திரை விமர்சனம்: சொல்லிவிடவா

திரை விமர்சனம்: சொல்லிவிடவா
Updated on
2 min read

கார்கில் போர் நடந்த காலகட்டத்தில் (1999) நடக்கும் கதை. நாயகன் சந்தன் குமார், நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் இருவரும் டிவி செய்தியாளர்கள். எலியும் பூனையுமாக மோதிக்கொள்ளும் இவர்கள், செய்தி சேகரிப்பதற்காக கார்கில் போர்முனைக்கு செல்ல நேரிடுகிறது. விமானங்களின் குண்டுமழை, இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகளின் இடைவிடாத வெடிச் சத்தங்களுக்கு நடுவே, போர்க்களத்தில் இவர்கள் இடையே காதல் மலர்கிறது. ஐஸ்வர்யா அர்ஜுன் ஏற்கெனவே நிச்சயமானவர் என்பதால், காதலை வெளியே சொல்லமுடியாமல் தவிக்கின்றனர். யுத்த களத்தில் இந்திய வீரர்களின் தியாகம் வென்றதுபோல, இவர்களது காதல் வென்றதா என்பது மீதிக் கதை.

படத்துக்கு கதை, திரைக்கதை, வச னம் எழுதி இயக்கியுள்ளார் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு என்றே கதையையும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். நாயகன் சந்தன் குமார் ஆக்சன் காட்சிகளில் ஈர்க்கிறார். சண்டைக் காட்சிகளில் உடலுக்கேற்ற முறுக்கும், வேகமும் அவரிடம் இருக்கின்றன. நடிப்பிலும் தேறிவிடுகிறார்.

அழகு பதுமைகளாக மட்டுமே நாயகிகள் வந்துபோகும் படங்களுக்கு மத்தியில், ஐஸ்வர்யாவுக்கு மிக வலு வான கதாபாத்திரம். அடுக்கடுக்காக வசனம் பேசும்போதும், காதல் காட்சிகளில் கண்களில் ஜாலம் காட்டுவதிலும் ஜமாய்த்திருக்கிறார். ஆனால், நன்கு தமிழ் கற்றுக்கொள்வது நல்லது.

போண்டா மணி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி, மனோபாலா என நகைச்சுவை பட்டாளமே இருந்தாலும் நகைச்சுவை ஏரியா மிகவும் பலவீனமாக இருக்கிறது.

நடிகர்களின் தோற்றத்தை முன்னிறுத்தி செய்யப்படும் தரமற்ற கிண்டலும், கேலியும்தான் முதல் பாதி முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. போக்குவரத்து காவலரிடம் சந்தன் - ஐஸ்வர்யா பேசும் இடம் மட்டும் குபீர்!

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, கார்கில் யுத்த களத்துக்குள் சென்றதும் சூடுபிடிக்கிறது.

போர் காட்சியமைப்புகள் சிலிர்ப்பூட்டுகின்றன. ஊடகவியலாளர்கள் பதிவு செய்த கேசட்டை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது, லேண்ட்லைன் போனுக்கு காத்து நிற்பது என ஒவ்வொரு காட்சியும் 1999-ஐ நினைவூட்டும் வகையில் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது.

‘‘மிலிட்டரிகாரன்னா சரக்கும், மளிகை சாமானும் சலுகை விலையில கிடைக்கும்னு நிறைய பேரு நினைச்சுட்டு இருக்காங்க. வீரர்களோட தியாகத்தை எடுத்துக் காட்டணும்னுதான் வந்தோம்’’ என நாயகன் வசனம் பேசுவது போன்ற காட்சிகளில் தேசப்பற்றை கடத்துகிறார் இயக்குநர் அர்ஜுன்.

அவர் சில காட்சிகளிலாவது வரு வார் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஒரு பாடல், கிளைமாக்ஸில் லேசான தலைகாட்டல் என்று முடித்துக்கொண்டு, இயக்கத்தை மட்டுமே கவனித்திருக்கிறார். ‘ஜெய் ஹனுமந்தா’ பாடலில், தான் கட்டிய அனுமன் கோயிலில் ஆடுகிறார். வேகமும், இளமைத் துள்ளலும் அவரிடம் அப்படியே இருக்கின்றன.

மகனுக்கு பாசத்தை மிஞ்சி, தேசத்தை காட்டி வளர்த்த பிரகாஷ்ராஜ், போர்க்களத்தில் காதலிக்கு கடிதம் எழுதும் வீரர், போர்க்களத்துக்கு செல்லும்போதும் நம்பிக்கை யோடு பிறந்தநாள் கொண்டாடுவது, ராணுவ வீரர் சிரித்துக்கொண்டே இறப்பது.. என படத்தின் பின்பாதியில் காதலை ஓவர்டேக் செய்கிறது தேசப்பற்று. ஜெசி கிஃப்ட் இசையில் பாடல்கள் கேட்கும் விதத்தில் உள்ளன. போர்க்காட்சிகளில் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

படத்தின் சில காட்சிகள் மிக நீளமாக இருப்பது சலிப்பூட்டுகிறது. சில காட்சிகள் மெதுவாக நகர்வதும் நாடகத்தன்மையுடன் உள்ளது. இன் றைய இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சில நுட்பங்களை புகுத்தியிருந்தால் ‘சொல்லிவிடவா’ வெகுவாகவே ஈர்த்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in