Last Updated : 13 Apr, 2018 10:37 AM

Published : 13 Apr 2018 10:37 AM
Last Updated : 13 Apr 2018 10:37 AM

தரணி ஆளும் கணினி இசை 27: கற்பனையைப் பின்தொடரும் மரபு!

மது சினிமா எல்லா வகையிலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. கதை சொல்லும் விதம், காட்சியாக்கம், இசை, தொழில்நுட்பம், தயாரிப்பு, வெளியீடு எனப் பல அம்சங்களில் ஐரோப்பிய சினிமா உலகைப் பார்த்து நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறோம். அல்லது அங்கே காலம்தோறும் நிகழ்ந்து வந்த முன்னேற்றங்களை நாமும் எடுத்தாள்கிறோம். மாறாகக் குறைந்த எண்ணிக்கையில்தான் சிறந்த படங்களை நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது.

ஆனால் ஐரோப்பியர்களைக் காட்டிலும் பலமடங்கு சிறந்த திரையிசையை நாம் உலகுக்குக் கொடுத்திருக்கிறோம். நம் அளவுக்கு திரையிசைப் பாடல்களில் எண்ணிக்கை அளவிலும் படைப்பு என்கிற அந்தஸ்தின் அருகிலும் சென்று சாதனைப் படைத்த சமூகம் இல்லை என்றுகூடக் கூறிவிடலாம். என்னதான் மேற்கத்திய வாத்தியங்களின் இசையை, பின்னணிக்கும் பாடல்களின் இசைக்கோவைக்கும் நாம் பயன்படுத்திக்கொண்டே வந்திருந்தாலும் நமது திரையிசையில் நீண்ட நெடிய இசைப் பாரம்பரியத்தின் தாக்கம் ஆழமாய் வேரூன்றிவிட்டது. அதன் விளைவாகவே நமது திரையிசை தனித்த இசை மரபுடையதாக நம்முடன் தொடர்ந்து ஊடாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழு முதற்காரணம் பாரம்பரிய இசையில் நமக்கிருந்த பரிச்சயமும் ரசனையும்தான்.

தமிழ்த் திரையிசையைப் பொறுத்தவரை கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வியும் இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்களில் இசைக்கோவையிலும் பின்னணி இசையிலும் மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்கள் அமைத்த மெட்டுக்களில் மரபின் தொடர்ச்சியும் குழைவும் தொடர்ந்து இழையோடிக்கொண்டிருப்பதைக் கேட்கமுடியும். அவர்களுக்குப்பிறகு இளையராஜாவிடம் கிராமியத்தின் தொடர்ச்சி இருந்தபோதும் பாரம்பரிய இசையின் பயிற்சியால் விளைந்த அவரது திரையிசையில், வெகுமக்கள் ரசிக்கும்விதமாக பாரம்பரிய இசை எளிமைப்படுத்தப்பட்டதில் இந்த மரபின் தொடர்ச்சி மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது என்றால் மிகையில்லை.

ரசனையால் காப்பாற்றப்படும் தொடர்ச்சி

என்னதான் நவீனத்துக்குள் நாம் வந்துவிட்டாலும் நமது கற்பனைதான் படைப்பின் ஆதார சுருதியாக இருக்கிறது. மெட்டுக்கான கற்பனை உருவாகும்போது இசையமைப்பாளரின் கற்பனையை பின் தொடரும் ஒன்றாகப் பாரம்பரிய இசையின் மரபுத் தொடர்ச்சி வந்து நின்றுவிடுகிறது. மரபார்ந்த பாரம்பரிய இசை நம் வழிபாட்டிலும், கூத்து, நடனம் ஆகியவற்றிலும் முக்கிய அங்கமாக இடம்பெற்றுவிட்டதால், சுவாசித்தலுக்கு அடுத்த இடத்தில் இசையை வைத்துக் கொண்டாடி வந்ததிருக்கும் இனக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

தொடக்கக் கால திரைப்படங்களில் 60 பாடல்கள் இருந்தன. அதன்பிறகு 30, பிறகு 10, தற்போது 5 பாடல்கள், அல்லது 2 பாடல்கள் என்று சுருக்கிக்கொண்டுவிட்டோம். திரைப்படம் ஒரு காட்சிக்கலை என்ற புரிதலை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதால் விளைந்திருக்கும் மாற்றம் இது. என்றாலும் பாடல்களின் முக்கியத்துவத்தை இழக்க நமக்கு விருப்பம் இல்லை. அது தரும் உணர்ச்சித் தாக்கத்தையும் அதைத் தனியாய் கேட்டு, ஒரு பாடகனாய் மாறி அதைத் திரும்பத்திரும்ப முணுமுணுக்கவும் அல்லது வாய்திறந்து பாடும் ரசனையையும் எப்போதுமே நாம் இழக்க விரும்புவதில்லை. திரையிசைக்கும் தமிழ் அல்லது இந்திய ரசிகனுக்குமான இந்த உறவுதான் திரையிசையின் மரபுத் தொடர்ச்சியைக் காப்பாற்றி வருகிறது.

