

ஒரு திரைப்படத்தின் இதயமாக இயங்குவது அதன் திரைக்கதையாக்கம். அந்த இதயத்தின் சீரான துடிப்பைச் சார்ந்தே அப்படத்தின் சிறப்புத் தன்மை அமையும். எனவே, உலகளாவிய சினிமா குறித்து நாம் உரையாடுவதற்கு முன்பாகத் தமிழ் சினிமாவின் திரைக்கதையாக்க பிரச்சினைப்பாட்டிலிருந்து தொடங்குவோம். தமிழ் சினிமா வரலாற்றில், திரை யிசையின் மேன்மை நிலை எப்படிக் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்ததோ, அதைப்போலவே திரைக்கதையின் நிலையும்.
தமிழ் சினிமாவில் தனக்குத் தெரியாத ஒளிப்பதிவை யாரும் கையிலெடுப்ப தில்லை, படத்தொகுப்பை யாரும் கையிலெடுப்பதில்லை, இசையை யாரும் கையிலெடுப்பதில்லை, ஆனால், இவை அனைத்தையும்விட மிகவும் கடின வேலையான திரைக்கதை எழுது தலை மட்டும் எடுத்துக்கொள்வது உலக விநோதம்.
தமிழ் சினிமா பின்னோக்கிப் போனதற்குக் காரணமே இப்படி எல்லாரும் கால் வேக்காடாகத் திரைக்கதை எழுதி, அரை வேக்காடாகப் படம் பண்ண எண்ணுவதுதான் என்பதை நியாய மனதுடன் கூறித்தான் ஆகவேண்டும்.
பாரதிராஜா எனும் முன்மாதிரி: அதிலும் தனது படம் ஏதோவொரு சந்தர்ப்பவசத்தில் திரையரங்க வெற் றியையோ, உலக அரங்கில் சில விருதுகளையோ பெற்றுவிட்டால் போதும்; பெருமிதமடைந்துவிடும் இயக்குநர், இப்போது முன்பைவிட திரைக்கதையாளரின் தேவையை முற்றிலுமாக புறக்கணித்து அவரது திரைப்படத்துக்கு அவரே கேட்டினை விளைவிக்கும் முயற்சியைத் தன்னம்பிக்கையுடன் தகவமைத்து விடுகிறார். இங்கு உலவும் விமர்சகர்கள் அவரைச் சுற்றி நின்று கைகொட்டி கரகோஷம் செய்து ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிவிடுகின்றனர்.
எல்லாம் சேர்ந்து அண்டை மாநிலங் களில் உருவாகும் திரைப்படங்களைப் போன்ற தரத்தை அடையவிடாமல் செய் யும் முன்களச் சூழ்ச்சியைப் போன்றதாக இந்தச் செயல்திட்டம் முடிவடைகிறது. தமிழில் கிராமிய வாழ்வை அச்சு அசலாக வெளிப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா ஏன் சொந்தமாகத் திரைக்கதை எழுதிப் படமெடுத்திருக்கக் கூடாது? அவரிடம் இல்லாத மேதை மையா? எதற்காக ஆர். செல்வராஜ் போன்ற திரைக்கதையாளரின் எழுத்தைத் தன்னுடைய படங்களில் தக்கவைத்தபடி இருந்தார்? அதுதான் ஆண்டாண்டு கால உலக சினிமாவின் மரபு.
நாம் 'ஆஹா, ஓஹோ' என்று புகழும் 99 சதவீதப் படங்களுக்குப் பின்னே திரைக்கதையாளரின் சிந்தனையும் திறனும் வீற்றிருப்பது (தமிழ் சேர்த்து) அக்காலத்திலும் (தமிழ் தவிர்த்து) இக்காலத்திலும் நடைமுறை.
ஸ்ரீதர் - கோபு இணை: அதற்கு முன்காலத்துக்குச் சென்று பார்ப்போம். தமிழ் சினிமாவின் பெருமையாக நாம் மதிக்கும் இயக்குநர் தர், பல வெற்றிப்படங்களுக்குத் திரைக்கதையாளராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அப்படியிருந்தும், தான் இயக்கிய படங்களுக்கு மற்றொரு திரைக்கதையாளரான சித்ராலயா கோபுவை உடனிருத்திக் கொண்டார்.
