Last Updated : 23 Feb, 2018 10:47 AM

 

Published : 23 Feb 2018 10:47 AM
Last Updated : 23 Feb 2018 10:47 AM

தரணி ஆளும் கணினி இசை 20: திருட்டுப் பூனைகளும் திரையிசையும்!

ங்கள் அபிமான இசையமைப்பாளரின் பிரம்மாண்டமான லைவ் இசை நிகழ்ச்சிக்குச் செல்கிறீர்கள். 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறீர்கள். டிக்கெட்டுக்காக நீங்கள் கொடுத்த தொகையிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ‘லைசென்ஸ்’ கட்டணமாக இந்தியன் ஃபெர்பாமிங் ரைட் சொசைட்டிக்கு (IPRS - The Indian Performing Right Society) கொடுத்திருப்பார்.

அதை, நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டுப் பாடப்பட்ட பாடல்களின் இசையமைப்பாளர்களுக்கும் அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களுக்கும் ராயல்டி தொகையாகப் பிரித்து அனுப்பிவிடுகிறது லாபநோக்கமற்ற இந்த அமைப்பு. ஆனால், எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி.

இசை நிகழ்ச்சி நடத்துபவருக்கு ஐ.பி.ஆர்.எஸ். பற்றித் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் அல்லது விளம்பரங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கும் இந்த அமைப்பு, நிகழ்ச்சிக்குச் சில தினங்கள் முன்பாக அவர்களைத் தொடர்புகொண்டு நிகழ்ச்சியை நடத்த ‘லைசென்ஸ்’ பெற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளும்.

கண்காணிக்கும் பறவை

கூர்மையான கண்களோடும் காதுகளோடும் வானில் மிக உயரத்தில் பறக்கும் ஒரு பறவையைப் போல் செயல்படுகிறது ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு. உள்நாடு, வெளிநாடுகளில் இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகளில் பாடல்கள் ஒலி, ஒளி பரப்பப்படுவதைத் துல்லியமாகக் கணக்கெடுத்து அதற்கான ராயல்டி தொகையை எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்.

விமானங்கள், கப்பல்கள் உட்படப் பல்வேறு பொதுத் தளங்களில் ஊடகங்களில் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும்பொருட்டு ஒலி, ஒளிபரப்பு செய்யப்படும் அல்லது மேடைகளில் நிகழ்த்தப்படும் பாடல்களுக்கு ராயல்டியை வசூலித்து அதைப் படைத்தவர்களுக்கு அளிக்கும் பணியை இடையறாது செய்துகொண்டிருக்கிறது ஐ.பி.ஆர்.எஸ்.

இன்று ஐ.பி.ஆர்.எஸ்ஸின் தீவிரக் கண்காணிப்பால்தான் இளையராஜா முதல் என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள்வரை ராயல்டியின் பலன் பெரியதோ சிறியதோ எங்கள் கைகளில் வந்து சேரும்போது கண்கள் ஊற்றெடுக்கின்றன. ஐ.பி.ஆர்.எஸ். வழியாக ராயல்டி ஒழுங்குபடுத்தப்படும் முன்புவரை பலனை சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எம்.எஸ்.வி.போன்ற ஜாம்பவான்கள் ராயல்டியின் பலனை அடையாமலே அமரர் ஆகிவிட்டார்கள்.

இந்த அமைப்பின் வழியாக இசையமைப் பாளர்களும் பாடலாசிரியர்களும் ராயல்டியைப் பெற விரும்பினால், படைப்பு தங்களுடையதே என்பதை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பெரும்பாலான கலைஞர்களுக்கு இப்படியோர் அமைப்பு செயல்பட்டு வருவது தெரியாமல் இருக்கிறது. தனி ஆல்பங்களுக்கும் கிராமியப் பாடல் ஆல்பங்களுக்கும் தனியார் விளம்பரங்களுக்கும் ராயல்டி உண்டு.

ஆனால், ஐ.பி.ஆர். எஸ்ஸால்கூடக் கண்காணிக்க முடியாத இணையதளங்கள், இணைய வானொலிகள், திறன்பேசிகளில் பயன்படுத்தும் செயலிகளில் திரையிசை வழிந்தோடுகிறது. இவர்களையெல்லாம் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரக் கால அவகாசம் தேவைப்படும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

யாரெல்லாம் படைப்பாளிகள்?

