Last Updated : 09 Feb, 2018 11:23 AM

Published : 09 Feb 2018 11:23 AM
Last Updated : 09 Feb 2018 11:23 AM

தரணி ஆளும் கணினி இசை 18: பைரசி மீது மட்டும் பழி போடலாமா?

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது நினைவிருக்கலாம். அவரது ‘அண்ணாதுரை’ படத்தின் பாடல்களை இணையத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தார். பல வெற்றிப்படங்களைக் கொடுத்த அவர், இசையை இலவசமாகக் கொடுக்க ஏன் முன்வந்தார் என்ற கேள்வியிலிருந்தே இந்த அத்தியாயத்தைத் தொடங்கலாம்.

ஒரு படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எப்படிக் காத்திருந்தார்களோ, அப்படித்தான் அந்தப் படத்தின் இசை வெளியீட்டுக்காகவும் காத்திருந்தார்கள். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பும் காத்திருப்பும் 15 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒன்று. ஒரு காலத்தில் ஓஹோவென்று இருந்த இசைத்தட்டுக்களின் (vinyl records) யுகம் நம் நினைவுகளில் மட்டும்தான். நிலைமை இன்று தலைகீழாகிவிட்டது.

மருந்துக் கடைகளைப் போல ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வாழ்ந்துகொண்டிருந்த கேசட் கடைகள் இன்றில்லை. இசை டிஜிட்டல் மயமானபோது கேசட் கடைகள் சிடி கடைகளாக உருமாறின. ஆனால், அவை மெல்ல மெல்லக் காணாமல் போயின. இந்தியா முழுவதும் சிடி தயாரித்துக்கொண்டிருந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

இன்று ஒரு படத்தின் இசை ரசிகனைக் கவர்ந்து அது ‘ஹிட்’ அடித்தது என்றால் அதை வாங்க அவன் கடையைத் தேடுவதில்லை. இணையத்திலிருந்து அதை வாங்கிக்கொள்கிறான், அல்லது இலவசமாக டவுன்லோட் செய்துகொள்கிறான். அப்படியானால் இசையை சிடிக்களாக விற்றுக்கொண்டிருந்த நிறுவனங்கள்? ஆடியோ உலகில் கொடிகட்டிப் பறந்த முப்பதுக்கும் அதிகமான ஆடியோ நிறுவனங்கள் கடையை மூடிவிட்டுப் போய்விட்டன. இன்று வெகுசில நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் இருக்கின்றன.

பைரசிதான் காரணமா?

ஆடியோ மார்க்கெட் அடியோடு வீழ்ந்துவிட்டது. அதற்குக் காரணம், ‘இசை டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பைரசி செய்யப்பட்டு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது; அதை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்வது அனைவருக்கும் எளிதான ஒன்றாக ஆகிவிட்டது’ என்று திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையை ஆராய்ந்து பார்த்தால் பைரசி மட்டுமே இதற்குக் காரணம் அல்ல.

மிக மிக முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒளித்துவைக்க முடியாத ஓர் உண்மை புலப்படும். நல்ல பாடல்கள் பிறக்க மிகச் சிறந்த கதையைத் தயாரிப்பாளர் தேர்வுசெய்யாமல் போய்விடுவது முதல் காரணம் என்றால் அடுத்த முதன்மையான காரணம், வெளியாகும் பாடல்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் இருப்பதுதான்.

15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டுக்கு 100 முதல் 125 படங்கள் வெளியாகி வந்த தமிழ் சினிமாவில் இன்று 200 முதல் 275 படங்கள் வெளியாகின்றன. ஒரு படத்தில் சராசரியாக 5 பாடல்கள் இடம்பெறுகின்றன என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு சுமார் 1,500 பாடல்கள். இந்த 275 படங்களில் சராசரியாக ஆண்டுக்கு 100 புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள்.

படங்களின் எண்ணிக்கையும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தபோது ஆடியோ சந்தையில் நிலையாக இருந்த அனுபவமும் பாரம்பரியமும் மிக்க நிறுவனங்கள் இசையை வாங்கி வெளியிட்டன. இசை உரிமையை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை, தயாரிப்பாளருக்குப் படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஈடுசெய்ய அல்லது படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரச் செலவுக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது. ஆனால், இன்று உற்பத்தி அதிகமாக இருப்பதால் திரையிசைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

இதனால் 15 முதல் 20 லட்சம் செலவழித்து உருவாக்கும் தங்கள் படத்தின் இசை ஆல்பம் மக்களைச் சென்றடைந்தால் போதும், அதன் மூலம் எங்கள் படத்துக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும், எனவே இசை நிறுவனங்கள் கையில் அதைக் காலணாவுக்கும் அரையணாவுக்கும் கொடுப்பதைவிட நேரே ரசிகனின் கையிலேயே அதைக் கொடுத்துவிடுவோம் என்று பலர் தாங்களாகவெ முன்வந்து இலவசமாகக் கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களே மறைமுகமான பைரசிபோல மொத்த ஆல்பத்தையும் இணையத்தில் மிதக்கவிட்டுவிடுகிறார்கள்.

கண்டுகொள்ளாத நிறுவனங்கள்

இசை மூலம் வரும் வருவாயைவிட இசை மூலம் படத்துக்குக் கிடைக்கும் விளம்பரமே இன்று அவசியமானது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படத்தைத் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த, தயாரிப்பாளர் 50 லட்சம் முதல் 2 கோடிவரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த அளவுக்கு விளம்பரக் கட்டணங்கள் மிரட்டுகின்றன. விளம்பரச்செலவு இன்று பட்ஜெட்டில் வீக்கத்தை உருவாக்கிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தின் இசை ஆல்பம் எளிதாக ரசிகர்களைச் சென்று அடையும்போது அது படத்துக்கான விளம்பரமாக மாறுகிறது.

