

1. பாலிவுட்டின் முதல் நிழலுலக சினிமா!
பாலிவுட் சினிமாவில், திரைக்கு வெளியே நீடித்த சிறந்த நட்புகளில் ஒன்று தேவ் ஆனந்த், குரு தத்துடையது. தேவ் ஆனந்த் முதலில் வெற்றிபெற்றால் குருதத் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்றும், குரு தத் முதலில் வெற்றிபெற்றால் தேவ் ஆனந்தை நாயகனாக்கி இயக்க வேண்டுமென்றும் அவர்களிடம் ஒரு ஒப்பந்தமிருந்தது. அந்த ஒப்பந்தத்தை தேவ் ஆனந்தை நாயகனாக்கித் திரைப்படம் தயாரித்ததன் வாயிலாகப் பாதியளவு நிறைவேற்றினார் குரு தத். அந்தப் படத்தில் ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்த நினைத்த நேர்மையான ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை செய்யப்படுகிறார்.
அந்தக் கொலையைத் துப்புத் துலக்கச் சென்று சிக்கலில் மாட்டி விடுபடும் இன்ஸ்பெக்டர் சேகர்தான் தேவ் ஆனந்த். மும்பையின் குற்றவுலகம் மீது வெளிச்சம் பாய்ச்சிய இத்திரைப்படம், வி. கே. மூர்த்தியின் சிறந்த ஒளிப்பதிவுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது. மும்பை நகரம் குறித்த ஓ. பி. நய்யார் இசையமைத்த ‘ஏ தில் ஹை முஷ்கில் ஜீனா யஹான் யே ஹை பாம்பே மேரி ஜான்’ என்ற பாடல் அப்போதைய பாம்பேயின் தேசிய கீதமாக இருந்தது. 1956-ல் வெளியான ‘சி.ஐ.டி’ திரைப்படத்தின் இயக்குநர் யார்?
2. பெயரை மாற்றிய திரைப்படம்
நேர்மையான அதிகாரியான ராமலிங்கம் பணி ஓய்வு பெறும் நாள் அது. தவிர்க்கவே முடியாத பணச் சிக்கல் ஒன்று வருகிறது. அந்தப் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் குறுக்குவழியில் ஒரு வாய்ப்பும் வருகிறது. அதை ராமலிங்கம் ஏற்றாரா, தன் நேர்மையைத் தக்கவைத்தாரா, இதுதான் ‘ஆலயம்’ படத்தின் கதை. அலுவலகத்துக்கு உள்ளேயே எடுக்கப்பட்டு தேசிய விருதையும் பெற்ற இப்படைப்பில் ராமலிங்கமாக நடித்தவர் ‘மேஜர்’ சுந்தர் ராஜன்.
பீம்சிங்கின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்தை அவரிடம் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய திருமலையும் மகாலிங்கமும் இயக்கினார்கள். பிலஹரி ராமன் எழுதிய ‘நெஞ்சே நீ வாழ்க’ நாடகம்தான் இப்படத்துக்கு அடிப்படை. ஜி. விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்த ‘ஆலயம்’ படத்துக்கு டிகே ராமமூர்த்தி இசையமைத்தார். அப்போது நாடகங்களில் நடிகராகப் புகழ்பெற்றிருந்த கோபாலரத்தினம் இந்தப் படத்துக்குப் பிறகு எந்தப் பெயரில் அறியப்பட்டார்?
3. மாறுபட்ட ஆசிரியர்கள் !
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தை ஓவன், வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களைப் பார்த்து வெளியுலகுடன் தொடர்புகொள்ளக் கற்றுக்கொண்ட அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஆவணப்படம் ‘லைஃப், அனிமேட்டெட்’. அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் ரோகர் ரோஸ் வில்லியம்ஸ் 2016-ல் இயக்கிய படம் இது. இந்த ஆவணப்படத்தில், ஒரு ஆட்டிச சிறுவனுக்கு மோக்லி, பீட்டர் பேன் ஆகிய அனிமேஷன் கதாபாத்திரங்களே ஆசிரியர்கள்.
