சினிமா ரசனை 2.0: ஜப்பானில் சிக்கிய இங்கிலாந்து மாலுமி!

சினிமா ரசனை 2.0: ஜப்பானில் சிக்கிய இங்கிலாந்து மாலுமி!
Updated on
2 min read

பதினேழாம் நூற்றாண்டின் முதல் வருடம். 1600. நிப்பான் என்று அழைக்கப்பட்ட ஜப்பானை ஆண்டுவந்த மன்னருக்கு நிகரான தலைவர் இறந்துவிடுகிறார். அவருடைய வாரிசுக்கு மிக இளம் வயது. எனவே அவனைத் தலைவர் ஆக்க முடியாது.

இறக்கும் தறுவாயில் தலைவர் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த ஐந்து சக்திவாய்ந்த தலைவர்களை அழைத்து, “என்னுடைய மகனுக்கு உரிய வயது வரும்வரை நீங்கள் ஐவரும் இணைந்து ஆட்சி புரியவேண்டும்” என்று ஆணையிடுகிறார்.

ஐவரில் இருவர் அப்போதுதான் ஜப்பானில் போர்த்துக்கீசியர்களால் பரப்பப்பட்டு வந்த கிறிஸ்துவ மதத்தின் கீழ் கத்தோலிக்கர்களாக மதம் மாறியிருக்கிறார்கள். இதில் மற்ற மூவருக்கும் எரிச்சல்.

இந்த ஐவரில் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் இருவர். ஒருவர் யோஷி தோரநாகா பிரபு. இவருக்குக் கீழ் ஒரு பெரிய படை இருக்கிறது. ஒரு பெரிய நிலப்பரப்பையும் தனக்குக் கீழ் வைத்திருப்பவர். மிகவும் மரியாதைக்குரியவர். இறந்த தலைவரின் அன்புக்குரியவர். நேரடி அரசப் பரம்பரையைச் சேர்ந்த ஒரு குடும்பத் தில் பிறந்தவர்.

அவருக்கு நேர் எதிரான எதிரியாக இருப்பவர் இஷிடோ காஸுநாரி. இவருக்கும் ஒரு பெரிய படை உண்டு. அக்காலத்தில் மிகப் பிரம்மாண்டமாக விளங்கிய ஓஸாகாவின் கோட்டையை ஆண்டு வருபவர். ஆள்பவர்களின் தலைமையகமாகச் சில வருடங்களுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட கோட்டை அது.

ஐந்து குடும்பங்களில் நால்வரைத் தனது கைக்குள் கொண்டுவந்துவிடுகிறார் இஷிடோ. தோரநாகா பிரபுவை மட்டும் என்ன செய்தும் தன்வசம் இழுக்க முடியவில்லை. எந்நேரமும் இவர்களுக்குள் ஒரு பெரும் போர் மூளலாம் என்கிற நிலை.

அப்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கப்பல் ஜப்பானில் கரை ஒதுங்குகிறது. பல நாள்களாகக் கடலில் அலைந்து திரிந்து இப்போதுதான் நிலத்தைக் கண்டிருக்கிறது அந்தக் கப்பல். அதன் மாலுமி ஜான் ப்ளாக் தார்ன். கப்பலை ஜப்பானிய வீரர்கள் சிறை பிடிக்கிறார்கள். கப்பல் ஒதுங்கிய இடம், தோரநாகா பிரபுவுக்குச் சொந்தமான பகுதி.

போரில் என்ன செய்து துரோகம் செய்யும் எதிரிகளை வெல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் தோரநாகா, இந்தக் கப்பல் ஒதுங்கிய செய்தியைக் கேள்விப்படுகிறார். அந்தக் கப்பலில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், சில பீரங்கிகள், பல ஆயிரம் பீரங்கிக்குண்டுகள் இருக்கின்றன என்கிற செய்தியும் அவரை மிகவும் கவர்கிறது.