ஒரு படத்துக்கு இசையமைக்கவும் பாடலை எழுதவும் அதன் தயாரிப்பாளர் தொடக்கத்திலேயே ஊதியம் கொடுத்துவிடுகிறார். அப்படி இருந்தும் பிறகு ஏன் நீங்கள் ராயல்டி கேட்கிறீர்கள் என்று நினைக்கலாம். படத்தின் இசை உரிமையைச் சந்தையில் விற்றுக் கிடைக்கும் தொகை, இசை உள்ளடங்கிய படத்தின் திரையரங்க உரிமையின் விற்பனை வருமானம் ஆகியவற்றைத் தயாரிப்பாளர் எடுத்துக்கொள்வதன் மூலம் அவருக்கு அறுவடையின் முழுப் பலனும் முதலிலேயே கிடைத்துவிடுகிறது.

ஆனால், ராயல்டி என்று நாங்கள் கேட்பது, திரையரங்குக்கு வெளியே மற்ற ஊடகங்களில் திரும்பத் திரும்ப எத்தனைமுறை பாடல் ஒலி, ஒளிபரப்பப்படுகிறதோ அத்தனை முறையும் பத்து பைசா தொடங்கி ஐம்பது பைசா வரையிலான ராயல்டி. ஒரு புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு முதலில் தரும் விலைக்குப் பிறகு மறுபதிப்புகளுக்குப் புத்தகம் விற்க விற்கத் தரப்படும் ராயல்டிபோன்றதுதான் இதுவும்.

திரையிசை என்று வருகிறபோது யாரெல்லாம் படைப்பாளிகள் என்று கேட்கலாம். இயக்குநர் கூறிய ஒரு சூழ்நிலைக்குத் தனது இசைக் கற்பனையின் மூலம் மெட்டை அமைத்து, அதற்கான இசைக் கோவையை உருவாக்கும் இசையமைப்பாளரும் அந்த மெட்டுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வரிகளைத் தனது கற்பனையின் வழியே படைக்கும் பாடலாசிரியரும்தான் தற்போது படைப்பாளிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை முழுமையாக உருவாக்கியபின் பாடகர்கள் அதை இசையமைப்பாளர் விரும்பியபடி பாடிக்கொடுக்கிறார்கள். ஆனால், எங்களையும் படைப்பாளிகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தற்போது பாடகர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

இதுவொருபுறம் இருக்க இன்று ‘திரையிசையில் திருட்டுப் பூனைகளின் (copy cats)நடமாட்டம் இருக்கவே செய்கிறது’ என்று கொதிப்புடன் திருடப்பட்ட பாடல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி,‘உங்களை எப்படி நீங்கள் படைப்பாளிகள் என்று கூறிக்கொள்வீர்கள்?’ என வலைவாசிகள் சோசியல் மீடியாக்களில் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது? இயக்குநர்தான் இசையமைப்பாளரை முடிவுசெய்கிறார். அவரை நம்புகிறார்.

பாடலுக்குக்காண சூழ்நிலையை விளக்கிக் கூறுகிறார். அதாவது பாடலின் சூழ்நிலையைத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளக்கிக் கூறுகிறார். இயக்குநர் கூறியதை எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொள்ளும் தன்மையும் அனுபவமும் இசையமைப்பாளருக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குச் சூழ்நிலையை நம்பகமாகவும் நெருக்கமாகவும் உணரவைத்துவிடும் பாடல் பிறக்கும். ஆனால், பலநேரம் என்ன நடக்கிறது என்றால் இயக்குநரின் விவரிப்பும் – இசையமைப்பாளரின் உள்வாங்கலும் ஒத்திசைவாக அமையாமல் போய்விடுகிறது.

இதனால் பாடலின் சூழ்நிலையை மேலும் விவரித்துக் கூற விரும்பாமல் ஏற்கெனவே இசையமைக்கப்பட்ட ஒரு பாடலின் ‘ரெஃபெரென்ஸை’க் கொடுக்கிறார் இயக்குநர். இப்படிக் கொடுப்பதன் மூலம் தனது எதிர்பார்ப்பு இதுதான் என்பதை இசையமைப்பாளர் எளிதில் புரிந்துகொண்டுவிடுவார் என்று அவர் நினைக்கிறார். இந்த அணுகுமுறையை ஓரளவுக்கு நான் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன்.

ஏனென்றால் அவர் தரும் ரெஃபெரென்ஸில் உள்ள தன்மைதான் இயக்குநரின் எதிர்பார்ப்பு என்று தெரியவரும்போது அதை அடாப்ட் செய்ய வேண்டும் என்றுதான் இசையமைப்பாளர் நினைக்கிறார். இது, இன்று அறிமுகமான புதியவர் தொடங்கி, புகழின் உச்சியில் இருக்கும் இசையமைப்பாளர்வரை, அனைவருக்கும் நடக்கிறது. இப்படித் தரப்படும் ரெஃபெரென்ஸின் உணர்வுநிலையில் இருக்கும் தன்மையை மட்டும் உள்வாங்கி, அதைத் தனது கற்பனையின் வழியாக முற்றிலும் புதிய ஒன்றை இசையமைப்பாளர் தர வேண்டும்.