ஆட்டிசச் செயற்பாட்டாளர்கள், ஆட்டிசக் குழந்தைகளிடம் இப்படம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் டிஸ்னி ஸ்டுடியோஸ் ஊழியர்களை நெகிழவைத்த இதில் அனிமேஷன் உத்தியும் பயன்படுத்தப்பட்டது. ஒரு பத்திரிகையாளர் தன் மகனுடனான அனுபவத்தை வைத்து எழுதிய ‘லைப், அனிமேட்டட்: எ ஸ்டோரி ஆப் சைட்கிக்ஸ், ஹீரோஸ் அண்ட் ஆட்டிசம்’ என்ற நூலே இப்படத்துக்கு அடிப்படை. அந்தப் பத்திரிகையாளரின் பெயர் என்ன?
4. மலையாளத்தில் அறிமுகமான கமல்
கேரளத்தின் சிறந்த எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் திரைப்படத்துக்கென்றே எழுதிய கதை ‘கன்னியாகுமரி’. ‘கண்ணும் கறலும்’ மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் ஹாசன் நாயகனாக மலையாளத்தில் முதலில் அறிமுகமான திரைப்படம் இது. சேது மாதவன் இயக்கிய இத்திரைப்படம் 1974-ல் வெளியானது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு சிற்பிக்கும் வளையல் விற்கும் பெண்ணுக்குமான உறவுதான் கதை.
புகழ்பெற்ற வங்காள நடிகை ரிதா பாதுரி கதாநாயகியாக நடித்த இப்படம் முழுமையாக கன்னியாகுமரி கோயிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டது. கன்னியாகுமரியின் இயற்கை அழகை பி.எல். ராய் அழகாகப் படம்பிடித்தார். எம். பி. ஸ்ரீனிவாசனின் இசையை இன்னமும் மலையாள சினிமா ரசிகர்கள் மறக்க இயலாதது. தனது இயற்கையான நடிப்புக்காக கமல் ஹாசன் எந்த விருதை முதல் முறையாகப் பெற்றார்?
5. ஹிட்லருக்குப் பிடித்த மவுனப்படம்
மவுனப் படக் காலம் தொடங்கி பேசும்படம் வரைக்கும் திரைப்பட ஆக்கத்துக்காகப் பேசப்படும் முன்னோடிகளில் ஒருவர் ஆஸ்திரிய இயக்குநர் பிரிட்ஸ் லாங். இவர் இயக்கிய ‘மெட்ரோபொலிஸ்’ மவுனப் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சயன்ஸ் பிக்ஷன் திரைப்படமாகும். 2026-ம் ஆண்டில் மெட்ரோபொலிஸ் நகரத்தின் மேல்தளத்தில் பணக்கார வர்க்கம் ஒன்று அதிகபட்ச உல்லாசத்தில் வாழ்ந்துவருகிறது. அவர்களுக்கான பணிகளையும் சேவைகளையும் செய்து அந்த நகரத்தை இயக்கியபடி ஒரு பாட்டாளி வர்க்கம் பாதாள உலகத்தில் வசித்துவருகிறது. இரு வர்க்கங்களும் காதல் ஒன்றால் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
1925-ம் ஆண்டில் ஐந்து மில்லியன் ரீச்மார்க்ஸ் ஜெர்மன் பணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வரும் கட்டிட செட்கள் க்யூபிஸ்ட் ஓவியங்களிலிருந்து தாக்கம் பெற்றவை. மாயாஜாலம் போலத் திகழும் காட்சிகளுக்காகவும் ஸ்பெஷல் எஃபக்டுகளுக்காகவும் பேசப்பட்ட இப்படம் அக்காலகட்டத்தில் நாஜிகளின் அரசியலுக்குச் சார்பானதாகக் கருதப்பட்டது. ஹிட்லர் தன்னைக் கவர்ந்த திரைப்படம் என்றும் பாராட்டினார். சிதிலமாகிப்போன இந்தப் படத்தின் ஒரிஜினல் பிரதி அர்ஜென்டினாவில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
விடைகள்
1. ராஜ் கோஸ்லா, 2. டைப்பிஸ்ட் கோபு, 3. ரான் சஸ்கிண்ட் 4. பிலிம்பேர், 5. 2008