

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள லூயிஸியானா மாகாணம். அதில் வெர்மிலியன் என்கிற சிறிய ஊர். அங்கே 1995இல் ஒரு கொலை நடந்திருக்கிறது. பரந்து விரிந்த வயல்வெளியில் அமர்ந்த நிலையில் ஓர் இளம்பெண்ணின் சடலம். கைகள் கட்டப்பட்டு வணங்குவது போன்ற நிலையில், ஆடைகள் இன்றி இருக்க, கண்கள் மட்டும் துணியால் மறைக்கப்பட்டு, தலையில் மான்கொம்புக் கிரீடம் அணிவிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்படுகிறது.
இந்தக் கொலையைத் துப்பறியும் பொறுப்பு, லூயிஸியானா மாநிலக் காவல் புலனாய்வு அதிகாரிகளான மார்ட்டின் ஹார்ட் (Martin Hart), ரஸ்டின் கோல் (Rustin Cohle) ஆகிய இருவரிடம் வழங்கப்படுகிறது. இருவரும் கொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். சடலத்தைப் பார்வையிடுகிறார்கள்.
மெல்ல மெல்ல இந்த வழக்கினுள் நுழையும் ஹார்ட்டும் கோலும் மேலும் சில கொலைகளைத் துப்புத் துலக்குகிறார்கள். இந்தக் கொலைகளில் இருக்கும் பொதுவான சில அம்சங்களைக் கோல் கண்டுபிடிக்கிறார். அவை குறித்து ஹார்ட்டிடமும் சொல்கிறார்.
இருவரும் சேர்ந்து அந்த மர்மமான உலகில் பிரவேசிக்கிறார்கள். அப்போதுதான், இதுவரை நடந்ததெல்லாம் ஒரு மிகப் பெரிய மர்மத்தின் சிறிய துணுக்குகள் என்பது புரிய வருகிறது. இப்படித்தான் தொடங்குகிறது ‘ட்ரூ டிடெக்டிவ்’ (True Detective) சீரீஸின் முதல் எபிசோட்.
இரண்டு கில்லாடிகள்! - மார்ட்டின் ஹார்ட், பேசுவதில் விருப்பம் உள்ளவர் என்று தெரிகிறது. ஆனால் ரஸ்டின் கோல் எளிதாகப் பேசும் இயல்பு டையவர் அல்ல. அவர், அவநம்பிக்கை மிகுந்த ஒரு Pessimist. ஆனால், எது வொன்றையும் உள்முகமாகவும் புரட்டிப் போட்டும் கேள்வி கேட்கும் ஒரு introvert. முக்கியமாகத் தனிமை விரும்பி.
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தின் முதுகில் வரையப்பட்டுள்ள ஒரு குறியீடு, சடலம் கிடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படும் சில பொருள்கள், சடலத்தின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் மான்கொம்பு, சடலம் இருக்கும் நிலை ஆகியன, இது சாதாரணக் கொலையாக இருக்க முடியாது என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது.
கொலையின் பின்னணியில் ஒரு சைக்கோ இருக்கலாம். அல்லது தீவிரமான மதவாதிகள் அடங்கிய ஒரு குழு இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில், இந்தக் கொலையின் காரணத்தை விரைவிலேயே கண்டுபிடிக்கவேண்டும் என்கிற பொறுப்பு, மார்ட்டின் ஹார்ட், ரஸ்டின் கோல் ஆகிய இருவருக்கும் பெரும் பணி அழுத்தமாக மாறுகிறது. ஹார்ட், அந்த ஊரின் காவல் துறையில் வெகுகாலமாக இருப்பவர். ஆனால் கோல், அப்போதுதான் அந்த ஊருக்கு வந்திருப்பவர்.
இதற்கு முன்னர் அவர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதெல்லாம் காவல் துறையில் ரகசியமாகவே இருக்கின்றன. ஹார்ட்டுடன் இந்த வழக்கில்தான் கோல் முதன்முறையாகச் சேர்ந்திருக்கிறார். இதனால் தன்னுடன் பணிபுரியும் கோல் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது ஹார்ட்டின் இயல்பான எண்ணம். சிறுகச் சிறுக கோல் பற்றி ஹார்ட் தெரிந்து கொள்கிறார்.
