உண்மையின் வலிமையும் உணர்ச்சியின் நாடகமும் | திரைப் பார்வை - மஞ்சும்மல் பாய்ஸ்

உண்மையின் வலிமையும் உணர்ச்சியின் நாடகமும் | திரைப் பார்வை - மஞ்சும்மல் பாய்ஸ்
Updated on
3 min read

ஒரு தமிழ்ப் படத்தைப் போல் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலை யாளத்தின் சூப்பர் ஸ்டார்களோ, ஸ்டார் இயக்குநர்களோ இல்லாத ஒரு படம்! அது கைக்கொண்ட கதைக்காக, புத்திசாலித்தனமான உருவாக்கத்துக்காக விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் நான்கு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம், 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் சமீப காலமாகச் சிறிய பட்ஜெட் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவருகின்றன. நட்சத்திர அந்தஸ்து சிறிது சிறிதாக மங்கி வருவதன் அறிகுறி இது. பெரும் பொருள் செலவில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எடுக்கப்பட்ட ‘மலைக்கோட்டை வாலிபன்’ பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரும் வரலாற்றுத் தோல்வியை அடைந்தது. அதே சமயத்தில் நஸ்லன், பபிதா பைஜூ போன்ற நடிகர்களை வைத்து கிரீஷ் ஏடி இயக்கிய ‘ப்ரேமலு’ மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த ராஜபாட்டையில் ‘மஞ்சும்மல் பாய்’ஸும் இணைந்துள்ளது.

உண்மையின் வலிமை: உண்மையான நிகழ்வுகளை சினிமாவாக ஆக்குவது மலையாள சினிமாவில் வெற்றிகரமான நுட்பம். ஓஜா போர்டு விளையாடும் இளைஞர்களைக் குறித்த அறிமுக இயக்குநர் ஜித்து மாதவனின் ‘ரோமாஞ்சம்’, 2018 கேரளத்தை உலுக்கிய வெள்ளப் பாதிப்பு குறித்த ஜூடு ஆண்டனி இயக்கிய ‘2018’, திருவனந்தபுரத்தில் நடந்த உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட மார்ட்டின் ப்ரக்காட்டின் ‘நாயாட்டு’, பழங்குடியினருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்துப் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சிறைபிடித்த அய்யங்காளி படையினரின் போராட்டம் குறித்த கமல் கே.எம்மின் ‘படை’ என இதற்குச் சமீபத்திய உதாரணங்கள் பல. சமகாலச் சம்பவங்களை ஒரு கலைப்படைப்பு பிரதிபலிக்க வேண்டும் என்கிற கருத்தியலின்படி பார்த்தால், மலையாள சினிமாவின் இந்தப் பாணி முன்னுதாரணம் கொள்ளத்தக்கது.

கேரளத்தின் பிரபலமான சூரிய நெல்லி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த லால் ஜோஸின் ‘அச்சனுறங்காத வீடு’, நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் காணாமல் போன தன் மகனைத் தேடி அலைந்த ஒரு தந்தை பற்றிய ஷாஜி என் கரூணின் ‘பிறவி’ போன்ற படங்களை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். சுவாரசியம் என்பதற்கு அப்பாற்பட்டு இந்தப் படங்கள் ஒரு சமூக நிகழ்வைப் பதிவுசெய்தவை.

பரதனின் பாதையில்... ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஒரு இக்கட்டிலிருந்து தப்பிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. 1990இல் பரதன் இயக்கத்தில் வெளிவந்த ‘மாளுட்டி’யை இதனுடன் ஒப்பிடலாம். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதுதான் கதை. முதல் ஒண்ணேகால் மணிநேரம் தம்பதியினரின் காதலை உணர்வுப் பூர்வமாகச் சொல்லியிருப்பார் பரதன். கூட்டுக் குடும்பத்தின் சிக்கலை, அதனால் அவர்கள் ஒரு தனியான வீட்டுக்கு இடம்பெயர்ந்ததைப் படம் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறது.

அம்மாவும் அப்பாவும் மாளுட்டி மீது கொண்டுள்ள அன்பும் காட்சியாக வெளிப்படுகிறது. அந்தக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததும் இந்த முழுச் சுமையும் பார்வையளார்களின் நெஞ்சில் இறங்கும். அந்தக் குழந்தை மீட்கப்படும் வரை தொடரும் இந்த நெஞ்சழுத்தம் விலகாது. ‘மஞ்சும்மல் பாய்’ஸும் இதே ரீதியில் பார்வையாளர்களைப் படத்துடன் இணைக்கும் சம்பவங்களுடன் பயணிக்கிறது.

