

“ந
டிகனாக 152 படங்கள், இயக்குநராக 14 படங்கள், 90-களின் தொடக்கத்தில் இருந்து திரைக்கதை, எழுத்து, தயாரிப்பு என்று இந்த சினிமாவில் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதும், வித்தியாசமாக ஏதோ ஒன்றைத் தொட்டுக்கொண்டிருப்பதும் ஒரு அலாதியான விருப்பமாகவே இருக்கிறது” - கண்களை அகல விரித்து, புருவங்களை உயர்த்திப் பேசத் தொடங்குகிறார் ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கி முடித்திருக்கும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். அவருடன் தொடர்ந்து உரையாடியதிலிருந்து...
எந்தவகைப் படம் எடுத்தாலும் அதில் தேசப்பற்று என்ற விஷயத்தைப் புகுத்திவிடுகிறீர்களே?
எந்த மாதிரியான கதையை யோசித்தாலும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் அதில் இருக்க வேண்டும் என்றே சிந்தனை படர்கிறது. அதை எனது முத்திரை என்று எல்லோரும் சொல்லுகிற நாட்டுப் பற்றாகவே இருக்கட்டுமே என்று நானும் இறங்கிவிடுகிறேன். இந்தப் படத்திலும் காதலோடு சேர்ந்து ராணுவப் பின்னணி இருக்கிறது.
‘சொல்லிவிடவா’ படத்தின் கதை என்ன?
1999 –ம் ஆண்டில் நடக்கும் கதை. திரைக்கதைக்கு ஒரு பீரியட் தேவைப்பட்டது. நாயகன், நாயகி இருவரும் ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார்கள். இருவரும் சேர்ந்து பணி நிமித்தமாக வெளியே செல்லும்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களைக் காதலர்களாக மாற்றுகின்றன. அந்தக் காதலோடு சேர்ந்து ராணுவ விஷயத்தையும் தொட்டிருக்கிறேன். என்னுடைய ‘ஜெய்ஹிந்த்’ படத்தை மறக்கடிக்கும் வகையில் ராணுவத்தின் மதிப்பை, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லும் விதத்தில் வித்தியாசமாகக் கையாண்டிருக்கிறேன்.
உங்கள் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்று நடித்திருக்கிறாரா?
மகள் என்பதற்காக ஏதோ வந்துவிட்டு செல்வதைப் போன்ற கதாபாத்திரம் அவருக்குக் கொடுக்கவில்லை. அவரிடம் மூன்று கதைகள் சொன்னேன். முதலில் இந்தக் கதையைத் தொடுவோம் என்று அவரே தேர்வு செய்த கதை இது. அவருக்குச் சவாலான கதாபாத்திரம். முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?
களம் அந்த மாதிரி உருவானது. படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் முகம் காட்டுவேன். அதுவொரு ஆஞ்சநேயர் பாடல்.
‘இரும்புத்திரை’ படத்தில் நீங்கள் வில்லனாமே?
வித்தியாசமான கதாபாத்திரம். அதுவும் புத்திசாலித்தனம் மிகுந்த கதாபாத்திரம். அதற்கு நான்தான் சரியாக இருப்பேன் என்று விஷால் ஆசைப்பட்ட கதாபாத்திரம். 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டோம். இனி வித்தியாசமாக இறங்குவோம் என்று இதில் தொடங்கியிருக்கிறேன். ஒரு படத்தில் வில்லன் என்றால் அதேமாதிரி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க மாட்டேன். அடிப்படையில் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் என்று வகுத்துக்கொண்டதால் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று என்னால் எதிலும் நடிக்க முடிகிறது. அடுத்து பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஒரு கன்னடப் படத்தில் ‘கர்ணன்’ அவதாரம் எடுக்கிறேன்.
உங்களிடம் உதவி இயக்குநராக இருந்த விஷால் இன்று கதாநாயகன் என்பதைத் தாண்டி வளர்ந்திருக்கிறாரே?
நல்ல விஷயம். விஷால் என்னிடம் இருந்த காலகட்டத்தில் அவரது முயற்சிகளைப் பார்த்து நானே அவருடைய அப்பாவிடம், ‘எதிர்காலத்தில் இவர் நல்ல நடிகராக வருவார். நடிக்க அனுப்புங்க?’ என்று கூறியிருக்கிறேன். அதே மாதிரி இன்று அவர் வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்துக்கும் முயற்சிதான் முக்கியம். அது அவரிடம் இருப்பதால் வெற்றி கிடைக்கிறது.
‘இந்தியன் 2’ படத்தைப் போல ‘முதல்வன் 2’ தயாராக வாய்ப்பு உள்ளதா?
இது இயக்குநர் ஷங்கருக்கான கேள்வி.
‘ஆக்ஷன் கிங்’ என்று பெயர் வாங்கியிருந்தாலும் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் நீங்கள் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் நன்கு ரசிக்கப்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா?
எனக்குச் சண்டை எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு காமெடியும் பிடிக்கும். அதனால்தான் போலீஸ், ராணுவம் என்று த்ரில்லர் கதைக் களங்களைக் கொண்ட படங்களில்கூட காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். நான் நடிக்கும் படங்களிலும் காமெடி கொஞ்சம் அதிகம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த ஈடுபாடுதான் இதற்குக் காரணம்.