உலகத்தைப் பற்றிய கோலின் எண்ணங்களை அவருடன் பேசும்போது ஹார்ட் அவ்வப்போது கேட்க நேர்கிறது. ஆனால், ஹார்ட்டால் முதலில் கோலின் உலகத்துடன் ஒன்ற முடிவதில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயத்திலும் ஒரு கருத்தை வைத்திருப்பவர் கோல். ஆனால், ஹார்ட் அப்படி அல்ல. பகல்பொழுது முழுவதும் புலன் விசாரணையில் ஈடுபட்டபின் மாலையில் தன்னுடைய
குடும்பத்திடம் போய் ஐக்கியமாகிவிடுவார் ஹார்ட். ஆனால் கோலுக்குக் குடும்பம் இல்லை. அவருக்கு நடந்த சில பழைய நிகழ்வுகளால் அவரது மனம் இறுகிவிட்டிருக்கிறது. 24 மணி நேரமும் வழக்கு பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார், அது பற்றியே விசாரித்தபடியிருக்கிறார்.
தெறித்து விழும் தத்துவங்கள்: திரையில் வரும் கதாபாத்திரங்களும் கதையும் ‘மர்மம்’ என்கிற விஷயத்தில் உள்ளே நுழைந்துவிட்டால், அதைப் பார்க்கும் நமக்கும் அதில் ஓர் ஈடுபாடு வந்துவிடுகிறது. உடனடியாக நாமுமே அக்கதை எப்படிச் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறோம்.
நமது கற்பனைக்குச் சவால்விடும் விதமாகக் கதையின் மர்ம முடிச்சுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக விடுவிக்கும்போது அதைக் கொண்டாடுகிறோம், ‘ட்ரூ டிடெக்டிவ்’ சீரீஸின் முதல் சீசன் உலகெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு அதன் ‘மர்மம்’ என்கிற ஜானர் முக்கியக் காரணம். மற்றொன்று, கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் விதம்.
கோலும் ஹார்ட்டும் பேசிக்கொள்ளவே தேவையில்லை, அவர்களுடைய கதாபாத்திரங்கள் நடந்துகொள்வதைக் கவனித்தாலே அவர்களைப் பற்றி நமக்கு எளிதாகப் புரிந்து விடும். அதுதான் திரைக்கதையின் வெற்றி. மற்றொரு காரணம், பதினேழு வருடங்கள் முன்னும் பின்னும் இந்தக் கதை ஒரே சமயத்தில் பயணிப்பது. கூடவே, இந்த இரண்டு கதாபாத்திரங்களும் தங்களைச் சுற்றியிருக்கும் உலகையும் சமூகத்தையும் கவனித்து இருவருமே பகிர்ந்துகொள்வது. அந்தப் பகிர்தலில் தெறிக்கும் வசனங்கள் அனைத்துமே ஆழமாக எழுதப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, கோல் பேசும் வசனங்கள் இத்தொடரின் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்! “தத்துவங்கள் நிரம்பிய இந்த வசனங்கள், யாரோ ஒரு நபர் போதையில் உளறுபவை அல்ல. மாறாக, தற்காலத்தின் அறிவியலும் தத்துவமும் குற்றங்களும் சந்திக்கும் இடங்களில் எழக்கூடிய சிறந்த ‘observation’கள் என்பது இந்த சீரீஸுக்குத் திரைக்கதை எழுதிய நிக் பிஸ்ஸலாட்டோவின் கருத்து. குற்றவுலகில் மிகப் பொருத்தமாகத் தெறித்து விழும் தத்துவ விசாரணை என்று கொள்ளலாம்.