அப்படித்தான் இருக்கும் தூயப் படைப்பு மனதின் இருப்பு. மனம்தொட்டுச் சொல்லுங்கள், 'காதலிக்க நேரமில்லை' படத்தை உங்கள் வாழ்நாளிற்கும் மறக்கமுடியுமா? இயக்குநர் சி.வி. ராஜேந்திரனுடன் இணைந்து சித்ராலயா கோபு திரைக்கதைப் பணியாற்றிய 'கலாட்டா கல்யாணம்' படத்தை உங்கள் வாழ்நாளிற்கும் மறக்கமுடியுமா? இவை எப்படிக் காலத்தால் அழியாத புகழைப் பெறுகின்றனவெனில், நடிகர், இயக்குநர் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பம்சங்களையும் தாண்டித் திரைக் கதையின்வழி மக்களின் நாடிபிடித்து வைத்தியம் செய்ததுதான். இன்றைக்கும் அத்தகைய படங்களில் அந்த வைத்தியம் உயிரோட்டமாகவே இருக்கிறது.
பாலுமகேந்திரா - மகேந்திரன்: கலை சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்த்தால், பாலுமகேந்திராவும் மகேந்திரனும் இயல்பிலேயே திரைக்கதையில் விற்பன்னர்களாக இருந்தவர்கள். எனவே பல எழுத்தாளர் களது புதினங்களை உரிமை பெற்று அற்புதம் குலையாமல் திரையில் மிளிரச் செய்தார்கள். இவர்களெல்லாம் திரைக்கதைப் புலிகள். ருத்ரய்யா தனக்கான திரைக்கதைக் குழுவொன் றையே உருவாக்கி வைத்திருந்தார்.
ஒரு சமரசமற்ற சினிமாவுக்கான எந்தவொரு குரலும் நேர்மையான வழியில் மட்டுமே உருவாகும். அதற்குக் கூடுகட்டித் தரும் விமர்சனங்களே தமிழுக்கு எப்போதும் தேவையா யுள்ளன. ஒரு படைப்பின் நிறையோடு குறையையும் சுட்டிக்காட்டும் இயல்பும் அதைப் பக்குவத்துடன் ஏற்கும் படைப்பு மனோநிலையுமே நம்மை இந்தியச் சமகால சிறந்த கலைஞர்களின் மட்டத் துக்கு உயர்த்தும்.
அன்றி, இன்றைய விற்பனையை எப்படிக் கவர்ச்சிகரமாக நடத்துவது என்கிற உத்தியில் சில பக்க வாத்தியங்களுடன் களமிறங்கினால், அது நமது ஒட்டுமொத்தப் படைப்புச் சமூகத்துக்கு ஆழச் சரிவாக அமைந்துவிடும்.
எழுதிய பாடலுக்கே சங்கீதம்: ஒரு நல்ல நாவல் தரும் மன அழுத்தமும் நினைவிலிருந்து மீள முடியாத தன்மையும் ஒரு நல்ல திரைக்கதையைப் படிக்கும்போதும் நிகழவேண்டும். உலகெங்கும் எடுக்கப் படும் நல்ல படங்களின் பின்னியங்கும் திரைக்கதைகளைப் படித்துப் பாருங்கள். நான் குறிப்பிடும் உணர்வுப்பாடு நம்முள் ஏற்பட்டே தீரும்.
ஏனெனில் அவை முறையாகத் திரைக்கதையாளர் என்னும் மதிநுட்பம் வாய்ந்தவரின் கை வழி எழுத்தாக்கம் செய்யப்படுகின்றன. ஒரு நல்ல திரைக்கதையாளர் நல்ல இயக்குநராகத் தன்னை விசாலப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால், ஒரு நல்ல இயக்குநர் நல்ல திரைக்கதையாளராக மாறுவதென்பது கடின காரியம்.
அவரிடம் திரைக் கதைக்கான ஆற்றல், பயிற்சி வாயிலாகவோ அல்லது விதிவிலக்காக இயற்கையின் வாயிலாகவோ இருந்தா லொழிய, அவர் அந்த முயற்சியை முன்னெடுப்பது ஆழம் தெரியாத சேற்றில் கால் வைப்பதற்குச் சமம். அதோடு சினிமாவின் மற்ற தொழில் நுட்பங்கள் போலத் திரைக்கதை எழுதுதலும் ஒரு தொழில்நுட்பம்தான்.
சொல்லப்போனால் எல்லாவற்றுக்கும் முதலாக வெற்றுப் பரப்பை வைத்துக் கொண்டு கற்பனை செய்யவேண்டிய தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் சரிவர உருப்பெற்றால்தான் மற்ற தொழில்நுட்பங்கள் தமது பாதையைத் தெளிந்து சீர்படுத்திக் கொள்ளவியலும். எழுதிய பாடலுக்குத்தான் சங்கீதம்.
திரைக்கதையின் இடம்: தமிழ் சினிமாவின் தீவிரச் சிக்கலாக வும் உளநோயாகவும் பரவியிருப்பது, அனைவருமே திரைக்கதை எழுத விரும்புவதும் அல்லது திரைக்கதையை எழுதிவிட்டதாக நம்புவதும். பாரிஸில் எங்கே தடுக்கி விழுந்தாலும் ஒரு கலைஞன் மீதுதான் விழ நேரும் என்பார்கள்.
