Published : 23 Feb 2018 10:43 AM
Last Updated : 23 Feb 2018 10:43 AM

படப்பிடிப்புத் தளம்: ‘மிஸ்டர் சந்திரமெளலி’யுடன் ஒரு மாலைப் பொழுது

திரைப்படம் எடுப்பதில் என்னதான் கஷ்டம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் ‘ஒரு நாள் ஸ்பாட்டுக்குவந்து பார்த்தாதான் ஒரு ஷாட்டை எடுக்க நாங்க எவ்ளோ கஷ்டபட்றோம்னு புரிஞ்சுப்ப’ என்று உதவி இயக்குநர் நண்பர்கள் அடிக்கடி சொல்லி வந்ததாலும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படப்பிடிப்பு தளத்துக்கு வண்டியைச் செலுத்தினேன்.

ராஜா அண்ணாமலைபுரத்தின் மரங்களும் உயர்நடுத்தர வர்க்கக் குடியிருப்புகளும் அலுவலகங்களும் நிரம்பிய தெரு ஒன்றில் இரவு நேரப் படப்படிப்பு. மூன்று கேரவன்கள், பெரிய அடுக்குகளில் சாப்பாடு ஏற்றிவந்த வண்டிகள், திரைப்பிரபலங்களின் சொகுசுக் கார்கள் என அந்தச் சிறிய தெருவுக்குள் மிக அரிதாக நுழையும் வாகனங்கள் தென்பட்டாலும் அவை அந்தச் சூழலின் அமைதியைக் கெடுக்கவில்லை.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த ஒரு பழையகாலத்துப் பெரிய வீட்டுக்குள் நுழைந்தோம். உள்ளே கேட்டுக்கு எதிராக ஒரு பழுப்பு நிற ப்ரீமியர் பத்மினி கார் நின்றுகொண்டிருந்தது. அங்கிருந்த உதவி இயக்குநர்களும் படப்பிடிப்புப் பணியாளர்களும் யாரிவர்கள் என்று சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதை அவர்களைப் பார்க்காமலே உணர முடிந்தது.

என்னையும் உடன் வந்த நண்பரையும் உள்ளே வரவேற்று அமரவைத்துவிட்டுச் சென்றார் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன். மறு கணம் ஒருவர் வந்து “என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடுறீங்க சார்” என்றார். “இப்ப எதுவும் வேண்டாம் சார்” என்றேன்.

நாங்கள் அமர்ந்திருந்த அறைக்கு உள்ளே இருந்த அறையில் ஒரு ஷாட்டை ஓகே செய்து முடித்துவிட்டு வெளியே வந்த இயக்குநர் திரு எங்களைப் பார்த்தவுடன், நாங்கள் அங்கு இருப்பதால் ஏதாவது இடையூறா என்று கேட்க “நோ நோ நத்திங்” என்று சொல்லி புன்னகைத்துவிட்டுச் சென்றார்.

அங்கு ஷாட் முடித்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்த கவுதம் கார்த்தியின் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். பிறகு அந்த ஷாட் முடிந்த அறையில் இருந்த நடிகர் கார்த்திக் வெளியே வந்தார். அவரும் அன்றைய படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டோம்.

அடுத்த ஷாட் எடுப்பதற்கான வேலை நடக்கும்போது, கார்த்திக்கிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார் திரு. சமவயதினரான கவுதம்மைப் போலவே மூத்தவரான கார்த்திக்கிடம் திரு நெருக்கமாகப் பேசியதிலிருந்து கார்த்திக் தோற்றத்தில் மட்டுமல்ல சிந்தனையிலும் இன்னும் இளைஞராகவே இருக்கிறார் என்று தோன்றியது.

முந்தைய ஷாட் எடுக்கப்பட்ட உள்ளறையில் கார்த்திக் நின்றுகொண்டு செல்ஃபோனில் ஏதோ பேசிவிட்டு வாசலைநோக்கி வருவது போன்ற காட்சி. படத்தில் இது திரையில் காண்பிக்கப்படுமா அல்லது வெறும் குரல் மட்டும்தான் கேட்குமா என்பதுகூட எடிட்டிங் டேபிளில்தான் முடிவாகப்போகிறது.

ஆனால், கார்த்திக் உள்ளேயிருந்து வெளியே வருவதைப் போன்ற ஷாட்டை எடுப்பதற்கான கேமரா டிராலி செட்டிங்குக்கு ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத்தோடு சேர்ந்து நான்கைந்து பேர் வேலை பார்க்க வேண்டியிருந்தது. இதைத் தவிர உதவி இயக்குநர் சுரேஷ் அந்தக் காட்சிக்கான பேப்பரை வைத்துக்கொண்டு என்ன வசனம் இருக்கிறது எனப் பார்த்துக் குறித்துக் கொண்டிருந்தார்.

