

ஜாஸ் வீடன் இயக்கிய ‘ஃபயர் ஃப்ளை’ (Firefly) தொலைக் காட்சித் தொடரின் கதைக் களம் என்ன, அதில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவை என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். அந்தத் தொடரில் வெளியே தெரிந்திராத சுவாரஸ்யமான விஷயங்களை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
‘ஃபயர் ஃப்ளை’ சீரீஸ் துரதிருஷ்ட வசமாக ஒரே ஒரு சீசன் தான் ஒளிபரப்பப்பட்டது. அதில் பதினைந்து எபிசோடுகள் உள்ளன. அதன்பின் ஃபாக்ஸ் (FOX TV) தொலைக்காட்சியால் இந்த சீரீஸின் ஷோ ரத்து செய்யப்பட்டது. 2002, 2003இல் இது ஒருமுறை ஒளிபரப்பப்பட்டு முடிந்தபின், டிவி சீரீஸ் ரசிகர்களிடம் மாபெரும் எழுச்சி கண்ட சீரீஸ் இது.
இன்றுவரை இதற்கு வெறிபிடித்த ரசிகர்கள் உள்ளனர். ‘ஃபயர்ஃப்ளை’ என்று தலைப்பு இருந்தாலும் இதற்கு ரசிகர்கள் வைத்த தலைப்பு ‘Browncoats’. இந்த சீரீஸ் ரசிகர்கள் இன்னமும் படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன், இதன் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பணம் போட்டு ஒரு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் பல வருடங்கள் ஈடுபட்டனர். அப்படித் தொடங்கும் நிறுவனத்தின் மூலம் மறுபடி ‘ஃபயர்ஃப்ளை’ சீரீஸை தொடர்ந்து எடுக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.
விண்வெளியிலும் பாரபட்சம்: ‘ஃபயர்ஃப்ளை’ வகை விண்கலங் களில் ஒன்றுக்கு (விண்கலத்தின் பெயர்: Serenity) கேப்டனாக இருக்கும் மால்கம் ரேய்னால்ட்ஸ், தனது விண்கலத்தைப் பயன்படுத்தி, கோள் விட்டுக் கோள் கள்ளக் கடத்தல் வேலைகளில் ஈடுபடும் நபர். அவரைச் சுற்றி 6 முக்கிய கதாபாத்திரங்கள் எனப் பார்த்தோம். கதை நடப்பது 2517இல். இந்தக் காலகட்டத்தில் பூமியிலிருந்து பல்வேறு கோள்கள், பால்வீதிகள் என மனிதக் குடியேற்றங்கள் நடந்து விட்டன. அண்டவெளியைச் சீனாவும் அமெரிக்காவும் இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தன.
இந்தச் சீரீஸில் வரும் புதிய அண்ட வெளியில் பல்வேறு கோள்களுக்கும் நிலாக்கள் இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இப்படிக் குடிபெயர்ந்த மனிதர்கள், அந்த அண்ட வெளியின் சூரியக்குடும்பத்தின் மத்தியக் கோள்களை மட்டும் தங்களுக்கேற்ற வாறு மாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். அந்தச் சூரியக் குடும்பத்தின் எல்லை யில், மிக மிக வெளியே இருக்கும் சில கோள்களுக்கு அரசாங்கத்திலிருந்து எந்தவித உதவியும் கிடைக்காமல், உணவுப் பற்றாக்குறையால் பிணந் தின்னிகளாக மாறி விட்ட மனிதர்களும் அங்கே உள்ளனர்.
விளைவாக எல்லையோரக் கோள்களின் மீது இவர்களது கட்டுப்பாடு மிகக்குறைவு. இதனால் மக்களின் வாழ்க்கை முறை எப்படி அமைந்தது என்றால், மத்தியக் கோள்களில் இருப்பவர்கள் செல்வச்செழிப்புடனும் தொழில் நுட்ப வளர்ச்சியால் விளைந்த புதிய உலகின் அவ்வளவு நன்மைகளையும் அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
எல்லையோரக் கோள்களில் இருப்பவர்களோ ஏழை களாக, சமூக விரோதிகளாக, முந்தைய கௌபாய் பாணியில் வாழ்பவர் களாகப் பின்தங்கிவிட்டார்கள். உதாரணத்துக்குப் பல கோள்களில் இன்னமும் குதிரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மரியாதைக்குரியவர்கள்: இத்தகைய உலகில், மொத்தம் நாற்பதாயிரம் Firefly ரக விண்கலங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த சீரீஸின் நாயகனுடைய Serenity விண்கலம். அந்த விண்கலத்தில் விமானியாக ஹோபான் வாஷ்பர்ன், பழுது நீக்கும் நிபுணராக கேய்லீ, கேப்டனின் தளபதியான ஸோயி, விண்கலத்தின் பாதுகாவலனாக ஜேய்ன் காப் என்கிற அடியாள். இவர்களோடு ஆறாவதாக வந்து சேரும் இனாரா ஒரு பாலியல் தொழிலாளிப் பெண்.
அண்டவெளியில் பாலியல் தொழிலாளிகளை ‘Companion’ என்று அழைக்கிறார்கள். இந்தக் கதை நடக்கும் காலத்தில் இந்த கம்பானியன்கள் என்கிற பெண்கள் மரியாதைக் குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த Serenity விண்கலத்தின் இரண்டு துணைக்கலன்களில் ஒன்றை வாடகைக்குப் பயன்படுத்துபவளாக இந்த இனாரா இருக்கிறாள்.
