பீதியைக் கிளப்பாதீங்க!- ஆர்யா நேர்காணல்

பீதியைக் கிளப்பாதீங்க!- ஆர்யா நேர்காணல்
Updated on
2 min read

‘கல்யாணம் எப்போதான் பண்ணிக்கப் போறீங்க?' என்று கேட்டால் ‘அதான் எனக்கே தெரியல. நீங்க என்னைக் கேட்கிறீங்க. எப்போ பண்ணலாம்?' என்று கேள்வியைத் திருப்பிக் கேட்கிறார் தமிழ்த் திரையுலக நாயகிகளின் லவ்வர் பாய் ஆர்யா.

புதிதாக வந்திருக்கும், வரவிருக்கும் நாயகிகளுக்காகவும், ‘மீகாமன்' படத்திற்காகவும் உடலமைப்பை மாற்றி முறுக்கேற்றி இருக்கிறார் ஆர்யா. எந்தக் கேள்வியைக் கேட்டாலும், அவரிடம் இருந்து சீரியஸான பதிலை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு இரவுப் பொழுதில் ஆர்யாவிடம் பேசியதில் இருந்து...

லவ்வர் பாய் இமேஜில் இருந்து ‘மீகாமன்' ஆக்ஷனு‌க்கு மாறிட்டீங்களே?

இது வரைக்கும் நான் பண்ணாததது ஆக்‌ஷன் த்ரில்லர். அதை ‘மீகாமன்' படத்தில் பண்ணியிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஆக்ஷன் படம் பண்ணினால், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சும்மா ஒருத்தனைப் பார்த்தேன், அடிச்சேன்னு இருக்கக் கூடாது. நான் இந்தப் படம் பண்ணியதற்குக் காரணம் இந்தப் படத்தோட கதைக்களம்தான்.

கதையே ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறதால, 5 பாட்டு எல்லாம் தேவைப்படல. இந்தப் படத்துல நான் என்னவா நடிச்சிருக்கேன்னு சொன்னா உங்களுக்கு சஸ்பென்ஸ் போயிடும். அதைப் படத்துல பார்த்துக்கோங்க.

‘சேட்டை' படத்தைத் தொடர்ந்து ‘மீகாமன்' படத்திலும் ஹன்சிகாவோட இணைந்து நடிச்ச அனுபவத்தைச் சொல்லுங்க..

5 வயசுல இருந்து நடிச்சுட்டு இருக்காங்க. அவங்க எப்படித்தான் அதே எனர்ஜியோட இருக்காங்கனு தெரியல. காலைல எந்த எனர்ஜியோட செட்டுக்கு வந்தாங்களோ, அதே எனர்ஜியோட இரவு படப்பிடிப்பு நடக்கும் போதும் இருப்பாங்க. ஹன்சிகா ரொம்ப அற்புதமான, திறமையான நடிகை. கண்டிப்பாக அவங்க இன்னும் நிறைய உயரத்துக்குப் போவாங்க. என் கூடயும் நிறையப் படங்கள் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

கிசுகிசு செய்திகளில் எப்போதும் ஆர்யாவுக்குத்தான் முதலிடம். இதற்கு முடிவே கிடையாதா?

கிசுகிசு அப்படிங்கிறது நீங்க எழுதுறதுதான். அதை நான் தப்பு என்று சொல்ல மாட்டேன். நான் அதிகமாகக் கவனிப்படுவதால தான் எழுதுறாங்க. இவனைப் பற்றி எழுதினால் நிறையப் பேர் படிப்பாங்க அப்படிங்கிறதுனால எழுதுறாங்க. ரொம்ப நாள் எழுதாம இருந்தால், என்னப்பா என்னைப் பற்றி ஒண்ணுமே எழுத மாட்டேன்றீங்கனு கேட்போம் இல்லயா. அதனால எழுதுறாங்களோ என்னவோ! ஆனா கிசுகிசு நல்லதா, கெட்டதான்னு கேட்டா என்னை ரொம்ப பெர்சனலா பாதிக்கிற மாதிரி எழுதினால் தப்பு.

