

வெ
குஜன சினிமா ரசிகர்களுக்கு நெகிழ்வூட்டும் மற்றுமொரு காதல் சித்திரமாகக் களமிறங்குகிறது ‘மிட்நைட் சன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்.
17 வயதாகும் கேத்தி ஓர் இரவுப் பறவை. சூரிய வெளிச்சம் மேலே பட்டால் உடல்நலனுக்கு உலையாகும் விசித்திரமான மரபுநோயின் பிடியில் தவித்துவருகிறாள். வெளிச்சக் கீற்றுகள் நுழையாதபடி இண்டு இடுக்குகளையும் அடைத்துக்கொண்டு பகலெல்லாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பாள். சூரியன் மறைந்த பிறகே அவளது நாள் புலரும். தந்தையுடன் வசித்துவரும் கேத்தியின் ஒரே ஆறுதல் அவளது கிடாரும் அதன் பாடலும்தான். இரவானதும் வீட்டின் எதிரே இருக்கும் ரயில் நிலையத்தில் கிடார் இசைத்துப் பாடுவதில் தன் சோகத்தை மறப்பாள்.
அப்படியோர் இசைவான தருணத்தில் பள்ளித் தோழனான சார்லியை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்கொள்கிறாள். படிக்கும்போதே அவன் மீது அவளுக்கு மெல்லிய ஈர்ப்பு இருந்ததால், எளிதில் அவன்மீது காதல் கொள்கிறாள். பகல் முழுவதும் பிஸியாகக் காட்டிக்கொண்டு இரவில் மட்டுமே காதலனைச் சந்திக்கும் கேத்திக்கு, அவள் ஏங்கும் கதிரவனின் காதல் கதகதப்பைத் தருகிறது.
மகளின் போக்கு உடல்நலனைப் பாதிக்குமோ என்ற அச்சத்தில் அவள் தந்தை காதலுக்குத் தடைபோடுகிறார். இதற்கிடையே அவள் மறைத்து வந்த பகல் சிறையின் பின்னணி காதலனுக்குத் தெரிந்துவிடுகிறது. கதிரவனுக்கு எதிரான போராட்டத்தினூடே அவளது காதல் என்னவானது என்பதை மீதிப் படம் சொல்கிறது.
12 ஆண்டுகளுக்கு முன் இதே தலைப்பில் ஜப்பானில் வெளியான திரைப்படத்தைத் தற்போது ஹாலிவுட்டில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்கள். பிரபல கிடார் இசைப் பாடகியான யூயி (Yui) நடித்து, அவரது பாடல்களும் சோக முடிவுமாக ரசிகர்களை நெகிழவைத்த அப்படம் அங்கே மெகா ஹிட்!
பெல்லா தோர்ன், பேட்ரிக் ஸ்வாஸ்நேகர் (Patrick Schwarzenegger) உள்ளிட்டோர் நடித்து, ஸ்காட் ஸ்பீயர் இயக்கிய ‘மிட்நைட் சன்’ மார்ச் 23 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.