அந்த அறையின் ஓர் ஓரத்தில் நடிகர்களுக்கான உடைகளுக்கு இஸ்திரிபோடுகிறவர், இன்னோர் ஓரத்தில் படப்பிடிப்பில் உள்ள மைக்களுக்கான ஆப்ரெட்டர் ஆகியோர் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மற்றோர் ஓரத்தில் பெரிய சைஸ் மின் விளக்குகளை வைத்து அவற்றின் மீது சிலர் பேப்பர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியில் உடல்மொழி எப்படி இருக்க வேண்டும், வாசலை நோக்கி வரும்போது முகத்தில் பதற்றம் தெரிய வேண்டும் என்பதை எல்லாம் கார்த்திக்கிடம் விளக்கிவிட்டு மானிட்டர் அருகில் அமர்ந்துகொண்டார் திரு. டேக் போவதற்கு முன் ‘சைலன்ஸ்’ என்றவுடன் அமைதி பரவியது.

‘ஷாட் ஓ.கே.’ என்றார் இயக்குநர். ஒளிப்பதிவாளரிடம் “க்ளோஸ்-அப் எடுக்கணும்” என்றவுடன் மீண்டும் அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனே, கேமரா இருந்த ட்ராலியை ஒரு இடத்தில் நிறுத்தி, கேமராவுக்கு லென்ஸ் மாற்றினார்கள். இங்கு வேலை நடந்துகொண்டிருந்தபோதே வெளியே வந்த கார்த்திக் இயக்குநரைப் பார்த்து ‘ஷாட் ஓகேவா’ என்று ஒரு புது நடிகரின் ஆர்வம் தொனிக்க பார்வையாலேயே கேட்க, அவர் தலையசைத்ததும் நிம்மதியுடன் தான் நடித்த காட்சியை மானிட்டரில் பார்த்தார்.

அடுத்த காட்சி வீட்டுக்கு வெளியே. அங்கிருந்த பொருட்களை சுமார் 10 பேர் கழற்றி, வெளியே கொண்டுபோகவே சுமார் 40 நிமிடங்கள் ஆயின. முந்தைய ஷாட்டில் வெளியே வந்த கார்த்திக், அந்த வீட்டின் வாசல் கதவு அருகே நின்றுகொண்டு காரைப் பார்த்து, படியிலிருந்து இறங்கி வீட்டின் முன்பகுதியில் சுற்றிச் சுற்றிப் பார்ப்பது போலக் காட்சி. இதற்குப் பக்கத்து வீட்டுச்சுவரில் ஒரு லைட், வீட்டின் வாசலில் இருந்த மரத்தின் மேலே ஒரு லைட் எனச் சுற்றிச் சுற்றி மாட்டினார்கள்.

தமிழ்ப் படங்களில் காட்டப்பட்ட இயக்குநர்களுக்கு மாறாக திரு ஓரிடத்தில்கூடப் பரபரப்போ எரிச்சலோ அடையாமல் அமைதியாகவே வேலைபார்த்துக்கொண்டிருந்தார். ‘சைலன்ஸ்’என்பதைக்கூட மெதுவாகவே சொன்னார். திருவைப் போலவே தனஞ்செயனும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சகஜமாக இருந்தார். நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கையிலிருந்த ஸ்மார்ட்ஃபோனை எடுத்து பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டிருப்பதற்காக இளையராஜாவை வாழ்த்தி ட்வீட் செய்தார்.

வெளியில் எடுக்கப்படவிருந்த காட்சிக்காக சிவப்பு கலர் Baleno கார் நின்றுகொண்டிருந்தது. அந்தக் காட்சி எப்படி எடுக்கப்பட வேண்டும் என்று ஒளிப்பதிவாளருக்குச் சொல்லிவிட்டு கார்த்திக், கவுதம் கார்த்திக் அருகே வந்து அமர்ந்து அரட்டையைத் தொடங்கினார் திரு. அவர்களுடன் தனஞ்செயனும் சேர்ந்துகொண்டார்.

அடுத்த ஷாட்டுக்கு டேக் போகும் முன் ஒளிப்பதிவாளரிடம் சில யோசனைகளைச் சொல்லி அதற்கேற்றபடி ஏற்பாடுகளைச் செய்துகொள்ளச் சொன்னார் கார்த்திக். மூத்த நடிகரின் கிரியேடிவ் இன்புட்ஸை பவ்யமாகப் பின்பற்றினார் ஒளிப்பதிவாளர்.

இந்தக் ஷாட் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது உள்ளே வந்த ரெஜினா அனைவருக்கும் ‘ஹாய்’ சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்குத் தயாரானார். அவரும் கவுதமும் அந்த காரில் வந்து இறங்குவது போன்ற காட்சியைப் படமாக்கினார்கள்.

நாம் விடைபெற்றுக் கிளம்பும்போது ‘சாப்டுட்டுப் போங்க’ என்று சொன்ன தனஞ்செயனிடம் நேரமாகிவிட்டதைச் சொல்லி மனநிறைவுடன் திரும்பினோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x