இரவு பகலாகப் பணிபுரிந்து, பாடல்கள் ஒவ்வொன்றையும் தங்கள் குழந்தைகளாக நேசிக்கும் இசையமைப்பாளர்களும் தங்கள் ஆல்பம் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட 100 பேர் கொண்ட படக் குழுவுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். படைப்பாளியாக அவர்கள் அப்படி நினைப்பது மிக நியாயமானதுதானே… பெருங்கூட்டத்துக்கு நடுவே, தங்கள் படைப்பு காணாமல் போய்விடாமல் இருக்க அது கடைக்கோடி ரசிகனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் அவர்களின் துடிப்பு.

அப்படிப் போய்ச்சேரும்போதுதான் ஒரு பாடல் பிரபலமாகிறது. பாடல் ஹிட்டாகி பிரபலமானால்தான் அது இசையமைப்பாளரின் கற்பனையை அணையாமல் பாதுகாக்கும்.

இன்னொரு பக்கம், பிரபலமான ஆடியோ நிறுவனங்களிடம் ‘எங்கள் படத்தின் ஆல்பத்தை இலவசமாகத் தருகிறோம். அதைச் சிறப்பாக வெளியிட்டு மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள்’ என்று தயாரிப்பாளர் கேட்கிறார். ஆனால், அதற்கும் தயாராக இல்லை நிறுவனங்கள். இப்படிக் கண்டுகொள்ளாமல் போனதற்கு என்ன காரணம், நூற்றுக்கணக்கான படங்களின் ஆல்பங்கள் வந்து குவிந்துவிடுவதால் அவற்றை எடுத்து ஆடியோ சந்தைக்கு ஏற்ற வகையில் அதை ‘புராசஸ்’ செய்து வெளியிட அவர்களால் முடியவில்லை.

இப்படி ‘புராசஸ்’ செய்து வெளியிட ஆடியோ நிறுவனங்கள் தயாரிப்பாளரிடம் பணம் கேட்கும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கும் சில தயாரிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து ‘ நியாயமான பணத்தைத் தருகிறோம் உங்கள் பேனரில் வெளியிடுங்கள்’ என்று கெஞ்சினாலும் அதற்கும் பராமுகம் காட்ட வேண்டிய நெருக்கடியில்தான் ஆடியோ நிறுவனங்களும் இருக்கின்றன.

சிங்கிள் ரிலீஸ்

ஆடியோ சந்தை இவ்வளவு மோசமாக இருந்தாலும் சில பெரிய நடிகர்களின் படங்களுடைய இசை ஆல்பம் கோடிகளில் விற்பனை ஆகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகிறதே என்று நீங்கள் கேட்கலாம். அதில் பெரிய அளவு உண்மை இல்லை என்பதுதான் உண்மை. அதுபோன்ற செய்திகளும் படத்தின் விளம்பரத்துக்காகப் பரப்பப்படுபவைதான்.

பெரிய நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் சொந்தமாக ஆடியோ நிறுவனம் தொடங்க வேண்டிய அவசியம் ஏன் உருவாகிறது என்று யோசித்தீர்கள் என்றாலே ரசிகர்களைக் கவரும் ஈர்ப்பற்ற அவர்களது படங்களுக்கான இசையும் சந்தையில் போணியாவதில்லை என்பது எளிதில் புரிந்துபோகும்.

இதைத் தாண்டி பல பெரிய படங்களுக்கான இசையை முழுமையாக வெளியிடாமல் ‘சிங்கள் ரிலீஸ்’ என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள். இது எதற்கென்றால் படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை மெட்டும் தேர்ந்தெடுத்து அதை சிங்கிளாக இலவசமாக வெளியிட்டு அதை ரசிகர்களிடம் பரப்புகிறார்கள். அந்தப் பாடல் ஹிட்டாகிவிட்டால் மொத்த ஆல்பத்தையும் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகிவிடுகிறது.

அப்போது அந்த இசையை வாங்க ஆடியோ நிறுவனங்களும் முன்வருகின்றன. பெரிய படங்கள், முக்கிய முன்னணி இசையமைப்பாளர்களின் ஆல்பங்களுக்குச் சாத்தியமாகும் இந்த உத்தியைச் சிறிய படங்களுக்கும் செய்து பார்க்கிறார்கள். ஆனால், பரிதாபகரமாக அவை ரசிகர்களால் கவனிக்கப்படுவதில்லை.

இதைத் தாண்டி முதல்முறை கேட்கும்போதே மறக்க முடியாத பாடலாக மாறிவிடும் பாடல்கள் இன்று மிக அபூர்வமாகப் படைக்கப்படுகின்றன.

நம் இரவுகளையும் பயணங்களையும் சுகமாகத் தலாட்டும் அமரத்துவம் வாய்ந்த பாடல்களைத் தந்த ஒரு மாபெரும் இசையமைப்பாளரின் இன்றைய இசை ஆல்பத்தை வாங்க ஆர்வத்துடன் முன்வருவதில்லை. சிறுவயது முதல் அவரது இசை ரசிகனாக இருக்கும் என்னைப் போன்றவர்களை மிகவும் வருந்தச் செய்யும் மாற்றம் இது. இரைச்சல் மிகுந்த இசையை ஆதரித்துக் கொண்டாடும் போக்கும் ரசனையும் இன்று உருவாகியிருப்பதே இதற்குக் காரணம். இதைத் தாண்டி எம்.பி.3-யின் (mp3) வரவே ஆடியோ சந்தையை ஒழித்துவிட்டது என்று குரலும் இங்கே ஒலிக்கிறது… அதில் உண்மை இருக்கிறதா? அடுத்த வாரம் பகிர்வேன்...

தொடர்புக்கு tajnoormd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x