Published : 18 Feb 2018 02:48 AM
Last Updated : 18 Feb 2018 02:48 AM

திரை விமர்சனம்: வீரா

ன் ஏரியாவில் உள்ள மனமகிழ் மன்றத்தின் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கிருஷ்ணா. நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து அதற்கான திட்டங்களை வகுக்கிறார். ஏரியாவில் உள்ள மற்றொரு ரவுடியும், ஏற்கெனவே மனமகிழ் மன்றத்தின் தலைவருமான கண்ணா ரவி இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் ஊரில் ரவுடிகளுக்கு திட்டங்களை வகுத்துக்கொடுப்பதில் கில்லாடியாக இருந்த தம்பி ராமையாவிடம் கிருஷ்ணாவும், கருணாவும் யோசனை கேட்கின்றனர். அவர்கள் இருவரையும் ஏரியாவின் முன்னாள் ரவுடியான ராதாரவியிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார் தம்பி ராமையா. இருவரும் பயிற்சி பெற்று திரும்பியதும் ரவுடி கண்ணா ரவியை தீர்த்துக்கட்டிவிட்டு மன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர திட்டம் வகுக்கிறார்கள். அந்தத் திட்டத்தால் அவர்கள் மேலும் சில ரவுடிகளிடம் சிக்குகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? கிருஷ்ணா ஆசைப்பட்டதுபோல மன்றத் தலைவர் பொறுப்பு கிடைத்ததா? என்பது மீதிக் கதை.

வடசென்னையை ரவுடிகளின் பிறப்பிடமாகக் காட்சிப்படுத்தும் மற்றுமொரு படமாக வந்திருக்கிறது ‘வீரா’. வடசென்னை பற்றியும் அங்கு வாழும் மக்கள் பற்றியும் நேர்மறை யான சித்தரிப்புகள் வரத் தொடங்கியிருக்கும் காலத்தில், மீண்டும் பின்னோக்கிப் போகவேண்டுமா என்பதை கதாசிரியர் பாக்கியம் சங்கர், இயக்குநர் ராஜாராமன் யோசித்திருக்கலாம்.

வடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடியிஸப் படக் காட்சிகளையே வேறு வடிவத்தில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது முதல் முக்கால் மணிநேரக் காட்சிகள். நாயகனும், நண்பனும் ’தொழில்’ கற்றுக்கொள்ளச் செல்லும் இடத்தில் இருந்து படம் சற்று சூடுபிடிக்கிறது. அங்கிருந்து சில திருப்பங்களும், சில சுவாரசியமான கதாபாத்திர வார்ப்புகளும் இரண்டாம் பாதியின் ஒரு கட்டம் வரை படத்தை வேகமாக நகர்த்திச் செல்கின்றன. குறிப்பிட்ட கட்டத்துக்கு பிறகு, நாயகனுக்கு சாதகமாகவே அனைத்து விஷயங்களும் நடப்பது நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதோடு, சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

ஒரு ரவுடிக்கு பின்னால் இன்னொரு ரவுடி, அவர்கள் வழியே அரசியல் புள்ளிகள் உருவாவது, அவர்களை வீழ்த்த இன்னொரு கும்பல் உருவெடுப்பது என்று ரவுடி சாம்ராஜ்ஜியத்தை திரைக்கதையில் பின்னிய விதம் சிறப்பு. ஆனால், அதை கதாபாத்திர அமைப்பில் பிரதிபலிக்க வைத்ததில் நிறைய சிக்கல்கள். குறிப்பாக, நாயகன் கிருஷ்ணா அமெச்சூர் ரவுடியாக வரும்போது அடிதடி, வெட்டுக் குத்து என்று ஈடுபடுவதுபோலவே, முழு ரவுடியாக பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகும் செய்கிறார். விறுவிறுவென நகரவேண்டிய திரைக்கதைக்கு இது முட்டுக்கட்டை போடுகிறது. அதோடு, ராதாரவியை கொல்ல கிருஷ்ணா, கருணாகரன் வகுக்கும் திட்டமும், அதை செயல்படுத்தும் விதமும் காமெடியாக இருக்கிறது.

நாயகி ஐஸ்வர்யா மேனன் தனக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்த அரங்கேற்றும் சின்னச் சின்ன அம்சங்கள் நிறைவைத் தந்தாலும், நினைத்தவுடன் வீட்டில் இருந்து தப்பிப்பது, கிருஷ்ணாவுடன் காதல், சிறையில் உள்ள வில்லன் சரண்தீப்பிடம் பேசும் வீர வசனம் இதெல்லாம் காட்சியில் ஒன்றவில்லை. சிறையில் இருந்துகொண்டே சரண்தீப் முன்னெடுக்கும் செயல்கள், நினைத்ததும் வெளியே வந்து அடிதடியில் இறங்குவது ஆகியவையும் படத்துக்கு பலவீனமாகவே உள்ளது.

ஐஸ்வர்யா மேனன், ராதாரவி, யோகிபாபுவின் கதாபாத்திரங்கள் சற்று புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே படத்தின் சுவாரசியத்துக்கும் உதவுகிறது. ரவுடியிஸப் படம் என்றாலும் அதீத வன்முறை, ரத்தம் தெறிப்பது போன்றவை இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியது.

கிருஷ்ணா, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் அந்நிய வாடை அடிக்கிறது.

தந்தையைத் தட்டிக் கேட்கும் காட்சியிலும் பெரிய ரவுடியிடம் போனில் கெத்தாகப் பேசும் காட்சியிலும் அசரவைக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

கருணாகரன் காமெடியைத் தாண்டிய நடிப்பும் தனக்கு வரும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ராதாரவி சிறிய வேடத்திலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. ரவுடியிஸத்தைக் கைவிட்டு குடித்துக்கொண்டு திரிபவராக வரும் தம்பி ராமையா ஈர்க்கிறார். யோகிபாபுவும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் மனதில் தங்கவில்லை. குமரன் - விக்னேஷ் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி போன்ற செயலில் ஆதிக்க மனநிலை உருவாவதற்கு மனமகிழ் மன்றங்கள் எந்த வகையில் ஊன்றுகோலாக இருக்கிறது என்பதை, இன்னும் வீரம் புடைத்த பின்னணியில் பிரதிபலித்திருந்தால் இந்த ‘வீரா’ மனதைத் தொட்டிருப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x