

ம
ற்றவரைச் சிரிக்க வைப்பதென்பது ஒரு கலைஞனுக்கு வரமாய் அமைவது. அதிலும் வசனமின்றி நகைப்பூட்டுவதில் சார்லி சாப்ளினைப் போன்று ரசிகர்களைப் பெருவாரியாக வசீகரித்திருப்பவர் ‘மிஸ்டர் பீன்’ ரோவன் அட்கின்சன்.
இதற்குக் கட்டியம் சேர்ப்பதாக ரோவனின் அடுத்த திரைப்படமான ‘ஜானி இங்கிலிஷ்’ மூன்றாம் பாகத்தின் ட்ரைலர் இணையத்தில் கடந்த வாரம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
யார் இந்த ரோவன்?
இங்கிலாந்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து மின்னணுப் பொறியாளராக வளர்ந்தவர் ரோவன் செபாஸ்டின் அட்கின்சன். பேச்சுக் குறைபாட்டால் கல்லூரிப் பருவத்தில் மற்றவர்களுடன் இயல்பாகப் பழக முடியாமல் தவித்தார். தாழ்வுணர்ச்சியிலிருந்து மீள்வதற்காகத் தன்னை ஒரு சாகச ஹீரோவாகப் பாவித்துக்கொண்டு கற்பனையில் மூழ்குவார். கல்லூரி நாடகக் குழுவில் தலைகாட்டும் சூழல் வந்தபோது பேச்சுத் தடுமாற்றத்தை மறைக்க சார்லி சாப்ளின் பாணியில் தனக்கென பிரத்தியேக உடல்மொழியை ரோவன் வளர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
சொந்தமாக எழுத்திலும் பேச்சிலும் பகடியைப் பழக ஆரம்பிக்க, அது அவரை பிபிசி ரேடியோவில் தொடங்கி தொலைக்காட்சித் தொடர்கள்வரை கொண்டுபோய்ச் சேர்த்தது. அதிலும் ‘மிஸ்டர் பீன்’ அவரை உலகெங்கும் பரப்பியது. ஒரு வளர்ந்த மனிதனுக்குள்ளிருந்து வெளிப்படும் குழந்தைத்தனமான செய்கைகள்தாம் மிஸ்டர் பீன் சேட்டைகளுக்கான அடிப்படை. சற்றே பொறாமையும் சுயநலமும் முட்டாள்தனமுமாக சாதாரண சூழ்நிலைகள் அனைத்தையும் அசாதாரணமாய் எதிர்கொள்ளும் மிஸ்டர் பீன் கதாபாத்திரம், குழந்தைகள் மட்டுமன்றிப் பெரியவர்களையும் ரசிக்க வைத்தது.
‘டெடி’ என்றொரு பொம்மை, ஓட்டைக் கார் இவற்றுடன் மிஸ்டர் பீன் கட்டும் அங்கதத் தோரணங்கள் அனைவரையும் கிச்சுக்கிச்சு மூட்டும். மருத்துவமனையின் நீண்ட வரிசையில் பொறுமையிழப்பவராக, தேர்வறையில் விழிக்கும் மாணவராக, நீச்சல் குளத்தில் உள்ளாடையைத் தொலைப்பவராக என்று பல வேடங்களில் சூழ்நிலைக் கைதியாக விலாநோக வெடித்துச் சிரிக்க வைத்தார்.
அனிமேஷன் தொடராகத் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்ததுடன் முழு நீள சினிமாவாகவும் மிஸ்டர் பீன் வசூலை வாரிக் குவித்தது. ஆனால் “ஐம்பது வயதுக்கு மேல் அக்கதாபாத்திரத்தில் நடித்து அதனை சாகடிக்க விரும்பவில்லை” என்று கூறி மிஸ்டர் பீன் பங்களிப்பை ரோவன் குறைத்துக்கொண்டார். அடுத்த திருப்பமாகவே ஜேம்ஸ் பாண்டின் கதாபாத்திரத்தை பகடி செய்து கலாய்க்கும் பாணியிலான ‘ஜானி இங்கிலீஷ்’ உருவானது. இளமையில் தனது தாழ்வுணர்ச்சி தவிப்பிலிருந்து மீள உதவிய சாகச ஹீரோவை இந்தப் படங்களில் அவரே கலாய்த்துத் தள்ளுகிறார். மிஸ்டர் பீன் வரிசையின் இரண்டாவது படம் ‘கீப்பிங் மம்’ என்றொரு கிரைம் காமெடி ஆகியவற்றுக்குப் பிறகு ‘ஜானி இங்கிலீஸ் ரீபார்ன்’ வெளியானது. 7 ஆண்டுகள் இடைவெளியில் அதன் மூன்றாம் பாகமாக ‘ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகைன்’ செப்டம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.
மறைவாகச் செயல்படும் ரகசிய உளவாளிகள் குறித்த தகவல்கள் திடீரென வெளியாவதை அடுத்து, பிரிட்டிஷ் உளவு அமைப்பு தனது முன்னாள் உளவாளியும் தற்போதைய பள்ளி ஆசிரியருமான ஜானி இங்கிலீஷை மீண்டும் கடமையாற்ற அழைக்கிறது. ஹேக்கர் வில்லனைக் கண்டுபிடிக்க கிளம்பும் ஜானி இங்கிலீஷ், காட்சிக்குக் காட்சி வழக்கம்போல ஜேம்ஸ்பாண்டைக் கிண்டலடிக்கிறார். இதுபோதாதென்று பல படங்களில் ‘மிஸ்டர் பாண்ட்’ ஜோடியாக வலம்வந்த ஒல்கா கரிலெங்கோ இப்படத்தின் நாயகியாக வருகிறார். பென் மில்லர், எம்மா தாம்ஸன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டேவிட் கெர் இயக்கி உள்ளார்.
நிஜ வாழ்வின் சாகசம்!
மெய்யாலுமே ரோவன் ஒரு சாகச ஹீரோ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கென்யாவிலிருந்து லண்டனுக்குத் தனி விமானத்தில் ரோவன் தனது குடும்பத்துடன் திரும்பியபோது, பாதி பயணத்தில் விமானி மயங்கி விழ, மிச்ச தொலைவுக்கு ரோவனே சாதுரியமாய் விமானத்தைச் செலுத்தினார். உலகின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் வைத்திருக்கும் பிரபலங்களில் ரோவனும் ஒருவர். அவ்வப்போது அவர் கார் விபத்தில் இறந்ததாகச் செய்திகள் எழும் அளவுக்கு வேகமாக கார் ஓட்டுவதுடன் ரேஸிலும் கலந்து கலக்குவார். இத்தாலியில் கார் விபத்தில் சிக்கிய அமெரிக்கத் தொழிலதிபரை இவ்வாறு மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்டதை ‘நிஜ வாழ்வின் ஹீரோ’ என்று பத்திரிகைகள் பாராட்டின. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனேத்ரா சாஸ்திரியை மணந்து 24 வருடங்களுக்குப் பின்னர் விவாகரத்தாகி, தன்னில் பாதி வயதாகும் லூயி ஃபோர்டைத் தனது 60 வயதில் மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார்.