வாத்திய இசையில் மரபின் தொடர்ச்சி

திரையிசைக்குள் இன்று எத்தனையோ அந்நிய வாத்தியங்கள் வந்துவிட்டன. ஆனால் நம் மரபார்ந்த வாத்திய ஒலிகள் நமக்குக் கடத்தும் உணர்வுகள் பிரத்தியேகமானவை. புல்லாங்குழல் ஒலியைக் கேட்டால் ஒரு தமிழ் ரசிகன் உணரும் மரபார்ந்த உணர்ச்சியின் வழி, அவன் மனத்திரையில் ஒரு கிராமியக் காட்சி விரியலாம். கதாபாத்திரத்தின் குணாதிசயத்துக்கு ஏற்ப வாத்திய ஒலிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மரபின் தொடர்ச்சியை உணர்ந்து காட்சிகளை பார்வையாளர்களால் எளிதில் பின்தொடர முடிகிறது.

கதாநாயகன் வரும் காட்சியில் ஒரு குறிப்பிட்ட வாத்தியத்தின் இசையைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது காட்சியில் அவர் தோன்றும் முன்பே அந்த குறிப்பிட்ட வாத்தியத்தின் இசை பின்னணியில் ஒலித்தது என்றால், நாயகன் வரப்போகிறார் என்பதைப் பார்வையாளர்கள் தெரிந்துகொண்டு கைத்தட்டி ஆராவாரம் செய்யத்தொடங்கிவிடுகிறார்கள். கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஆவியும் பேயும் வரும் காட்சிக்கும் அப்படித்தான்.

தவில், நாதஸ்வரம் ஆகியன மங்கள நிகழ்வுகளுக்கு, பறை வாத்தியம், இறப்பு, வெற்றி ஆகியவற்றுக்கு, மேட்டுக்குடி சமூகத்தின் துயரத்தையும் உற்சாகத்தையும் தொடர்புப்படுத்த வீணை, சாரங்கி என வாத்தியங்கள் தரும் மரபு உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வயலின் என்றாலே சோக உணர்ச்சியை எளிதில் கடத்தும் கருவி என்று பதிவாகியிருந்த நம் தொடர்ச்சியில் அதைத் தற்போது மகிழ்ச்சியை உணரவைக்கவும் பயன்படுத்தமுடியும் என்று தற்கால இசையமைப்பாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்புவரை நாயகன், நாயகியை மணப்பந்தலில் தாலி கட்டி, வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொள்வதுடன் சுபமாக படம் முடியும். அப்போது கடைசியாக ஒலிக்கும் இசையாகக் கெட்டிமேளம் இருந்தது. இப்படி மங்கள வாத்தியமாக ஒலித்துவந்த தவில், தற்போது குத்துப்பாடலுக்கான தாளக்கருவியாக மாறி நிற்பது, மரபின் தொடர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மறுக்கமுடியாத திரிபு என்று கூறலாம்.

பாடல் வகைமையின் தொடர்ச்சி

சினிமா பேசத் தொடங்கியபின் கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களும் சமூகக் கதைகளைக் கொண்ட குடும்பத் திரைப்படங்களும் பாடல் வகைமையில் மரபின் தொடர்ச்சியை திடமாக உருவாக்கி வந்திருக்கின்றன. தியாகராஜ பாகவதர் ‘ஹரிதாஸ்’ படத்தில் குதிரையில் சவாரி செய்தபடி ‘வாழ்விலே ஓர் திருநாள்’ என்று பாடிக்கொண்டு வரும் காட்சி, கதாநாயகன் அறிமுகத்தை ஒரு பாடலின் வழியாக வெற்றிகரமாக உணரச்செய்யமுடியும் என்ற மரபை உருவாக்கியது. கிண்டலும் கேலியும் வர்ணிப்புமாகத் தொடங்கிய அந்தப் பாடல்தான், பின்னால் கதாநாயக அறிமுகத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை ஊட்டும் தத்துவப் பாடலாகவும் துவளாதிருக்கத் தன்னம்பிக்கை தரும் பாடலாகவும் தன்னை உருமாற்றிக்கொண்டது.

எத்தனை உருமாறினாலும் அதில் கதாநாயகனின் சாகச குணத்தை, மெட்டுக்களின் வீச்சும் இசைக்கோவையில் இருக்கும் எழுச்சியும் உணரவைத்துவிடுகின்றன. இன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் தண்ணீர் பிரச்சினைக்காக போராடினாலும் அவர்களுக்கான அறிமுகப்பாடலும் சமூகப் பிரச்சினைக்குப் போராடிக்கொண்டே பகுதிநேரமாக நாயகியைக் காதலிக்கும்போது வர்ணிக்கும் டூயட் பாடலும் அறுபடாத தொடர்ச்சி கொண்டவை. நாயகன் மீது காதலாகி அவனுக்காக ஏங்கவும் உருகவும் செய்யும் நாயகியின் பாடலும் அப்படியே. இன்றைய மாண்டேஜ் பாடல்கள் கதையை நகர்த்தப் பயன்பட்டாலும் அவற்றில் மற்ற அனைத்துப் பாடல் வகையின் நிழலை நீங்கள் காணமுடியும். இன்றைய புதிய இசையமைப்பாளரின் கற்பனையை பின்தொடரும் இந்த தனித்த திரையிசை மரபை மீறி இன்று திரைப்படத்தின் விளம்பரத்துக்காகத் திரையில் இடம்பெறாத பல இசைப் பணிகளை ஓர் இசையமைப்பாளர் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றி அடுத்தவாரம்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x