

ஜாஸ் வீடன் ‘அவெஞ்சர்ஸ்’ (Avengers) படத்தின் இயக்குநர். அப்படம் வருவதற்கு முன்னரே ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர். காமிக்ஸ் க்ரியேட்டர், தொலைக்காட்சி சீரீஸ்களை உருவாக்கியவர், திரைக்கதை எழுத்தாளர் ஆகிய அடையாளங்களும் அவருக்கு உண்டு.
வீடனைப் பற்றிய இன்னொரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால், மனிதர் தொட்டதெல்லாம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும். ‘Buffy the vampire slayer’ நினைவிருக்கிறதா? தொண்ணூறுகளில் இந்தியாவில் மிகப் பிரபலமான ஆங்கில சீரீஸ். அது முடியும் தறுவாயில் வீடன் உருவாக்கிய ஒரு சீரீஸ்தான் ‘ஃபயர்ஃப்ளை’ (Firefly). இன்றுவரை இந்த சீரீஸுக்கு வெறிபிடித்த ரசிகர்கள் உள்ளனர். ஒரே சீசனில் இந்த சீரீஸ் முடிந்ததும் வீடன் சும்மா இருக்கவில்லை. ஒரு திரைப்படமும் எடுத்தார். படத்தின் பெயர் ‘Serenity’. சீரீஸ் முடிந்த இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. படத்தை எடுத்த பின்னர் ‘Serenity’ என்கிற தலைப்பிலேயே காமிக்ஸை யும் கொண்டுவந்துவிட்டார்.
அப்படி இந்த சீரீஸில் என்னதான் விசேஷம்? - அவெஞ்சர்ஸ் பார்த்தவர் களுக்கு வீடனின் கும்பல் சேர்க்கும் திறமை பற்றித் தெரிந்திருக்கும். ஒரு பெரிய கும்பலைக் கட்டி மேய்க்கும் ஒரு கேப்டனின் கதைதான் ‘ஃபயர்ஃப்ளை’. இந்தக் கேப்டன், அப்படியே ‘Iron Man’ டோனி ஸ்டார்க்கின் பெரிய அண்ணன். கோபத்திலும் ஈகோவிலும் பகடியான பேச்சிலும் கேப்டனின் பெயர் மால்கம் ரேய்னால்ட்ஸ்.
இந்தக் கதை நடப்பது 2517இல். இந்தக் காலகட்டத்தில் பூமியிலிருந்து பல்வேறு கோள்களுக்கும் பால்வீதிகளுக்கும் மனிதர்கள் குடிபெயர்ந்தாயிற்று. இப்படிக் கோள் பெயர்ந்த காலகட்டத்தில் உலகில் இரண்டே நாடுகள்தாம் இருக்கின்றன. ஒன்று சீனா; மற்றொன்று அமெரிக்கா. சீனாவின் ஆதிக்கத்தில் ஆசியாவும் ஐரோப்பாவின் ஒரு பகுதியும் இருக்க, அமெரிக்காவின் ஆதிக்கத்தில் பிற கண்டங்கள். இதனால் உலகின் பிரதான மொழிகள் மாண்டரினும் ஆங்கிலமும் மட்டும்தான்.
இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் கூட்டணியின் பெயர் – The Alliance. இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இந்தச் சூரியக்குடும்பம் முழுவதும் இருக்கிறது. இத்தகைய உலகில், Firefly என்கிற குறிப்பிட்ட வகை விண்கலங் களில் ஒன்றை வாங்கி, அதனைக் கள்ளக்கடத்தல் வேலைகளுக்காகப் பயன்படுத்தும் நபர்தான் கேப்டன் மால்கம் ரேய்னால்ட்ஸ்.
இவரது விண் கலத்தின் பெயர், Serenity. இவருடன் அந்த விண்கல ஓட்டுநராக ஹோபான் வாஷ்பர்ன், பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்யும் பொறியாளராக கேய்லீ என்கிற பெண், கேப்டனின் தளபதியாக, ஸோயி என்கிற பெண், விண்கலத்தின் பாதுகாவலனாக ஜேய்ன் காப் என்கிற அடியாள். இந்த ஐவருடன் முதல் எபிஸோடில் ஆறாவதாக வந்து இணையும் பெண்ணின் பெயர் இனாரா. இவர்கள் ஒரு குழு.
இந்த ஆறு பேருடன் முதல் எபிஸோடில் மேலும் மூன்று பேர் சேர்ந்துகொள்ள, அந்தக் குழுவில் பாதிரியார் ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். அவருக்கு நன்றாகத் துப்பாக்கிச் சுடத் தெரியும். தவிர, இவரின் அடையாளம் பற்றிய மர்மம் ஒன்றும் இருக்கிறது. அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபராக இவர் இருக்கிறார். இவர் யார்? இதுதான் இந்த சீரீஸின் பின்னணி.
ஒவ்வொரு எபிஸோடிலும் இந்த ஒன்பது பேர் அடங்கிய குழு சந்திக்கும் பிரச்சினை களை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை, நகைச்சுவை, ஆக்ஷனுடனும் சொல்லியிருக்கிறார் வீடன். இந்த சீரீஸை சுருக்கமாக வர்ணிக்க வேண்டும் என்றால், Westerns meet star trek என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், விண்வெளி, விண்கலம் என்றவுடனேயே நமக்கெல்லாம் நினைவுவரும் ஏலியன்கள் நல்லவேளை யாக இந்த சீரீஸில் இல்லை. எல்லாருமே மனிதர்கள் தாம். சீரீஸும் ஒருவித வெஸ்டர்ன் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம் – இந்த வெஸ்டர்ன்கள் நடப்பது விண்வெளியின் ஒரு பால்வீதியில். கதையில் என்ன நடக்கிறது, கதாபாத்திரங் களுக்கு இடையிலான உள் முரண்கள் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்.