பாடல்கள் செய்யும் மாயம்: முன்னோட்டம் செய்யும் மேஜிக் - பாகம் 2

பாடல்கள் செய்யும் மாயம்: முன்னோட்டம் செய்யும் மேஜிக் - பாகம் 2
Updated on
3 min read

ஒரு படத்தின் முன்னோட்டம் (அதன் முதல் விளம்பரம், முதல் டீஸர் / டிரைலர், பாடல்கள், அதன் உருவாக்கம்) மூலம் படம் வெளிவரும் முன் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கடந்த வாரம் எழுதியிருந்தேன். அதில் மூன்றாவதாகச் சொன்ன பாடல்களும் அதன் உருவாக்கமும் எவ்விதத்தில் மிக முக்கியமானதென இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

11 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ‘டைட்டானிக்’ படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஒரு விழாவில் பேசும்போது,“இந்த விருதுகள் படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னரையே சாரும்” என்றார். “நான் ஒரு கப்பலை மட்டுமே உருவாக்கினேன். அதற்கு இசை மூலம் உயிர் கொடுத்தது ஹார்‌‌னர்” என்றார். ‘டைட்டானிக்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு இசை ஒரு முக்கியக் காரணம் என்று அதன் இயக்குநரே சொன்னது, ஒரு படத்துக்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

மைனா, கும்கி போன்ற பெரிய வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பிரபு சாலமன் ஒரு விழாவில் சொன்னார், “எவ்வளவுதான் நல்ல படம் எடுத்திருந்தாலும், இசைதான் நம்மை ஆக்கிரமித்துத் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்போது, நம் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. இசை அவ்வளவு முக்கியமான ஒரு பங்கைத் திரைப்படங்களுக்கு ஆற்றுகிறது. இசை சரியாக வந்துவிட்டால், ஒரு படத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிடுகிறது” என்றார். இது எத்தனை அனுபவபூர்வமான உண்மை.

பேசும் படம் ஆரம்பித்த 1931 முதல், பாடல்கள் இல்லாமல் வந்த தமிழ்ப் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 83 வருடங்கள் கடந்தும், பாடல்களும் அதன் காட்சி அமைப்பும் / உருவாக்கமும் படத்தின் தரத்தைப் பற்றிய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் படம் வெளிவரும் முன்பே ஏற்படுத்தி, ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

பிரபு சாலமனின் மாபெரும் வெற்றிப் படமான கும்கி இதற்கு உதாரணம். இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிப் பரவலாகப் பேசப்பட்டுப் படத்திற்கு மாபெரும் ஓபனிங் வசூலைத் தந்தன. பாடல்கள் எவ்வாறு ஒரு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து, பாடல்கள் உருவாக்குவதற்குக் குறைந்தது 6 முதல் 12 மாதங்கள் எடுத்துக்கொண்டு சிறப்பான பாடல்களை இசையமைப்பாளருடன் சேர்ந்து வெளிக்கொண்டு வருகிறார்.

அன்றைய திரையிசை

பேசும் படங்கள் எடுக்க ஆரம்பித்த பின், தமிழ்ப் படங்கள் பேசியதைவிடப் பாடியதுதான் அதிகம். 15 முதல் 55 பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றன. பாடல் காட்சிகள் மூலமாகவே இயக்குநர்கள் கதையை நகர்த்திச் சென்றனர். பாடல்களின் ஆதிக்கம் 1950-களில் குறைய ஆரம்பித்து, வசனங்களின் ஆதிக்கம் தொடங்கியது. அந்தக் காலகட்டத்திலும் குறைந்தது 5 முதல் 7 பாடல்கள் இடம்பெற்றன. இன்றைக்கும் அதே நிலைமை தொடர்கிறது.

1950-கள் வரை நன்றாகப் பாடத் தெரிந்த நடிகர்கள் கதாநாயகர்களாக ஜொலித்தார்கள். 1950-க்குப் பின் இந்த நிலை மாறியது. 1950 முதல் 1970-கள்வரை தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருமே, பாடல்கள் மீது தனிக் கவனம் செலுத்தியதால்தான், இன்று நம்மிடையே பல மறக்க முடியாத பாடல்கள் உள்ளன.

காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், கொள்கைப் பாடல்கள் எனப் பல விதங்களில் அவர்களின் பாடல்கள் பிரிக்கப்பட்டு இன்றும் பிரபலமாக உள்ளன. எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வர் ஆனதற்கு, அவர் படங்களின் பாடல்கள் ஒரு பெரிய பங்கு வகித்தன என்று சொன்னால் அது மிகையில்லை.

கமல், ரஜினி காலகட்டம்

1980-களில் தொடங்கிய ரஜினிகாந்த், கமல் ஹாசன் இருவரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. இருவருமே பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 30 வருடங்களுக்கு மேல் இவர்கள் இருவரும் நினைவில் நிற்கும் பாடல்களைத் தங்கள் படங்களில் கொடுத்துவருகின்றனர்.

பாடல்கள் மூலம் கதை சொன்னவர் கே. பாலசந்தர். ‘கேள்வியின் நாயகனே’, ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்…’, ‘இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்…’ எனப் பல பாடல்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன.

1980-கள்வரை எம்.எஸ். விஸ்வநாதனின் இசை ஆதிக்கம் என்றால், அவருக்குப் பின் இளையராஜாவின் இசை ஆளுமை தொடங்கி, இன்றும் தொடர்கிறது. 1990-களில், ஏ.ஆர். ரஹ்மான் புது வித இசையுடன் அறிமுகமாகி, 20 வருடங்கள் கடந்தும், முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் இசையமைப்பதாலேயே ஒரு படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகிவிடுவதையும் காண்கிறோம்.

இன்றும் சுண்டியிழுக்கும் இசை

சமீப காலங்களில், பல புதுவகை சினிமாக்கள் தமிழில் வர ஆரம்பித்தாலும், அவற்றிலும், பாடல்கள் பிரமாதமாக அமைந்து பேசப்பட்டு, அப்படங்களின் வெற்றிக்குத் துணை புரிந்திருக்கின்றன. அட்டகத்தி – ஆசை ஒரு புல்வெளி, பீட்சா – மோகத்திரை மூன்றாம் பிறை, சூது கவ்வும் – காசு பணம் துட்டு மணி, நேரம் – பிஸ்தா, தெகிடி – விண்மீன் விதையில், முண்டாசுப்பட்டி – ராசா மகராசா, ஜிகிர்தண்டா – கண்ணம்மா கண்ணம்மா எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

சமீபத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்று, படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினது.

நல்ல பாடல்கள், பார்வையாளர்களைத் திரையரங்கினுள் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் கொண்டுவர முடியும். அவர்கள் வந்த பின், அப்படம் ஓரளவுக்காவது நன்றாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் பாடல்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படங்கள், ஏமாற்றத்தை ஏற்படுத்தும். சிறப்பான பாடல்களைக் ஒரு படத்துக்குப் பெரிய பலம்.

ஆனால், அதுவே படத்தின் வெற்றியை உறுதி செய்ய முடியாது. நல்ல திரைக்கதையுடன், நல்ல பாடல்களும் அமையும்போது, வெற்றி பெரிதாகிறது (சமீப உதாரணங்கள்: வேலை இல்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா).

120 முதல்170 நிமிடங்கள் திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்கள், குறைந்தது 20 முதல் 25 நிமிடங்கள் பாடல் காட்சிகளில் செலவிடுகிறார்கள். இவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு நன்றாக இருப்பது அவசியம். இடைவெளியை நிரப்பும் எண்ணத்தோடு இல்லாமல், அவசியத்தோடும், தெளிவான நோக்கத்தோடும், கதையை நகர்த்தும் முக்கியக் கருவியாகவும் பாடல்கள் இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்கள். ஒரு முறை அவ்வாறு வெளியே சென்று வந்தால், படத்துடன் அவர்களின் ஐக்கியம் குறைய ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே சொன்னதுபோல, ஒரு படத்தின் முன்னோட்டமான முதல் விளம்பரம், முதல் டீஸர் / டிரைலர் மற்றும் பாடல்களும் அதன் உருவாக்கமும், ஒரு படத்தின் சிறப்பான ஓபனிங் வசூலுக்கு உறுதுணை செய்கின்றன. இந்த மூன்றிலும் கவனம் வைத்துச் செயல் புரிந்தால், தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், வசூல் வெற்றியைச் சுவைக்க முடியும்.

தொடர்புக்கு dhananjayang@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in