

மோகன் பாபு, மோகன்லால், பிரபாஸ், சரத்குமார், பிரம்மானந்தம் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப் பிரபலங்கள் இணைந்து நடிக்க, நாயகனாக விஷ்ணு மஞ்சு நடித்து வரும் பான் இந்திய புராணக் காவியத் திரைப்படம் ‘கண்ணப்பா’. ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மஹாசிவராத்திரி நாளில் இப்படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் விஷ்ணு மஞ்சு, வில்லும் அம்பும் ஏந்திய நிலையில், ஒரு அருவியிலிருந்து வெளிப்படும் வேடனாக இலக்கைக் குறிவைத்து அம்பை எய்திடத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது.
பரபரப்பு வசனம்! - அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இசையமைத்துள்ள படம் ‘ரெபல்’. அடுத்த வெள்ளியன்று திரையரங்கு களில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
ட்ரைலரின் இறுதியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ், “மத்தவங்க ஜெயிக்கிறதுக்காக விழுந்த ஒவ்வொரு தமிழனுடைய ஓட்டும், இனிமேல் ஒரு தமிழனுக்காக மட்டும்தான் விழணும்” என்று பேசியுள்ள வசனம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
எடுத்ததுமே 2 படம்! - கிரிஷ் ஏ.டி. என்கிற இயக்குநரின் படமாகக் கடந்த இரு வாரங்களுக்கு முன் மலையாளம், தெலுங்கில் வெளியாகி கோடிகளை அள்ளிக்கொண்டிருக்கிறது ‘பிரேமலு’ மலையாளப் படம். அது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகும் கேரளப் பெண் மமிதா பைஜூ.
இவர், ஃபகத் ஃபாஸில், நிவின் பாலி தொடங்கிப் பல முன்னணிக் கதாநாயகர்களுடன் 10 படங்களில் நடித்து முடித்துவிட்டார். ‘பிரேமலு’ படத்துக்கு முன்பே, ‘ரிபெல்’ தமிழ்ப் படத்தில் நடித்து விட்டார். இப்போது இந்த இரண்டு படங்களும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின்றன. எடுத்த எடுப்பிலேயே இரண்டு படங்களின் வழியாகத் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார்.