

“காட்டு யானைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளைக் கொண்டு எந்தத் திரைப்படத்தையும் என்னால் நினைவுகூர முடியவில்லை" என்று கானுயிர் பற்றிய ஒரு கட்டுரையில் மூத்த எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் குறையை ‘போச்சர்’ (வேட் டையாடுபவர்) என்கிற மலையாள வலைத்தொடர் போக்கியிருக்கிறது.
2015இல் மலையாள மனோரமா பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வெளிவந்து கேரள மாநிலத்தை உலுக்கிய பெரும் யானைத் தந்தக் கடத்தல், தொடர் யானைக் கொலைகள் தொடர்பான நிகழ்வை கதைக் களமாகக் கொண்டு, அமேசான் பிரைமில் 8 அத்தியாயங்களுடன் முதல் சீசன் வெளிவந்திருக்கிறது.
மே 2015ல் அருக்கு என்பவர் கேரள வனத்துறை அலுவலகத்தில் ‘அப்ரூவ’ராகத் தாமாகவே முன்வந்து சரணடை கிறார். அந்த வனப்பகுதியில் நிகழ்ந்த தொடர் யானை கொலைகள், தந்தக் கடத்தல் ஆகியவற்றில் தான் எவ்வாறு பங்காற்றினேன் என்று விவரிக்கத் தொடங்குகிறார். அவரது வாக்குமூலம், ஒரு மெல்லிய திரியில் சின்னத் தீப்பொறி போல் தொடங்கும் விசாரணை, கேரள வனத்துறையை மட்டுமல்லாமல் இந்தியக் கானுயிர் சரித்திரத்தையே உலுக்கிப் போடுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த மிகப்பெரிய யானைத் தந்த வேட்டையின் சோதனைகளின் முழுப் பின்னணி யையும் தொடர் விவரித்துச் செல்கிறது. இதையே ‘போச்சர்’ என்னும் பரபரப்பான வலைத்தொடராக, எம்மி விருது வென்ற இயக்குநர் ரிச்சி மேத்தா சுவாரஸ்யம் குன்றாமல் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கானுயிர் பாதுகாப்பு என்பதை வெறுமனே கேரள மாநில அளவில் சுருக்கிவிடாமல், கோவா, டெல்லி என மற்ற பகுதிகளின் வனத்துறையுடன் காவல் துறையையும் இணைத்து, இதை ஒரு தேசியப் பிரச்சி னையாக வெகு அழகான பின்னல் திரைக்கதையில் மையப்படுத்தியிருக்கின்றனர்.
ஒவ்வொரு காட்சியின் தொடக்கச் சட்டகத்தையும் ஏதோ ஒரு விலங்கின் அசைவைக் கொண்டு தொடங்குவது ஈர்க்கிறது. உயிர்களின் வசிப்பிடத்தைதான் நாம் மனிதர்களின் வசிப்பிடமாக மாற்றி ஆக்கிரமித்ததை, ஒவ்வொரு காட்சியும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஓர் ஆவணப்படமாகச் சுருங்கியிருக்க வேண்டிய, தட்டையான ஒரு விசாரணையை, ஒரு விறுவிறுப்பான புலனாய்வு திரைக்கதை வடிவமாக எழுதி, அதில், அதிவேகமாகச் சம்பவங்களைக் கடத்தியிருக்கிறார் இயக்குநர். கதைக்களத்தின் அடிப்படை மொழியாக மலையாளம் இருந்தாலும் இந்தி, ஆங்கிலம், வங்காளம் எனக் கதை மாந்தர்களின் மொழிகளில் இயற்கைக்கு நாமிழைத்த துரோகத்தைச் சித்தரிக்கிறது தொடர். அதுவே ஒரு தீவிரப் பிரச்சினையின் ஆழத்தையும் புரிதலையும் தந்து, அதன் பரந்த தளத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்றடைய உதவியிருக்கிறது.
உண்மையான காட்டிலும் கான்கிரீட் காட்டிலும் வாழும் ஐந்தறிவு - ஆறறிவு விலங்குகளுக்கு இடையேயான சிக்கல்களைத் தொடக்கத்தில் தொடு கிறது. மேலும், விசாரணையின் போக்கில் குற்றத்தின் பின்னணி, அதில் ஈடுபடும் மனிதர்களின் அகச்சிக்கல்கள், அவர்களின் பொருளாதாரச் சிக்கல்கள், வனத்துறை - காவல் துறையின் அதிகார எல்லைகள், புரையோடிய அடக்குமுறை என ஆறறிவர்களின் உளவியலை, ஒரு ஈக்கோ த்ரில்லர் வகைத் தொடராக மிக வெளிப்படையாகப் பேசுகிறது.
கானுயிர் பாதுகாப்பின் முக்கியத் துவம் உணராத குற்றவாளிகளின் உறவினர் ஒருவர், “அவ்வளவு யானைகள் கூட்டத்தில் ஒரு யானை கொல்லப்படு வதால் என்ன ஆகிவிடப்போகிறது?” என்று கேட்பார். அதற்கு அதிகாரி ஆலனாக வரும் ரோஷன் மேத்யூ சொல்லும் பதில் மிகவும் முக்கியமானது. "இந்த பூமியில் ஒவ்வொரு உயிரும் முக்கியம்". அதையே, இத்தொடரும் அழுத்தம் திருத்தமான திரைமொழியில் பதிவு செய்திருக்கிறது.