்சத்திரம் உதயமானார்.
கலையுலகில் காதல்: இந்தச் சமயத்தில், குமாரி ருக்மணியின் அழகையும் திறமையையும் கண்டு, அவரை இந்தித் திரையுலகில் பெரிய நட்சத்திரமாக்கிக் காட்டும் முயற்சியுடன் களமிறங்கினார், ‘சிந்தாமணி’ படத்தை இயக்கி முன்வரிசை இயக்குநராகவும் அழகான நடிகராகவும் விளங்கிய ஒய்.வி.ராவ்.
அவர், இந்தி, தமிழில் நாயகனாக நடித்து, இயக்கி உருவாக்கிய ‘லவங்கி’(1946)யில் ருக்மணிதான் லவங்கி. காதலை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் ஒய்.வி.ராவ் - ருக்மணி இருவரும் காதலில் கலந்து தனது 19வது வயதில் அவரைக் கரம் பற்றினார் ருக்மணி.
மகள் லட்சுமி பிறந்தார். உச்ச நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய ருக்மணியை இல்லற வாழ்க்கை முடக்கியது. கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஜோடி பிரிந்தது. சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பது நட்சத்திரங்களுக்கு அவ்வளவு எளிதல்ல. வாழ்க்கையைப் கற்றுத் தந்திருந்த பாடங்களுக்குப் பின்னர், அவரது சொந்த வாழ்க்கைப் பிரதிபலிக்கும் சாயல் கொண்ட கற்பனைக் கதையான ‘முல்லை வனம்’ படத்தில் ‘ஜெமினி’ ராமின் ஜோடியாகச் சிறப்பான காதல் நடிப்பைக் கொடுத்தார்.
அதுதான் குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசி படம். ஆனால், தோல்வி அடைந்தது. வேண்டாம் சினிமா என விலகியிருந்தவரை ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் நடிகர் திலகத்துக்கு மனைவியாக நடிக்க வைத்தார் பி.ஆர்.பந்துலு. அதன்பிறகு 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நட்சத்திர அம்மாவாகப் பல படங்கள். ருக்மணி பெற முடியாத அங்கீகாரத்தை அவரது மகள் லட்சுமி 1977இல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காகச் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்து ஈடு செய்தார்.
- jesudoss.c@hindutamil.co.in