எர்ணாகுளத்திலுள்ள மஞ்சும்மல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை அறிமுகப்படுத்திக்கொண்டு படம் தொடங்குகிறது. அவர்கள் வடம்வலி என்கிற கயிறு கட்டி இழுக்கும் போட்டியில் ஈடுபடுவர்கள் என்பதையும் படம் தொடக்கத்தில் சொல்லிவிடுகிறது. படத்தின் முதலில் நடக்கும் வடம்வலி போட்டியில் தோற்றுவிடுகிறார்கள் இந்த இளைஞர்கள். இந்த வடம்வலியை இதனுடன் இணைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனமான முடிவு. இந்த வடம்வலி படத்தின் பின்பகுதியைக் கட்ட உதவுகிறது.

ஜனரஞ்சக அணுகுமுறை: சௌபின் ஏற்றுள்ள கதாபாத்திர வடிவமைப்பின் வழி எளிய பார்வையாளர்கள் நுழைவுக்கான சாத்தியத்தை இயக்குநர் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார். இது ஒரு தமிழ்த் தன்மை. மலையாள சினிமா பல வருடங்களுக்கு முன்பே இதன் எதிர்த்திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

அதிர்ஷ்டவசமாக அதற்கு அங்கு வரவேற்பும் கிடைத் துள்ளது. ஆனால், இதன் இயக்குநர் சிதம்பரம், ஜனரஞ்சகம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இதைத் துணிச்சலாகக் கையாண்டுள்ளார். இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் ‘குணா’ படப் பாடல். கடந்த காலத்தை மீட்டும் உணர்வைத் திரையரங்கில் இந்தப் பாடல் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. காதலை, நட்புக்குமானதாக இந்தப் பாடல் வரிகளை இந்தப் படம் மாற்றியிருக் கிறது. சமூக வலைதளங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டதற்கும் இந்தப் பாடல்தான் பின்னணி.

மஞ்சும்மல் படம் தொடக்கத்தில் வெளிப்படுத்தும் இயல்பு, மலையாள சினிமாவுக்கே உரித்தானது. அந்த இயல்புடன் கதாபாத்திரங்களுக்குப் பார்வையாளர்களைக் கவரும் நாடகீயத்தைக் கொடுக்கும் வேலையை மேற்படியாக இயக்குநர் பார்த்திருக்கிறார். உதாரணமாக ஸ்ரீநாத் பாஸியின் கதாபாத்திரம் குழிக்குள் விழுவதற்கு முன்பே, இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தைத் தயார்படுத்திவிடுகிறார்.

அந்தக் கதாபாத்திரம் சுற்றுலாவுக்கு வர முதலில் மறுக்கிறது; அதுதான் குடும்பத்தின் மூத்த மகனாக இருக்கிறது. இது ஒருவகையில் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் என்பதை இயக்குநர் உணர்ந்திருக்கிறார். அதுபோல் பிரபல நகைச்சுவை நடிகர் சலீம்குமாரின் மகனான சந்து கதாபாத்திரம், நாத் பாஸி குழிக்குள் வீழ்ந்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோய் மீண்டும் எழும் காட்சி அவ்வளவு நம்பகமாக இல்லை.

தடுமாற்றங்களும் தாராளம்: ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். பாலு வர்கீஸ், ஜூனியர் லால், தீபக் உள்ளிட்ட பலரும் இயல்பாக நடித்திருப்பது இதன் மற்றொரு பலம். இன்னொரு பக்கம் தமிழ் நடிகர்களிடம் வேலை வாங்குவதில் இயக்குநர் கொஞ்சமும் மெனக்கெடவில்லை. வசனமும் நடிப்பும்கூட மலையாளமும் தமிழும் இயல்பும் நாடகீயமுமாக வெளிப்பட்டுள்ளன.

தமிழ்ப் படமான ‘அறம்’, ‘மாளுட்டி’ போன்ற படங்களில் குழந்தைத் தவறிப் போய் மூடாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது என்கிற வெள்ளந்தித்தனம் இருக்கிறது. இதில் ‘அற’த்துக்கு அரசியல் மூர்க்கமும் உண்டு. ஆனால், தடைச்செய்யப்பட்ட பகுதியில் போய் விழுந்த விடலைப் பையன் என்கிற பாதகமான அம்சம் இந்தப் படத்துக்கு உண்டு. ஆனாலும் படத்தைப் பார்வையாளர் களுடன் ஒன்றிணைக்க ஸ்ரீநாத் பாஸியின் பால்யக் காலத்துக்குச் செல்லும் கட் ஷாட்களை இயக்குநர் திறமையாகப் பயன் படுத்தியிருக்கிறார்.

விழுந்த பையனை எப்படியும் எடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு பாதியிலேயே வந்துவிடுகிறது. அதனால் சுவாரசியம் சில இடங்களில் குன்றிப் போகிறது. அதைச் சமாளிக்க தமிழகக் காவல் துறையினரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதையில் தடுமாற்றங்களும் இருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டி, மீட்கப்பட்ட பிறகு சௌபின் கதாபாத்திரம் வழி உருவாகும் உணர்ச்சி வசம் இது எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சமீபத்தில் தமிழ்ப் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்த படம். ஆனால், தமிழ், மலையாள சினிமாக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய படம் அல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in