உடனடியாகக் கப்பலைக் கைப்பற்ற ஆணையிட்டு, மாலுமி ப்ளாக் தார்னைத் தன்னிடம் அழைத்துவரும்படி ஆணையிடுகிறார். அப்போதுதான் தோரநாகாவுக்குத் தெரிகிறது - போர்த்துக்கீசியர்கள், ஐரோப்பா என்கிற கண்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய இரண்டு நாடுகள்தாம் இருக்கின்றன என்று சொல்லித் தோரநாகாவை இதுவரை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஜப்பானின் வெளியுறவுத் துறை விவகாரங்களையும் தோரநாகா கவனிப்பதால் அவரும் இதை இத்தனை நாள் நம்பியே போர்த்துக்கீசியர்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமையை அளித்திருக்கிறார்.

ஆனால், போர்த்துக்கீசியர்களின் எண்ணம் - மெல்ல ஊடுருவி ஜப்பானைக் கைப்பற்றி அனைவரையும் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றுவது. இதை ப்ளாக்தார்ன் சொல்லிக் கேள்விப்படும் தோரநாகாவுக்கு அப்போதுதான் ஐரோப்பா எவ்வளவு பெரியது என்றும், அதில் இங்கிலாந்தும் உள்ளது என்கிற உண்மையும் புரிகிறது. இதுதான் ‘ஷோகன்’ (Shōgun) சீரீஸின் பின்னணி.

மெல்ல மெல்ல ப்ளாக் தார்ன் ஜப்பானிய வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்கிறான். அங்கே இன்னும் சில முக்கியமான கதாபாத்திரங்களைச் சந்திக்கிறான். நட்பாகிறான். தன்னிடம் ஒரு பலம் வாய்ந்த கப்பல் இருப்பதாலேயே தோரநாகாவுடன் மாலுமி ப்ளாக் தார்ன் இருக்க நேர்கிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்த விறுவிறுப்பான சீரீஸின் கதை.

இது, Shōgun என்கிற பெயரில் புகழ்பெற்ற இயக்குநராக இருந்து பின்னர் நாவலாசிரியராக மாறிய ஜேம்ஸ் க்ளாவெல் 1975இல் எழுதிய நாவல். உண்மையிலேயே ஜப்பானில் நடந்த ஒரு மாபெரும் யுத்தத்தை, சில பெயர்களை மட்டும் மாற்றி ஒரு நாவலாக எழுதினார். நாவல் பிரம்மாண்ட வெற்றி அடைய, முதல்முறையாக ஜப்பான் சென்று இந்த நாவலை ஒரு டிவி சீரீஸாக 1980இல் எடுத்து வெளியிட்டனர்.

அதுவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் ஜப்பானிய உணவகங்கள் தொடங்கப்பட்டது, இந்த சீரீஸ் ஒளிபரப்பான பின்னரே. அந்த அளவு கலாச்சார ரீதியாக அமெரிக்கர்களை இந்த ‘Shōgun’ சீரீஸ் கவர்ந்தது. அதில் பிரபு தோரநாகாவாக நடித்தவர், அகிரா குரசவாவின் ரோஷோமான் முதலிய படங்களில் நடித்துப் புகழ்பெற்ற உலக நடிகர் தோஷிரோ மிஃபூனே.

இத்தகைய பின்னணி வாய்ந்த Shōgun, இப்போது 2024இல் சீரீஸாக எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாரம் ஒரு பாகம் ஒவ்வொரு செவ்வாயன்றும் ஹாட்ஸ்டாரில் வருகிறது. இதுவரை ஏழு பாகங்கள் வந்தாகிவிட்டன. இன்னும் மூன்றே பாக்கி.

பார்க்கத் ஆரம்பித்தால் வெளியே வராதபடி நம்மை உள்ளிழுக்கும் சீரீஸ்களில் இதுவும் ஒன்று. நீங்கள் மார்க்கோ போலோ சீரீஸைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் அதைவிடவும் ‘ஷோக’னில் பின்னணி சுவாரசியம் அதிகம். இத்தகைய ஒரு பிரம்மாண்டமான சீரீஸுடன் நமது இந்தத் தொடரின் இரண்டாவது சீசனை முடித்துக் கொள்வோம்.

(சினிமா ரசனை 2.0 நிறைவடைந்தது)

- rajesh.scorpi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in