ஆனால், சில இயக்குநர் ‘இதை அப்படியே பண்ணிவிடுங்கள்’ என்று நிர்ப்பந்திக்கும்போது, அங்கே ‘காப்பி’ ஒரு விபத்தாகிவிடுகிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, பெரிய, சிறிய இசையமைப்பாளர்கள் என்ற வேறுபாடு இன்றி, பலர் இந்த இந்தக் கசப்பான காப்பியை அருந்தியிருக்கிறார்கள். இதில் இயக்குநருக்கும் பாதி பங்கிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்த இடத்தில் (காப்பியில்) வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி காப்பி செய்யப்படும் அந்தப் பாடலுக்கும் மக்கள் அதிரடியான ஆதரவைக் கொடுத்து அதை வெற்றிப்பாடலாக மாற்றிவிடுகிறார்கள். இத்தனைக்கும் அது எந்தப் பாடலின் அல்லது இசையின் காப்பி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். காப்பி செய்தவருக்கு கஷாயம் கொடுக்கும் அதே ரசிகர்கள்தாம் அந்தப் பாடலை வெற்றிபெறவும் வைக்கிறார்கள் என்பது நம்ப முடியாத நகைமுரண்.

பின்புலம் தேவை

இன்று உலமே ஒரு தெருவாகச் சுருங்கிவிட்டது. அலாஸ்காவில் வெளியாகும் ஒரு இசைத் தொகுப்பு அடுத்த சில நிமிடங்களில் இங்கே பிரபலமாகிவிடுகிறது. இங்கே உருவாகும் இசை அங்கே கிடைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நேரடியான காப்பி என்பது இசையமைப்பாளரிடம் கற்பனை வளம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. கற்பனை வளம் மிக்க இசையமைப்பாளரிடம் ஒரு கனமான பின்புலம் இருக்கும் என்பது என் அவதானிப்பு. எம்.எஸ்.வி. என்றால் நமது சாஸ்திரிய சங்கீதத்தின் சாரத்தையும் மேற்கத்திய இசையின் தாக்கத்தையும் உள்வாங்கிச் சரியான கலவையில் கொடுத்தவர்.

கிராம வாழ்வியலின் ஆன்மாவையும் அங்கிருந்து கிடைக்கப்பெற்ற நாட்டார் இசையையும் அதன் ஆன்மாவையும் தனது பின்புலமாகக் கொண்டவர் இளையராஜா. ஏ.ஆர். ரஹ்மானோ சூபி இசை மரபின் துடிப்பையும் டிஜிட்டல் இசையின் நவீனத்தையும் பின்புலமாகக் கொண்டவர். ஆனால், இன்று இசையமைக்க வருகிற பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்குப் பின்புலமோ அடையாளமோ இல்லை.

இதனால் அவர்கள் எதைநோக்கிப் பயணிக்கிறோம் என்ற இலக்கின்றி, அந்தந்த நேரத்துக்கான ‘ஃபாஸ்ட் புட் இசையைத் தந்துவிட்டுச் செல்கிறார்கள். அந்த நேரத்துக்கு இனிக்கிற இசையாக அது இருப்பதால் அதன் ஆயுள் மிகக் குறுகியது. உதாரணத்துக்கு ‘ஒய் திஸ் கொலவெறி பாடலை?’ எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை சிகரம் தொட்ட எத்தனையோ இசைப்பாளர்களுக்குக் கிடைக்காத உலக வெற்றி அந்தப் பாடலை உருவாக்கிய அறிமுக இசையமைப்பாளருக்குக் கிடைத்தது.

உலகமே அதைக் கொண்டாடியது. அதை முணுமுணுக்காத வாய்களே இல்லை. ஆனால், அத்தனை ஹிட்டான அந்தப் பாடலை இன்று எத்தனைபேர் திரும்பவும் விருப்பத்துடன் கேட்டு ரசிக்க விரும்புகிறார்கள் என்று பார்த்தால், பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். அதுபோன்ற பாடல்களை ஏன் திரும்பக் கேட்க விரும்புவதில்லை என்ற காரணத்தை ரசிகர்களே சொல்லட்டும். கொலவெறி பாடலை திரும்பக் கேட்க விரும்பாததற்கு அதில் இடம்பெற்ற வரிகளும் ஏன் மொழியும் ஒரு காரணம்தான்.

அந்த வகையில் பாடலாசிரியரின் பங்கு வார்த்தைகளைக் கொண்டு பம்மாத்து செய்வதல்ல என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x