

தேனிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வேலை வெட்டியின்றி திரியும் இளைஞன் விஜய் யேசுதாஸ். போலீஸானால், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்ற ஆசையில் தன் மாமா பாரதிராஜாவின் உதவியுடன் போலீஸ் வேலைக்குத் தேர்வாகிறார். அதே ஊரில், கைக்குழந்தையுடன் வாழும் கணவனை இழந்த பெண்ணை வேறு சாதி இளைஞர் விரும்புகிறார். இந்த விவகாரம் ஊருக்குத் தெரியவர, அந்த இளைஞர் கொல்லப்படுகிறார். ஊருக் குள் கலவரம் வெடிக்கிறது. அதை அடக்க வரும் போலீஸ் படையில் ஒருவராக விஜய் யேசுதாஸும் சொந்த ஊர் வருகிறார். தன் சாதி பாசத்தைத் தாண்டி, மனிதநேயத்தை ஊருக்குள் விதைக்க விரும்புகிறார். அதற்குப் பரிசாக அவருக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் ‘படைவீரன்’ படத்தின் கதை.
சாதி மோதல்கள், ஆணவக் கொலைகள் ஆகியவை சமீபகாலமாக திரைப்படங்களில் அதிகமாகப் பதிவாகத் தொடங்கியுள்ளன. அறிமுக இயக்குநர் தனா, இதை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களிடமும் சாதி உணர்வு எவ்வளவு ஆழமாக, தீவிரமாகப் பரவியிருக்கிறது என்பதை பதைபதைக்க வைக்கும் வகை யில் பதிவு செய்திருக்கிறார். ஒருவர் அரசு அதிகாரியாக தன் கடமையைச் செய்யும் பொருட்டு சுய சாதியையும், அதனால் கட்டவிழ்க்கப்படும் வன்முறையையும் எதிர்த்தால், நெருங்கிப் பழகியவர்களிடம்கூட எந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதையும் நன்கு பதிவு செய்கிறது படம். சாதி தலைவனின் ஒவ்வொரு அணுவிலும் சாதிய சிந்தனை எப்படி வெளிப்படுகிறது என்பதையும் தோலுரித்திருக்கிறார் இயக்குநர். ஆணவக் கொலைகளால் பாதிக்கப்படுகிற சாதியினரும் சம அளவில் வன்முறையாளர்களே என்பது போன்ற சித்தரிப்பைத் தவிர்த்திருக்கலாம்.
கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் யேசுதாஸ். நடிப்பிலும் குறை இல்லை. அழும் காட்சிகளில் மட்டும் அனுபவமின்மை தெரிகிறது. துணிச்சலும், துடுக்குத்தனமும் மிக்க கிராமத்துப் பெண்ணாக மனதைக் கவர்கிறார் அம்ருதா. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவராக வரும் பாரதிராஜா, மேல் சாதியினரின் சாதிய துவேஷங்களை எதிர்க்கிறார். ‘தலைவன் நல்லவனா இருந்தா, அவன் பின்னால் வருபவர்களும் நல்லவங்களா இருப்பாங்க’ என்பது போன்ற நறுக் வசனங்களைப் பேசி கவர்கிறார். சாதி தலைவராக வரும் கவிதா பாரதி, உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்காமல் நாசூக்காக சாதிய வன்மத்தைக் கட்டவிழ்த்துவிடுவதில் அபாரமாக நடித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி பெருமளவில் கலகலப்பாக நகர்கிறது. கிராமத்து சடங்குகள், வாழ்க்கை முறை ஆகியவை விரிவாகக் காட்டப்படுகின்றன. இருந்தாலும், கதை எப்போது தொடங்கும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. நாயகன் - நாயகி காதல் காட்சிகள் அழகாக, ரசிக்கும்படி இருக்கின்றன. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா, காதல் காட்சிகளை அழகியலுடன் படமாக்கிய விதத்தில் தன் குருநாதரைப் பிரதிபலிக்கிறார்.
ஆனால், திரைக்கதை சீரியஸாக நகரும்போது, பாட்டு வந்து தொய்வை ஏற்படுத்துகிறது. மையக் கதையுடன் அவ்வளவாக தொடர்பில்லாத காதல் காட்சிகளையும் சற்று குறைத்திருக்கலாம்,
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், எழுந்துபோகும் அளவுக்கு மோசமாகவும் இல்லை. தேனி மாவட்ட கிராமங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜவேல் மோகன்.
சாதிக்குள் ஒளிந்திருக்கும் குரூர மனித உணர்வுகளை சொல்லிய விதத் தில் சில குறைகளைத் தவிர்த்திருந்தால், ‘படைவீரன்’ இன்னும் மிடுக்காக இருந்திருப்பான்.