Last Updated : 23 Feb, 2018 10:55 AM

 

Published : 23 Feb 2018 10:55 AM
Last Updated : 23 Feb 2018 10:55 AM

சினிமாவில் அரசியலைத் திணிக்கக் கூடாது: ‘அங்கமாலி டைரீஸ்’ இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி நேர்காணல்

லையாள சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர்களுள் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ‘ஆமென்’ ‘அங்கமாலி டைரீஸ்’ படங்கள் மூலம் தமிழகத்திலும் கவனம் பெற்றவர். அவரது புதிய படம் ‘ஈ.ம.யோ’ விரைவில் வெளியாகவிருக்கிறது. சென்னை லயோலோ கல்லூரியின் ‘லைவ்’ துறை, பூவுலகின் நண்பர்கள், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து நடத்திய சூழலியல் திரைப்படவிழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் சென்னை வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

உங்கள் முதல் படமான ‘நாயகன்’ ஒரு த்ரில்லர் வகை. மலையாள த்ரில்லரை எஸ்.என்.சுவாமி த்ரில்லர், கே.ஜி.ஜார்ஜ் த்ரில்லர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் எதைச் செய்ய வேண்டுமென நினைத்தீர்கள்?

வித்தியாசமான த்ரில்லர் செய்யத்தான் விருப்பம். ஆனால், நான் படமாக்க நினைத்த த்ரில்லர் கதை அல்ல படமாக வெளிவந்தது. முதல் படத்தில் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. இப்போது பார்க்கும்போது படம் சரியாக வரவில்லை என்பது புரிகிறது.

படத்தின் நாயகன் ஒரு கதகளிக் கலைஞர் என்பதைத் தீர்மானித்திருந்தீர்களா?

அதுதான் அந்தக் கதையில் ஒரு ஈர்ப்பான விஷயமாக இருந்தது. கதகளி மாதிரியான ஒரு கலையுடன் வன்முறையை இணைக்கும்போது கிடைக்கும் முடிவுதான், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இந்த அம்சம்தான் இதை ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக்கும் என்று நம்பினேன்.

ஆனால், அது நடக்கவில்லை, இல்லையா?

ஆமாம். திரும்பப் பார்த்தபோது எனக்குப் பிடித்த மாதிரி அதை நான் உருவாக்கவில்லை எனத் தெரிந்தது. என் படங்களைப் பார்த்தால் எப்போதும் தவறுகள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. கலைஞர்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களா, நூறு சதவீதம் திருப்தி வந்துவிட்டால் பிறகு எதற்குப் படம் செய்ய வேண்டும்? ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகும் நான் 30 சதவீதம்கூட வளரவில்லை என்பதுதான் என் அபிப்ராயம்.

உங்களுடைய ‘சிட்டி ஆஃப் காட்’ மூலம் மலையாளத்தின் கதை சொல்லும் போக்கில் ஒரு புதிய பாவனையை உருவாக்க முயன்றீர்கள் எனலாமா?

கே.ஜி.ஜார்ஜ் ‘ஆதமிண்ட வாரியலு’ படத்திலேயே இதைச் செய்து பார்த்திருக்கிறார். சத்யஜித் ரே ‘கஞ்சன்சங்கா’வில் செய்திருக்கிறார்.

ஆனால், உங்கள் படம், ஸ்பானிய இயக்குநர் அலெக்ஸான்ரோ இன்னாரிட்டுவின் ‘அம்ரோஸ் பெரோஸ்’போல ஒரு கிளையிலிருந்து பிரிந்துசெல்கிறது அல்லவா?

அந்த வடிவம் அதற்கு முன்பே இங்கு இருக்கிறது. ஆனால், இன்னாரிட்டு இந்த வடிவத்தைப் பயன்படுத்தும்போது அது பிரபலமானது. பல அடுக்குகளில் கதை சொல்வதற்கு ஒரு சர்வதேசக் கவனமும் கிடைத்தது. எனக்கு அதுபோல ஒரு படம் செய்ய விருப்பம். அப்படித்தான் ‘சிட்டி ஆஃப் காட்’ உருவாகியது. முயற்சி என்ற வகையில் அந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தியேட்டரில் இரண்டு நாட்கள்தான் ஓடியது.

‘ஆமென்’ புனிதர் மனித அவதாரம் எடுக்கும் ஒரு படம், தொன்மமும் உண்டு. த்ரில்லரிலிருந்து ஏன் சட்டனெ ஒரு மாற்றத்தைத் தேடிப் போனீர்கள்?

ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக் கூடாது என்றுதான் முயன்றுவருகிறேன். ஒரு புது வகைப் படத்தில் வேலை பார்ப்பதில் உற்சாகம் கிடைக்கிறது. ஒரு கிராமத்துக் கதையைச் சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இதுவரை மலையாள சினிமாவில் காண்பிக்காத சினிமாவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். தமிழ்நாட்டுக் கிராமம் என்றால் பாரதிராஜாவின் கிராமம் மனத்தில் காட்சியாக உருவாகிறது. அதுபோல கேரள கிராமம் என்றால் சத்யன் அந்திக்காடின் கிராமம் உருவாகும். இதற்கு மாற்றான ஒரு கிராமத்தை உருவாக்குவதைச் சவாலான காரியமாக எடுத்துக்கொண்டேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

‘ஆமெ’னின் வெற்றி உங்களை ‘டபுள் பேரல்’ போன்ற பரிசோதனை சினிமா செய்துபார்க்கத் தூண்டியதா?