இத்தொடரின் மற்றொரு சிறப்பு அம்சம், இது அடுத்த சீசன் வரை செல்வதில்லை. இந்த முதல் சீசனின் முதல் எபிசோடில் தொடங்கும் கதை, இறுதி எபிசோடில் முடிந்துவிடுகிறது. அமெரிக்கத் தொலைக்காட்சி சீரீஸ்களில் இத்தன்மை சற்று அபூர்வம். 99 விழுக்காடு தொடர்களில், முதல் சீசனில் தொடங்கும் கதை, இரண்டு, மூன்று, நான்கு என்று ஜவ்வாக இழுக்கப்பட்டு, இறுதி சீசன் வரை தொடரும். அதிலும் அந்த இறுதி சீசனே இரண்டு பாகங்களாக வளர்க்கப்பட்டு, பார்வையாளரின் பொறுமையைச் சோதித்த பின்னரே முடியும்.
அந்த வகையில், ஒரு சீரீஸின் முடிவைத் தெரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் சில வருடங்கள் காத்திருக்க நேரிடும். அதற்குள் பொறுமை போய்விடும், அல்லது அத்தொடர் திராபையாக மாறி விடும். ஆனால் ‘ட்ரூ டிடெக்டிவ்’ அப்படி அல்ல! ‘ட்ரூ டிடெக்டி’வுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. பொதுவாக, எல்லாத் தொடர்களிலும் ஒவ்வொரு எபிசோடையும் வெவ்வேறு எழுத்தாளர் எழுதி, வெவ்வேறு இயக்குநர்கள் இயக்குவர்.
ஆனால் இதில் எல்லா எபிசோட்களையும் எழுதியவர் நிக் பிஸ்ஸலாட்டோ (Nick Pizzolatto) என்கிற ஒரே எழுத்தாளர். அதேபோல், எல்லா எபிசோட்களையும் இயக்கியவரும் ஒருவர்தான். அவர், கேரி ஜோஜி ஃபுகுனாகா (Cary Joji Fukunaka). இவர்தான் கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் படமான ‘No Time to Die’ படத்தை இயக்கியவர். இதற்கு முன்னர் இப்படி வந்தவற்றில் ‘John Adams’ முக்கியமானது.
கதை சொல்லும் இசை: ஒரு தொடரோ அல்லது திரைப் படமோ, கதை தரும் உணர்வைக் கிளர்த்த இசையின் பங்கு மிக முக்கியமானது. அவ்வகையில் ‘ட்ரூ டிடெக்டி’வுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளரும் பாடகரும் ஆஸ்கர் விருது வென்றவருமான T Bone Burnett. கோயன் சகோதரர்களின் ஆஸ்தான இசை கன்சல்டண்ட். ஒரு திரைப்படம் அல்லது சீரீஸுக்கு இசையமைக்கும்போது, அதன் ஜானர் எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த இசையின் அடிநாதம் இருக்கும்.
ஆனால், இதில், கதாபாத்திரங்கள்தாம் இசைக்கு அடிப்படையாக இருக்கின்றன. அப்படித்தான் இசையமைத்திருக்கிறார் பர்னெட். ஏனெனில், கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அவ்வளவு ஆழமாக இசையும் அமைய வேண்டும் என்பது அவரது கொள்கை. கதை நடக்கும் நிலப்பரப்பான லூயிஸி யானா பகுதியின் நாட்டுப்புற இசையுடன் psychedelic rock இசையைக் கச்சிதமாக உள்ளே நுழைத்திருக்கிறார் பர்னெட்.
நிக் பிஸ்ஸலாட்டோ எழுதிய திரைக் கதையைப் படித்துப் பார்த்ததுமே மேத்யூ மெக்கானஹி உற்சாகமாக இதில் நடிப்பதாக ஒப்புக்கொள்ள, ‘ட்ரூ டிடெக்டி’வின் சகாப்தம் தொடங்கியது. அதிலும் மெக்கானஹி நடிப்பதாக இருந்தது வூடி ஹாரல்ஸன் நடித்திருந்த மார்ட்டின் ஹார்ட் கதாபாத்திரம்தான். ஆனால் Cohle கதாபாத்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மெக்கானஹி, ‘கோல் கதாபாத்திரம் தான் எனது முதல் தேர்வு’ என்று பிடிவாதம் காட்டி அதையே பெற்றுக் கொண்டார்.
(சினிமா ரசனை 2.0 தொடர் அடுத்த இதழில் நிறைவடையும்)
- rajesh.scorpi@gmail.com