

ஒரு தேசத்தைப் பூகோள ரீதியாக இணைப்பவை நெடுஞ் சாலைகளும் இருப்புப் பாதைகளும்தான். ஆனால், முன்னொரு காலத்தில் இவை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மனித வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? குறிப்பாக, ஒரு நாட்டைக் கிழக்கிலிருந்து மேற்காக இணைக்கும் ஒரு மிகப்பெரிய ரயில் பாதை முதல் முறையாக திட்டமிடப்பட்டு அதை உருவாக்கி வந்த நேரத்தில்?
இதுவரை நான் பார்த்த சீரீஸ்களிலேயே இப்படி ஒரு வெறித் தனமான சீரீஸ் இல்லை என்றே சொல்லவேண்டும். காரணம், இதில் சொல்லப்படும் வாழ்க்கை மிகக் கடினமானது. நிலையில்லாத தன்மை உடையது. அதேசமயம் மிகப் பிரம்மாண்டமான ஒரு கதைக் களப் பின்னணி. அதில் கௌபாய்கள், செவ்விந்தியர்கள் என்று உண்மையாக நடந்த எண்ணற்ற சம்பவங்கள் உண்டு.
உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போர் (Civil War) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1861 முதல் 1865 வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் எப்படிப்பட்டது? ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தலைமையில் வடக்கு மாநிலங்களுக்கும் (யூனியன்), அடிமைத்தனத்தைப் பாதுகாத்து, அதை அரசின் இறையாண்மை - அடிப்படை உரிமை என்று பிரகடனம் செய்த தென் மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையேயான மோதலாக இருந்தது.
மாநிலங்களின் உரிமைகள், பொருளா தார வேறுபாடுகள் ஆகியவற்றுடன் அடிமைத்தனத்தை உரிமையாக்கி அதை வைத்துப் புதிய பிரதேசங்களை உருவாக்கி விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தூண்டப்பட்ட போர் இது. பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தியது.
போரின் இறுதியில் ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான யூனியன் வெற்றியடைந்தது. இது புகழ்பெற்ற ‘விடுதலைப் பிரகடன’த்தை உருவாக்கி (Emancipation Proclamation) அடிமைத்தனத்தை ஒழித்தது. இறுதி யில் பிரிந்து கிடந்த அமெரிக்காவை மீண்டும் ஒன்றிணைத்தது.
இந்தப் போரில் ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் போரிட்ட வர்கள் யூனியன் படையினர் என்று அழைக்கப்பட்டனர். அடிமைத் தனத்தை வலியுறுத்தி அதற்காகப் போரிட்ட தென் மாநிலங்களின் படையினரை கான்ஃபெடரேட்கள் (Confederates) என்று அழைத்தனர். இறுதியில் கான்ஃபெடரேட்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டது வரலாறு.
தேசத்தை இணைத்த ரயில்: ஆபிரகாம் லிங்கன் இந்த உள்நாட்டுப் போரின் இறுதியில் சுடப்பட்டு மரணமடைந்தார். அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக் காவைக் கிழக்கிலும் மேற்கிலும் ஒன்றிணைக்கும் ஒரு மிகப்பெரிய ரயில்பாதைத் திட்டம் செயல்படத் தொடங்கியது. Western Pacific, Central Pacific
தேசத்தை இணைத்த ரயில்: ஆபிரகாம் லிங்கன் இந்த உள்நாட்டுப் போரின் இறுதியில் சுடப்பட்டு மரணமடைந்தார். அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக் காவைக் கிழக்கிலும் மேற்கிலும் ஒன்றிணைக்கும் ஒரு மிகப்பெரிய ரயில்பாதைத் திட்டம் செயல்படத் தொடங்கியது.
Western Pacific, Central Pacific & Union Pacific ஆகிய மூன்று நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு 2 ஆயிரம் மைல் (மூவாயிரம் கிலோ மீட்டர்கள்) நீளத்துக்கு ரயில்பாதையை அமைத்துக் கொண்டிருந்த தருணம் அது. அதுவரை இந்தப் பாதைகளை ஒன்றிணைக்கும் ரயில் திட்டங்கள் இல்லவே இல்லை. எனவே காடுகள், மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்கு கள் ஆகியவற்றை முறையாக அளந்து, ஒவ்வொரு அடியாக இரும்புத் தண்ட வாளங்கள் முதன் முறை யாகப் பல பிராந்தியங் களில் இந்தச் சமயத்தில் தான் போடப்பட்டன. 1865களில் இவ்வளவு நீளமான ரயில்பாதை ஒன்றை அமைக்க வேண்டும்
என்றால் எப்படி இருக்கும்?
அப்போதைய வழக்கப்படி கிழக்கி லிருந்து மேற்காக யூனியன் பசிபிக் நிறுவனமும் (1085 மைல்கள்), மேற்கில் இருந்து கிழக்காக செண்ட்ரல் பசிபிக் நிறுவனமும் (690 மைல்கள்) போட்டி போட்டுக்கொண்டு மிகவேகமாக ரயில்பாதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு அடிக்கும் ஏராளமான பணம். இதனால் யார் முதலில் பாதையை முடிப்பது என்பதில் இரண்டு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய போட்டி இருந்தது. இந்த இரண்டு பாதைகளும் யூடா (Utah) மாநிலத்தில் Promonitory Summit என்ற இடத்தில் ஒன்றுசேர்ந்தன. இந்த சம்பவம் The Last Spike Ceremony என்று சரித்திரப் புகழ்பெற்றது.