இவள் இருப்பதால் கேப்டன் மால்கமின் கடத்தல் வேலைகள் சுமுகமாக நடக்கின்றன. காரணம், ஒரு companion இருக்கும் விண்கலத்துக்கு மரியாதை அதிகம். ஆதலால் பரிசோதனைகள் அவ்வளவாக இருக்காது.
இந்த முதல் ஆறு கதாபாத்திரங்களுடன் துப்பாக்கியை நன்றாகக் கையாளத் தெரிந்த பாதிரியார் ஒருவரும் அவருடன் மேலும் இருவர் வந்து சேர்ந்துகொள்ள, நகைச்சுவை வழிந்தோடும் அண்டவெளியின் ‘வெஸ்டர்ன் உலக’மாக மாறிவிடுகிறது இந்த சீரீஸ்.
கேப்டனின் எள்ளல் குணம்: ‘அவெஞ்சர்ஸ்’ படத்தைப் போலவே இதிலும் இந்த ஒன்பது பேருக்குமே ஒருவருடன் மற்றவர்கள் பழகுவதில் பல பிரச்சினைகள். கேப்டன் மால்கம் ஒரு தலைக்கனம் பிடித்த ஆள் (டோனி ஸ்டார்க் போல). இருந்தாலும், தனது குழுவில் அனைவரையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் நபர். இவருடன் இருக்கும் அடியாள் ஜேய்ன், ஒரு முட்டாள்.
அவனுக்கு இந்தக் குழுவில் இருக்கும் பலரையும் பிடிக்காது (ஹல்க் போல). பழுதுநீக்கும் நிபுணராக இருக்கும் கேய்லீ, அனைவரின் மீதும் பாசத்துடன் இருப்பவள். எப்போதும் புன்னகையுடன் நடமாடும் பெண். விமானி வாஷ்பர்னோ ஒரு தமாஷ் பேர்வழி. கேப்டனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஸோயி, கேப்டனின் மனைவி.
பாலியல் தொழிலாளி இனாரா மிகவும் இனிமையான பெண். கேப்டன் மால்கமை இவளுக்குப் பிடிக்கும். கேப்டனுக்கும் இவளைப் பிடிக்கும். ஆனால், இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
இந்த ஆறு பேரின் உலகத்துக்குள் வந்து நுழையும் பாதிரியாருடன் வந்த இருவர், ஓர் அண்ணன் - தங்கை. இதில் தங்கை ஒரு பரிசோதனைக்கூடத்திலிருந்து தப்பித்து வந்தவள். அவளை ‘அலையன்’ஸின் படை துரத்துகிறது. இவளுடைய அண்ணன் ஒரு கைதேர்ந்த மருத்துவர்.
இப்படியாக கேப்டன் மால்கமையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர். இந்தப் பெரிய குழுவை தனது எள்ளலான பேச்சாலும் கோபத்தாலும் திறமையாகக் கட்டுப்படுத்துகிறவர் மால்கம். இந்த சீரீஸில் சில வில்லன்களும் உண்டு. குறிப்பாக நாம் ஏற்கெனவே பார்த்த பிணந்தின்னிகள். இவர்களின் பெயர், ‘Reavers’. இவர்களைத் தவிர கேப்டன் மால்கமிடம் மூக்குடைபட்ட சில வில்லன்களும் உண்டு.
இந்த சீரீஸின் கொண்டாடப்பட வேண்டிய அம்சம், ஆக்ஷனோ, கௌபாய் வகை என்பதாலோ அல்ல. மாறாக, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை வசனங்கள். குறிப்பாக கேப்டன் மால்கமுக்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள். சாவின் விளிம்பிலும் பயங்கர நக்கல் தெறிக்கப் பேசக்கூடிய ஆள் இவர்.
ஆச்சர்யமாக, அத்தனை எபிஸோட்களிலும் வசனம் ஒரே சீராக இருக்கிறது. அதேபோல், அத்தனை எபிஸோட்களிலும் ஒரே சீரான சம்பவங்கள் சுவாரஸ்யம் குன்றாமல் நிரவப்பட்டிருக்கின்றன. அதுதான் ஜாஸ் வீடனின் வெற்றி. இந்த சீரீஸின் முடிவுதான் அவர் எடுத்த ‘Serenity’ திரைப்படத்தின் தொடக்கம்.
இந்த சீரீஸின் வீச்சைப் பற்றி இறுதியாக ஒரு துணுக்குச் செய்தி இதோ: ஆண்டுதோறும் அமெரிக்காவில் ‘comic con festival’ என்பது நடக்கும். 2012இல், Firefly சீரீஸின் நடிகர்களும் ஜாஸ் வீடனும் இதில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது.
முதல் நாள் இரவிலிருந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ரசிகர்கள் வந்து தங்கி முற்றுகையிட்டனர். மொத்தம் 10,000 பேர். நிகழ்ச்சி முடிந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று தங்களது பிரியமான கதாபாத்திரங்களுக்குப் பிரியா விடைகொடுத்தனர்.
- rajesh.scorpi@gmail.com