கண்டிப்பாக. ‘ஆமென்’ ஒரு சராசரி கிராமத்துப் படமல்ல. ஒரு ஃபாண்டசியான கிராமத்துக் கதை எனச் சொல்லலாம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற தைரியத்தில் இதையும் முயன்று பார்த்தேன். மேலும் எனக்குச் சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் பிடிக்கும். அதுபோன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு சினிமா செய்ய நினைத்தேன். அதுதான் ‘டபுள் பேரல்’. ஆனால் அது சரியாக வரவில்லை. வெளியான தேதியை முன்பே தீர்மானித்ததால் அவசர, அவசரமாகப் படத்தை முடித்தோம். அதனால் அது முழுமையான சினிமாவாக வெளிவரவில்லை. மக்களும் அதை வரவேற்கவில்லை.

திலீஷ் போத்தனின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ போன்ற யதார்த்தவாத படங்களுக்குக் கிடைத்த வெற்றியின் பாதிப்பிலான ‘அங்கமாலி டைரீஸ்’ செய்தீர்கள்?

யார்த்தமான படமாகத்தான் அதைச் செய்தோம். ஆனால், அந்தக் கதைக்கான தேவையாக அது இருந்தது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் வேலை பார்க்கும்போது சினிமா உருவாக்குவது ஒரு மன அழுத்தமான வேலை அல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். கதையை உருவாக்குவதிலிருந்து அந்தப் படத்தின் ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும் லேசாக உணர்ந்தேன். சினிமா என்பது எளிமையான, லேசான வேலைதான். நாம்தான் தேவையில்லாத

 அழுத்தத்தை இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். இவற்றை இந்தப் படம்தான் சொல்லிக் கொடுத்தது. ஆனால், இதை எல்லோருக்கும் பொதுவாகப் பார்க்க முடியாது. ‘ஈ.ம.யூ.வி’லும் இதைத் தொடர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் ‘ஈ.ம.யூ’வை 18 நாட்களில் படமாக்க முடிந்ததா?

இத்தனை நாளுக்குள் முடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. நாங்கள் கதைக்காகப் போதுமான அளவு வேலை பார்த்தோம். அது 18 நாட்களுக்குள் முடிந்துவிட்டது. ‘அங்கமாலி டைரீஸு’ம் ‘ஆமெ’னும் 40 சொச்சம் நாட்களுக்குள் எடுத்த படங்கள்தாம்.
 

23CHRCJ__LIJO_JOSE லிஜோ ஜோஸ் பெல்லிசேரி right‘அங்கமாலி டைரீ ஸிலும் ‘ஈ.ம.யூ’விலும் நட்சத்திரங்கள் இல்லை. இனி லிஜோவுக்கு நட்சத்திரங்கள் தேவை இல்லையா?

‘அங்கமாலீஸ் டைரீஸ் ’ஒரு ஆளின் கதை கிடையாது. அது ஒரு ஊரின் கதை. அதில் நட்சத்திரங்கள் இருந்தால் சரியாக இருக்காது. மேலும் பொதுவாக நான் கதைக்குத்தான் நடிகர்களைத் தேடுகிறேன். இந்திரஜித், பிருத்விராஜ், ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த என் முந்தைய படங்களுக்கும் அப்படித்தான். நட்சத்திரங்கள் இல்லை என்றால் தியேட்டர்களுக்கு ஆட்கள் வருவார்களா என்ற சந்தேகமெல்லாம் வரும். ஆனால் தியேட்டரில் ஒருநாள் தாக்குப் பிடித்தால் போதும். கதைக்காக ஆட்கள் வருவார்கள். ‘அங்கமாலி டைரீஸு’க்கு அது நடந்தது.

‘அங்கமாலி டைரீஸ்’ ஒரு அரசியல் படம் என விமர்சனங்கள் வந்தன. அப்படித் தீர்மானித்து உருவாக்கிய படமா அது?

அப்படியெல்லாம் தீர்மானிக்கவில்லை. ஒரு கலையை அரசியல் நோக்குடன் செய்யக் கூடாது என நினைப்பவன் நான். சினிமாவைப் பார்க்கும் பார்வையாளர் ஒருவர், அதில் காணக்கூடிய அரசியல்தான், அந்தப் படத்தின் அரசியல். நாமாக ஒன்றை வலியுறுத்தித் திணிக்கக் கூடாது. படம், ஒரு மனுஷனைப் பற்றி, ஒரு ஊரைப் பற்றிச் சொல்லும்போது, அந்த மனுஷனின், அந்த ஊரின் அரசியலையும் சேர்த்து வெளிப்பட வேண்டும். நாமாகத் திணிக்க வேண்டியதில்லை.

வெளியாகவிருக்கும் ஈ.ம.யோ., ‘மதயானைக் கூட்டம்’ மாதிரியான இறப்புச் சடங்கைச் சித்திரிக்கும் படமா?

ஆமாம். ஆனால், இதில் ஒரு மீனவக் குடும்பத்தில் நடக்கும் இறப்புச் சடங்கைப் பதிவுசெய்திருக்கிறேன். பொதுவாக, நாம் எல்லோருமே இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்க வேண்டும், என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x