அங்கு அவ்வளவு படைப்பு நெரிசல். அதேபோல் தமிழ்நாட்டில் எங்கு விழுந்தாலும் திரைக்கதையாளர் மேல்தான் விழவேண்டும். சினிமா வில் இயங்கும் அனைவருமே திரைக் கதையாக்க விஷயத்தில் தடியெடுத்த தண்டல்காரர்களாக இருக்கிறார்கள்.
இதை நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. உண்மையில் இது பெருந்துயரம். ஒருமுறை ஆஸ்கர் திரைப்பட விருது விழாவில் பார்த்த ஞாபகம். அனைத்து விருதாளர் களுக்கும் கரகோஷத்தைத் தந்து கொண்டிருந்த கலைஞர்கள் திரைக்கதையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டபோது, அந்தத் திரைக்கதையாளரை மரியாதை செய்யும் விதமாக, அனைவரும் ஒன்றாக எழுந்துநின்று கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். ஒரு படத்தில் திரைக்கதையின் பணி எவ்வளவு மகத்தானது என்றறிந்த கூட்டம் அது.
அதோடு, நல்ல சினிமா என்பது வெறுமனே வடிவ மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியில் மட்டும் அடங்காது. அதன் பாடுபொருளின் தீவிரத்தன்மையே அதனைத் தனித்த அடையாளத்துக்குள் கொண்டுவரும் சாதனம்.
நீங்கள் எவ்வளவுதான் ஹாலிவுட் சினிமாவின் நச்சியல்பையும் அதன் உலகளாவிய ஆக்கிரமிப்பையும் நரம்பு புடைக்க நெஞ்சை நிமிர்த்தி விமர்சித் தாலும், அவர்கள் ஒவ்வொரு படத்திலும் மேற்கொள்ளும் சிற்ப வேலைப்பாட்டிற்கு இணையாகத் திரைக்கதையில் காட்டும் அக்கறையைப் புறந்தள்ளிவிட முடியாது.
எல்லாவற்றிற்கும் மணி மகுடமாக அவர்களது படங்களில் திரைக்கதையே குடிகொண்டிருக்கும். மின்னோவியத்தில் செய்யப்பட்ட குரங்கு நடித்தாலும்கூட அப்படத்தை ஒருமுறை பார்த்துவிடும்படி இருக்கும்.
இது அங்கு மட்டுமல்ல, நமது இரவுகளைத் தூங்கவிடாமல் செய்யும் அனைத்து உலகப்படங்களுமே தேர்ந்த திரைக்கதையை ரத்தநாளமாகக் கொண்டு இயங்குபவையே. கண் களை மூடிக்கொண்டு உடனே உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமொன்றை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அது பிடித்துப் போனதற்கான பல பின்னணி களில் முதன்மையாக, அப்படத்தின் வெற்றிக்கு விதையாகத் திரைக்கதை அமைந்திருப்பது உங்கள் மனத்துக்குப் புலப்படும்.
உலகத் திரை மேதைகளில் நம் மனங்கவர்ந்த ஆல்பிரட் ஹிட்ச்காக் கிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார், “ஒரு சிறந்த திரைப்படத்துக்கு மிகவும் அவசியமானது என்னவென்று கூறுங் கள்?” ஹிட்ச்காக்கின் பதில், “மூன்று விஷயங்கள் இன்றியமையாதவை. முதலாவது - திரைக்கதை. இரண்டாவது - திரைக்கதை. மூன்றாவது - திரைக்கதை”.
- viswamithran@gmail.com
| விஸ்வாமித்திரன் சிவகுமார் கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தேர்ச்சி மிகு திரைக்கதையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பன்முக அடையாளங்கள் கொண்டவர் விஸ்வாமித்திரன் சிவகுமார். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பிறந்து, வளர்ந்த இவர், தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கியூபத் திரைப்பட இயக்குநர் தாமஸ் கிதாரெஸ் அலியா குறித்த ‘ஒரு கலைஞனின் புரட்சித் தடம்' என்கிற புத்தகத்தை 2003இல் தொகுத்து வெளியிட்டார். |
| உலகளாவிய சிறார் திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய ‘சிறுவர் சினிமா' மற்றொரு முக்கிய நூல். இலங்கை சினிமாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த இயக்குநர் பிரசன்ன விதானகேவிடம் உதவி இயக்குநராகவும் அவருடைய உதவித் திரைக்கதையாளராகவும் பல படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். |