உருவம் ஒன்று; உயிர்கள் மூன்று! | திரைப் பார்வை - காமி (தெலுங்கு)

உருவம் ஒன்று; உயிர்கள் மூன்று! | திரைப் பார்வை - காமி (தெலுங்கு)
Updated on
1 min read

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் வெளியான ‘லவ்வர்’, ‘பைரி’, ‘அதோமுகம்’, ‘ஜே.பேபி’, ‘சிங்கப்பெண்ணே’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள் நல்ல உள்ளடக்கத்துடன் வெளிவந்தன. ஆனால் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தன.

இந்தச் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக மலையாள, தெலுங்கு சினிமாவிலிருந்து வெளிவரும் சிறிய படங்கள் பெரும் வெற்றியைப் பெற்று வருகின்றன.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருக்கும் ‘காமி’ (Gaami) என்கிற படம், மாஸ் மசாலாவை அதிகமும் விரும்பும் ஆந்திர ரசிகர்களிடம், அதன் கதை, கதைக்களத்தைக் காட்சிமொழிக்குள் கொண்டுவந்து சித்தரித்த விதம் ஆகியவற்றுக்காகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மனிதர்களைத் தொட்டாலே உடலும் உயிரும் ஜீவ மரணப் போராட்டம் நடத்தும் சிக்கலான நோயுடன் ஓர் அகோரி இளைஞனாக இருக்கிறார் சங்கர் (விஷ்வக் சென்). தனது நோயைக் குணமாக்கும் ‘மாலிபத்ரா’ என்கிற ஒளிரும் காளான்கள் இமயமலை சாரலின் பனி படர்ந்த திரிவேணி சங்கமத்தில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை முளைக்கின்றன என்பதை அறிந்து அங்கே பயணிக்கிறார்.

அவருக்கு வழித் துணையாகச் செல்கிறார் ஜான்வி (சாந்தினி சௌத்ரி) என்கிற விவாகரத்தான பெண். சக மனித ஸ்பரிசமே சாத்தியமில்லாத ஓர் அவல மனிதனாக அல்லல்படும் நாயகனின் நினைவுகளில் வந்து அவரை துன்புறுத்தும் மேலும் இரண்டு சிறார் கதாபாத்திரங்களும் விடுதலைக்காக ஏங்குகின்றன. அந்த இருவரில் ஒருவர், சிடி 333 எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு சிறுவன்.

சட்ட விரோத மூளை அறுவை ஆய்வுக் கூடத்தில் எலிபோல் அடைத்துவைத்துத் துன்புறுத்தப்படுகிறான். வதை முகாமாக இருக்கும் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க ஏங்குகிறான். ஆந்திராவின் கிராமம் ஒன்றில் தேவதாசி முறையிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறாள் உமா என்கிற சிறுமி. இந்த இரு சிறார்களுக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு, மூவருக்குமான விடுதலை சாத்தியமானதா என்பதை ‘நான் லீனியர்’ திரைக்கதையின் வழியே விரித்துச் செல்கிறது படம்.

காசியிலிருந்து கதை தொடங்கினாலும் சங்கருடன் ஜான்வி இணைந்தபின் படம் மாபெரும் சாகச நாடகமாக உருவெடுக்கிறது. கூடவே டிசி 333, சிறுமி உமா ஆகியோரின் கதைகள் இணைச் சாகச நாடகமாக விரைந்து நகர்கின்றன.

வெவ்வேறு நிலப்பரப்புகளின் தன்மை, அங்கே விடுதலைக்காக ஏங்கும் கதாபாத்திரங்களின் மன இருள் ஆகியவற்றை, காட்சிச் சாட்டகங்களில் ஓளி - இருள் ஒளியமைப்பின் சரியான கலவையில் படமாக்கம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்வநாத் செலுமல்லா.

விடுதலைக்கான ஏக்கம், வதைகளின் தீனமான ஒலி, சாகசம் மிகுந்த தருணங்களின் எழுச்சி ஆகிய உணர்வுகளைத் தனது பின்னணி இசையின் வழி கட்டியெழுப்பியிருக்கிறார் நரேஷ் குமரன். ஓர் அறிமுக இயக்குநர் என நம்ப முடியாதபடி, ஊக்கம் மிகுந்த திரை அனுபவத்தை ‘காமி’ படத்தின் வழிக் கொடுத்திருக்கிறார் வித்யாதர் காகிடா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in