

தமிழில் பேசுவேன்
‘காற்று வெளியிடை’ படத்தின் கதாநாயகி அதிதி ராவ் மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். கடும் சர்ச்சைகளுக்குப் பின் வெளியாகி வெற்றிபெற்ற ‘பத்மாவத்’ படத்தில் குறைந்த அளவே தோன்றினாலும் ரசிகர்கள் பாராட்டு அளித்துவருவதற்கு நன்றி தெரிவித்திருக்கும் அதிதி, “ ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன்.
இப்போது ஓராண்டு நிறைவடையும் முன்பே அவரது இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது வாய்ப்பு அமைந்துவிட்டது. இப்புதிய படம் ‘காற்று வெளியிடை’ போல இது நிச்சயம் இருக்காது. இதில் எனது சொந்தக் குரலில் தமிழ் வசனங்களைப் பேசுவேன்.
தமிழ் மொழியை விடா முயற்சியுடன் கற்றுக்கொண்டேன், ஆனால் எதிர்பாராமல் எனக்கு டப் செய்யப்பட்டது. இம்முறை எனது சொந்தக் குரலில் பேசுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
விடுமுறை வேட்டை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘2.0’ படமே முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ‘காலா’ முந்திக்கொண்டிருக்கிறது. வரும் சித்திரைத் திருநாள் விடுமுறை வெளியீடாக ஏப்ரல் 27 –ம் வெளியாகும் ‘காலா’, மே-1 அன்று தொழிலாளர் தினம்வரை தொடர்ச்சியாக வரும் ஐந்து விடுமுறை நாட்களிலும் வசூல் வேட்டை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘காலா’வை வெளியிடுகிறார்களாம்.
முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் இனிப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தனது ஹார்வர்டு பல்கலைக் கழக உரையில் அறிவித்திருக்கும் கமல், தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தையும் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ‘காலா’வும் ‘விஸ்வரூபம் 2’ ஆகிய இரண்டு படங்களும் மோதுமா விஸ்வரூபம் விலகுமா என்பதை கமல் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
துல்கர் - 25
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ்ப் படமாக அமைந்திருக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி என்ற புதியவர் இயக்கிவருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துவருகிறார். பயணம் சார்ந்த காதல் கதை என்பதால் சென்னை, புனே மற்றும் கோவா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர்.
அஞ்சு குரியன் அடுத்து
‘நளனும் நந்தினியும்’, ‘சுட்டகதை’ படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தற்போது தயாரித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.
கார்த்திக் சுப்பராஜிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த விஜயராஜ் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாள நாயகன் ஆதில் தமிழில் அறிமுகமாகிறார். திரையுலகுக்குக் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் அறிமுகமான அஞ்சு குரியன் நடிக்கிறார்.
காவல் அதிகாரி !
விஜய் ஆண்டனி காக்கிச் சீருடை அணிந்து காவல் அதிகாரியாக நடிக்கும் கதையைத் தேர்வு செய்துவிட்டார். கணேஷா என்ற புதியவர் இயக்கும் படத்துக்கு ‘திமிரு புடிச்சவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும் இதில் காவல் அதிகாரி வேடம். அந்த வேடத்தை ஏற்க இருப்பவர் நிவேதா பெதுராஜ். கதாநாயகிக்குச் சீருடை அணிவித்து சோதனை படப்பிடிப்பு நடத்தியபிறகே சம்மதம் சொன்னார்களாம். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட வாழ்க்கையையும் அங்கே வரும் ஒரு வழக்கையையும் மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் இயக்குநர்.
கோலிவுட்டின் மிக இளவயது இயக்குநரான கார்த்திக் நரேனின் அறிமுகப்படமான ‘துருவங்கள் பதினாறு’ 100 நாட்கள் ஓடி வெற்றிகண்டது.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அவரது இரண்டாவது படம் ‘நரகாசுரன்’, விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்தை அறிவித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
அதற்கு ‘நாடக மேடை’ என தலைப்புச் சூட்டியிருக்கிறார். இம்முறை க்ரைம், த்ரில்லர் என்ற பாதையிலிருந்து விலகி குடும்பப் படமாக இதை இயக்க இருக்கும் இவர், இதற்காகச் சொந்தப் பட நிறுவனம் தொடங்கியிருக்கிறார்.