புதிதாக வரும் நாயகிகளுக்கு ஆர்யா கூட நடித்தால் கிசுகிசு செய்திகளில் அடிபடுவோம் என்ற பயம் வருமே?

எந்த நாயகியைப் பற்றித் தான் கிசுகிசு வரல சொல்லுங்க. என்கூட நடிச்சா மட்டும் தான் வருதா. ஹீரோயின் அப்படின்னாலே கிசுகிசு தான். யாரும் கிசுகிசுவால் பயப்படுறதே கிடையாது. நீங்க ஹீரோயின்ஸ்கிட்ட தனியாகக் கேட்டுப் பாருங்க. அவங்களுக்குக் கிசுகிசு ரொம்ப பிடிக்கும்.

ஆர்யாவிற்குத் திருமணம் செய்துவிட்டுத் தான், எனக்குத் திருமணம் என்று கூறி வருகிறாரே விஷால்?

என் அண்ணன் விஷால் கல்யாணம் பண்ணினால்தான் நான் கல்யாணம் பண்ண முடியும். வீட்டில் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லிட்டு இருக்கான். வேற ஒண்ணும் கிடையாது. அவன் வீட்டிற்குப் போனால் அவனோட அப்பா, அம்மா என்கிட்ட “எப்போடா, கல்யாணம் பண்ணப் போற.. உன் பெயரைச் சொல்லிதான் அவன் எஸ்கேப் ஆயிட்டு இருக்கான்னு” கேட்பாங்க.

உங்க தம்பியை ஹீரோவாக்கிப் படம் தயாரிச்சு இருக்கீங்க. அவர் யாரை மாதிரி வரணும்னு நினைக்கிறீங்க?

சத்யா என்னை மாதிரி வரணும் என்று எதிர்பார்க்கிறேன். ‘அமர காவியம்' ஒரு நல்ல காதல் கதை. என்னுடைய கேரியர்ல கிடைக்காத படம்னு கூடச் சொல்லலாம். அடர்த்தியான காதல் கதை, நல்ல இயக்குநர் இப்படி எல்லாம் சரியா அமைஞ்சாதான் அந்த மாதிரி ஒரு படம் பண்ண முடியும். அந்த மாதிரி அவனுக்கு ‘அமரகாவியம்' படம் அமைஞ்சுருக்கு. அந்தப் படத்தைத் தயாரித்த விதத்தில் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவன் நடிப்பில், நான் தயாரித்த முதல் படமான ‘படித்துறை' எடிட்டிங் போயிட்டு இருக்கு.

ஆர்யா புகைபிடிக்க மாட்டார்னு சொல்றாங்களே உண்மைதானா?

தம் அடிக்கிறது, தண்ணி அடிக்கிறது எல்லாம் அவங்களோட தனிப்பட்ட உரிமை. உங்களை நீங்க கெடுத்துக்கிறீங்க. எவ்வளவு தண்ணி வேண்டுமானாலும் அடிக்கலாம். நீங்க தண்ணி அடிச்சு மற்றவர்களை அடிக்காமல் இருந்தா சரி. எனக்குப் புகை பெர்சனலா பிடிக்கல. எனக்கு உடற்பயிற்சி, விளையாட்டு இதுதான் பிடிக்கும். சிலருக்குத் தண்ணி, தம் அடிப்பது பிடிக்குது அவ்வளவு தான். அவங்களோட உடல்நிலையைப் பொறுத்து அவங்க அடிக்கிறாங்க. எனக்குப் பிடிக்கல.நிறுத்திட்டேன்.

அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, பூஜா இவங்களுக்கு எல்லாம் எப்போ கல்யாணம்?

இவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்குறாங்களா என்ன? அவங்க எல்லாம் பண்ண மாட்டாங்கனு சொல்லிட்டுதான் நானே சும்மா இருக்கேன். நீங்க இவ்வளவு பெரிய பாம் போட்டுப் பீதியை உண்டாக்குறீங்க.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in