பழிவாங்கப் புறப்பட்ட நாயகன்: இந்தத் தண்டவாள வேலையில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். சீனா, அயர்லாந்து போன்ற நாடுகளின் மக்களே வேலை செய்வதற்கு மிகக் குறைந்த ஊதியத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இப்படி ஒரு மிகப் பிரம்மாண்டமான ரயில்பாதை உருவாக்கப்பட்டு வந்த காலகட்டத்தைப் பின்னணியாக வைத்து ஓர் அட்டகாசமான வெஸ்டர்ன் சீரீஸ் எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஹெல் ஆன் வீல்ஸ்’ (Hell on Wheels). ‘Hell on Wheels’ என்றால் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஊர் என்று பொருள்.
தண்டவாளங்கள் நடப்பட்டுக்கொண்டிருக்கும்போதே கூடாரங்களில் கடைகள், மதுபானக் கடைகள் (இவை சலூன்கள் என்று அழைக்கப்பட்டன), சூதாட்ட விடுதிகள், வீடுகள், தொழிலாளர்கள் தங்கும் இடங்கள், அவர்களுக்கான பாலியல் தேவைக்காகவே உருவாக்கப்பட்ட இடங்கள் ஆகியவை தற்காலிகமாக உருவாக்கப்படும். தண்டவாள வேலை கிழக்கிலிருந்து மேற்காகவும் மேற்கிலிருந்து கிழக்காகவும் நகர்ந்து கொண்டு போகும்போது இவையும் கூடவே இடம்பெயரும். இவைதான் ‘Hell on Wheels’.
இந்த சீரீஸின் கதாநாயகனின் பெயர் கல்லன் போஹேன்னன் (Cullen Bohannen). இவன் தெற்கத்திய மாகாணங்களுக்காக உள்நாட்டுப் போரில் அடிமைத்தனத்துக்கு ஆதரவாகப் போரிட்டவன். போரில் தோற்றதும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பவன். ஏன் அலைகிறான் என்றால், அந்தப் போரில் அவனது மனைவியை யூனியன் என்று சொல்லப் படும் ஆப்ரஹாம் லிங்கனின் கீழ் போரிட்டு வென்ற ராணுவ வீரர்களில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கின்றனர்.
வெறியுடன் அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். கிழக்கிலிருந்து மேற்கே தண்டவாளங்கள் போட்டுக் கொண்டிருக்கும் யூனியன் பசிஃபிக் நிறுவனத்தார் தற்காலிகமாக உருவாக்கிய Hell on Wheels என்கிற சிறு நகரத்துக்கு வந்து சேர்கிறான். மனைவியைக் கொன்றவர்களில் ஒருவன் வேறு பெயரில் இங்கே ஒளிந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்ததால் இங்கே வந்திருக்கிறான்.
5 சீசன்கள் 57 எபிசோட்கள்: அவன் இந்தத் தற்காலிக நகரத்துக்கு வந்த தருணத்திலிருந்து சீரீஸ் தொடங்குகிறது. ஆறு வருடங்களில் (1863-1869), மொத்தம் ஐந்து சீசன்கள். 57 எபிசோடுகள். இறுதியில் ரயில்பாதை அமைக்கப்பட்டு முடிகிறது. இந்த ஆறு வருடங்களில் மனைவியின் கொலைகாரர்களைத் தேடும் கல்லன் போஹேன்னனின் பயணம் எப்படி யெல்லாமோ சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த ரயில்பாதையி னுடனேயே பயணிக்கிறது.
எவ்வளவோ கதாபாத்திரங்களைச் சந்திக்கிறான். அமெரிக்க சரித்திரத்தில் நீங்காப் புகழ்பெற்ற பல மனிதர்களில் சிலரான யுலிசிஸ் கிராண்ட் (இவர் ஆபிரகாம் லிங்கனின் தளபதி. லிங்கனுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியும் ஆனவர்), தாமஸ் டுராண்ட் (யூனியன் பசிஃபிக் ரயில் நிறுவனத்தின் தலைவர்.
இன்றும் பலரால் நினைவுகூரப்படுபவர். லயன், முத்து போன்று தமிழில் வெளியான கௌபாய் காமிக்ஸ் புத்தகங்களில் பிரதானமாக வருபவர்), ஜான் கேம்ப்பெல் (வயோமிங் பிரதேசத் தின் முதல் ஆளுநர்), பிரிகம் யங் (மிகப் புகழ்பெற்ற மோர்மோன்களின் Later day Saints அமைப்பின் தலைவர்) ஆகியோர் இவர்களில் சிலர்.
இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரீஸ் இதுவரை வந்ததில்லை என்கிற அளவுக்குப் புகழ்பெற்ற இந்த சீரீஸ் மூலம், அமெரிக்கா மெல்லமெல்ல உள்நாட்டுப் போரின் பின்னால் வளர்ந்த கதையை சுவாரஸ்யமாக அறிந்துகொள்ளலாம். சற்றும் அலுக்காத திரைக்கதை ஐந்து சீசன்களையும் பார்க்கும் பொறுமையை நமக்குக் கொடுத்துவிடும். இதில் கதாநாயகனாக நடித்த Anson Mount உலகப் புகழ்பெற்றார். ஆறு ‘இணைந்த கை’களைப் ஒன்றாகப் பார்த்தால் எப்படி இருக்குமோ அதுதான் ‘ஹெல் ஆன் வீல்ஸ்’.