

சிறந்த நடிகர் என்பவர், தன்னுடைய தோற்றத்தால் அறியப்படுபவர் அல்ல. மாறாக அவர், உடல்மொழியையும் குரலையும் கொண்டே தன்னை நிலை நிறுத்திக்கொள்வார்.
தற்போது அர்ஜுன் தாஸின் குரல் குறித்துப் பேசுகிறோம். அவருக்கு முந்தையத் தலைமுறையில் டேனியல் பாலாஜியின் குரல் பார்வையாளர்களின் அடிவயிற்றில் பய அமிலத்தைத் தொடர்ந்து சுரக்கச் செய்திருக்கிறது.
ஸ்டைலான உடல்மொழியின் வழியாக மேலெழும்பும் அவரது நடிப்பும் வசீகரம் கலந்த வில்லத்தனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது குரலும் அதன் வழியாகப் பாய்ந்தோடும் வசன உச்சரிப்பும் சரியான கலவையில் இணையும்போது டேனியல் பாலாஜி என்கிற கலைஞன் தங்கு தடையின்றி திரை வெளியில் துலங்கத் தொடங்கிவிடுகிறான்.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் ‘முதல்’ கிளைமாக்ஸில் கமலுடன் ஒரே சட்டகத்தில் டேனியல் பாலாஜி தோன்றும்போது, நடிப்பில் கமல் எனும் ஆளுமைக்கு ஈடு தரும் மாயத்தை அவர் செய்திருப்பார்.
இருவரும் ஒருவரை இன்னொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டு ரத்தச் சகதியாகக் கிடக்கும் போது ராகவனை (கமல்) தனது வார்த்தைகளின் வழியாக மனம் வலிக்கச் செய்யும் அமுதன் (டேனியல் பாலாஜி) பேசும் ஒரு துணுக்கு இது: “உன் போலீஸ் ஃபிரண்ட் கெஞ்சிக் கதறி அழுது செத்துப் போனான் தெரியுமா உனக்கு… சண்டையே போடாம செத்துப் போனான் surprising” - இதை டேனியல் பாலாஜி உச்சரிக்கும் விதம், பார்வையாளர்கள் அனைவரையும் ராகவனாக உணர வைத்து கொதிநிலைக்குக் கொண்டு செல்லும் உச்சரிப்பாக அமைந்தது.
அமுதன் என்றல்ல, அதற்கு முன் ‘காக்க காக்க’ ஸ்ரீகாந்த் ஐபிஎஸ், ‘பொல்லாதவன்’ ரவி, வடசென்னை தம்பி என டேனியல் பாலாஜி ஏற்ற எதிர்மறை வேடங்கள் அனைத்திலும் உடல்மொழியும் குரலும் இணைந்த அவரது தனித்துவமான கலவை, நடிப்பின் ஆகிருதியாக பிரம்மாண்டம் காட்டியிருக்கிறது.
டேனியல் பாலாஜியின் மற்றொரு சிறப்பு என்பது, சிலரைத் தொடர்ந்து எதிர்மறைக் கதாபாத்திரங்களில் ‘டைப் காஸ்ட்’ செய்யும்போது அதைப் பார்வையாளர் மன விலகலின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்.என்.நம்பியார், ரகுவரன் வரிசையில் டேனியல் பாலாஜியைத் தமிழ், தெலுங்கு, மலையாளப் பார்வையாளர்கள் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல், நம்பியார், ரகுவரன் எப்படித் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு கதாநாயகனுக்குரிய குணங்களென நாம் கருதும் அன்பையும் அரவணைப்பையும் அனைவருக்கும் கொடுத்தார்களோ.. அவ்வாறேதான் டேனியல் பாலாஜியும் எனத் தெரிந்துகொண்டேன்.
தமிழ்நாடு அரசின் தரமணி திரைப்படக் கல் லூரியில் சேர்ந்து இயக்கம் பயின்றபோது இவர் இயக்கிய ‘பவித்ரா’ என்கிற டிப்ளமா திரைப்படம் அன்றைக்கு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறது. சிறந்த இயக்குநர்களோடு பணிபுரிந்து அவரு டைய இயக்குநர் கனவு வசமாகும் முன்பே விடைபெற்றுவிட்டதை ஏற்க முடியவில்லை.
‘மருதநாயகம்’ படத்தின் தயாரிப்பு மேலாளர்களில் ஒருவராக இருந்து பணி புரிந்தபோது கிடைத்த தொடர்புகளின் வழியாக 1999இல் ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான டேனியல் பாலாஜி மறைந்த நட்சத்திரம் ‘இதயம்’ பட முரளியின் ஒன்றுவிட்ட தம்பி.
அதை மட்டுமல்ல, கன்னடத் திரையுலகில் பிரபலமான முன்னணி இயக்குநராக விளங்கிய மறைந்த இயக்குநர் சித்தலிங்கய்யா தனது மாமா என்பதையும் எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் தனது சொந்தத் திறமையால் முன்னேறியவர். பல கனவுகளைச் சுமந்துகொண்டிருந்த தனது கண்களை தானம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
- கட்டுரையாளர், ‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற பிரபல நடிகர்.