

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் மிக வலுவாக நிலை நிறுத்திக்கொண்ட பன்னாட்டு ஓடிடி தளம் அமேசான் பிரைம் வீடியோ. இது தொடக்கத்தில் இந்திய மொழித் திரைப்படங்களை, திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வாங்கி வெளியிட்டு வந்தது. அந்த நிலையிலிருந்து ஒருபடி முன்னகர்ந்து கடந்த ஆண்டு முதல் தனது ஓடிடி தளத்துக்கென்று அசலான உள்ளடக்கங்களை, இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி களில் தயாரித்து வெளியிட ரூ.700 கோடிக்குக் குறையாமல் செலவிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024இல் மொத்தம் 70 புதிய, அசலான படைப்புகளை வெளியிட இருப்பதாக அப்படைப்பு களின் முன்னோட்டங்களுடன் அறிவித்திருக்கிறது. அவற்றில் பத்துக்கும் அதிகமான தமிழ் இணையத் தொடர்களும் ஓடிடி திரைப்படங்களும் அடங்கியுள்ளன. தவிர இந்த 70 படைப்புகளையும் மொழியைத் தெரிவுசெய்து இந்தியாவின் பல மொழிகளில் காணலாம்.
ராம் சரண் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி
ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' என்கிற அரசியல் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவியின் மகனும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்களில் ஒருவருமான ராம் சரண். இந்தப் படத்தைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை, விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். இப்படத்தை எழுதி, இயக்குபவர் புச்சி பாபு சனா. இவர், விஜய்சேதுபதி தெலுங்கில் நேரடியாக நடித்து வெற்றிபெற்றிருந்த 'உப்பென்னா' என்கிற படத்துக்காக தேசிய விருதை வென்றவர். பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளர். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் ராம் சரணுக்கு ஜோடி ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர்.
இவர் வேறு விஜய் ஆண்டனி!
படத்தின் அதிரடியான தலைப்புகள், உள்ளடக்கம், அமைதியான ஆனால் ஈர்க்கும் நடிப்பு எனத் தனது நட்சத்திர வெளியை அமைத்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. அவரது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள புதிய படம் 'ரோமியோ'. படத்தின் தலைப்புக்கு ஏற்ப இதுவரை ரசிகர்கள் கண்டிராத முற்றிலும் புதிய விஜய் ஆண்டனியை இதில் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார் விநாயக் வைத்தியநாதன். இவர் குறும்படங்களின் வழியாகக் கவனம் பெற்றவர். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது. விஜய் ஆண்டனியைப் போலவே இப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மிருணாளினி ரவி. மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.